அடுத்த ஆண்டு ஜனவரியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் என்ற நிலையில், நீதிமன்ற உத்தரவு காரணமாக அதற்கு முன்னர் புதிய கட்சிகள் எதனையும் பதிவு செய்ய முடியாது எனத் தேர்தல் திணைக்களம் கைவிரித்து விட்டது. அதேசமயம், இன, மத, ரீதியிலான பிளவுகளை வெளிப்படுத்தி நிற்கும் 'தமிழ்', 'முஸ்லிம்', 'ஹெல' போன்ற சொற்களுடன் புதிய கட்சியைப் பதிவு செய்வதற்கு விண்ணப்பிப்பதைத் தவிர்க்குமாறும் தேர்தல் திணைக்களம், புதிய கட்சிகளைப் பதிவுசெய்ய விண்ணப்பிப்போருக்கு அறிவுறுத்தல் வழங்கவிருக்கின்றது.இந்த அறிவுறுத்தலுக்கு அமைவாக, மேற்படி சொற்களைக் கொண்ட - ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட - கட்சிகளும் தமது பெயர்களில் இருந்து அந்தச் சொற்களை நீக்கும்படி கோரப்படும் என்றும் தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.
|
2012 மார்ச் 24 ஆம் திகதி ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுடன் சேர்த்து புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கும் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் திணைக்களம் அறிவித்தல் வெளியிட்டு, வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொண்டிருந்தது. எனினும் தாங்கள் மீள்குடியேற்றப்படாத நிலையில் அந்த இரண்டு பிரதேச சபைகளுக்கும் தேர்தல்கள் நடத்தப்படக்கூடாது என அச்சமயம் மெனிக்பாம் முகாமில் தங்கியிருந்த இருவர் வழக்குத் தாக்கல் செய்தனர். அந்த வழக்கை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்த இரண்டு பிரதேச சபைகளுக்குமான தேர்தல்களை நடத்துவதை இடைநிறுத்தி உத்தரவிட்டது.
இதன் காரணமாக தேர்தல் திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட தேர்தல் ஒன்று இன்னும் நடாத்தப்படாமல் நிலுவையில் உள்ளது. ஒரு தேர்தல் அறிவிக்கப்பட்டால் அது நடத்தி முடிக்கப்படும் வரையான காலத்தில் புதிய கட்சிகள் எதனையும் தேர்தல் திணைக்களம் புதிதாகப் பதிவு செய்ய முடியாது என்ற சட்ட விதி இருப்பதால், மேற்படி இரு உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல்கள் உத்தியோகபூர்வமாக நிறைவடையும் வரை புதிய கட்சி எதனையும் பதிய முடியாது எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்த இழுபறியால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாகப் பதிவு செய்வதும் தொடர்ந்து இழுபறிப்படும் எனக் கூறப்படுகின்றது. இன, மொழி ரீதியான பிளவுகளைக் காட்டும் பெயர்களை புதிய கட்சிப் பெயர்ப் பதிவின்போது தவிர்க்கும்படியான தேர்தல் திணைக்களத்தின் உத்தரவு 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு' என்ற பெயரைப் பதிவு செய்வதிலும் சிக்கலை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகின்றது.
|
0 Comments