Advertisement

Responsive Advertisement

நரேந்திர மோடியின் வெளியுறவு ஆலோசகராக ஜெய்சங்கர்? - இலங்கை விவகாரத்தில் பரிச்சயமானவர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவு விவகாரங்களுக்கான ஆலோசகராக அமெரிக்காவுக்கான இந்திய தூதரான சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இவர் இந்திரா காந்தி காலத்தில் இலங்கைக்கான சிறப்பு பிரதிநிதியாக இருந்த ஜி. பார்த்தசாரதியின் கீழ் பணிபுரிந்தவர்.முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் இலங்கை விவகாரங்களுக்கு என்று தனியே பார்த்தசாரதி என்ற அதிகாரி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். அதைப் போல பிரதமர் நரேந்திர மோடியும் தமது சிறப்பு பிரதிநிதி ஒருவரை இலங்கை விவகாரங்களுக்கு என நியமிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன.


இந்நிலையில் ஒட்டுமொத்த வெளியுறவு விவகாரங்களுக்கு என தனியே ஒரு ஆலோசகரை நியமிக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. தற்போது அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இருக்கும் சுப்பிரமணியம் ஜெய்சங்கரை மோடி தமது ஆலோசகராக நியமிக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.ஓரிரு நாட்களில் இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகலாம் என்கின்றன டெல்லி தகவல்கள்.
சுப்பிரமணியன் ஜெய்சங்கர் டெல்லியில் பிறந்த ஜெய்சங்கரின் தந்தை மத்திய அரசு ஊழியரும் அரசியல் விமர்சகருமான கே.சுப்பிரமணியத்தின் மகன். அவரது சகோதரர் சஞ்சய் சுப்பிரமணியன் வரலாற்று ஆய்வாளர்.1977ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுத் துறையில் இணைந்தார் ஜெய்சங்கர் சுப்பிரமணியம். 1979 ஆம் ஆண்டு முதல் 1981ஆம் ஆண்டு வரை சோவியன் யூனியனுக்கான இந்திய தூதரகத்தில் அதிகாரியாக பணியாற்றினார்.
பின்னர் இந்திரா காலத்தில் இலங்கைக்கான சிறப்பு பிரதிநிதியாக இருந்த ஜி. பார்த்தசாரதிக்கு சிறப்பு உதவியாளராக இருந்தார். அதைத் தொடர்ந்து 1989- 90ஆம் ஆண்டு இலங்கையில் நிலை கொண்ட இந்திய அமைதிப்படையின் அரசியல் ஆலோசகராக இருந்தார். அதன் பின்னர் ஜப்பான், சீனா நாடுகளுக்கான தூதராக இருந்த சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தற்போது அமெரிக்காவுக்கான இந்திய தூதராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments