பாதல் சிங் (கவுகாத்தி): என் மனைவியின் தங்கை பெங்களூரில் சாப்ட்வேர் இன்ஜினியர். அவருக்கு, அமெரிக்காவில் வேலை கிடைத்ததால் அவரை வழியனுப்ப வந்தேன். அவரை அனுப்பிட்டு அசாம் மாநிலம் முர்ரிகான் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்குச் செல்ல முன்பதிவு செய்திருந்தோம். ஆனால் எனக்கு எஸ்.4 பெட்டியில் ஆர்ஏசி 63தான் கிடைத்தது. உட்கார்ந்தபடியே பயணம் செய்தேன். சென்ட்ரல் வந்தபிறகு, எதிரில் உட்கார்ந்திருந்தவர் இறங்கியதால் கொஞ்ச நேரம் படுக்கலாம் என்று படுத்தேன். அதற்குள் குண்டு வெடிக்கும் சத்தம். எனக்கு காலில் காயம் ஏற்பட்ட பிறகுதான் அதன் தீவிரம் தெரிந்தது. எதிர் திசையில் தலை வைத்து படுத்திருந்தால் உங்களுடன் இப்போது பேசிக் கொண்டிருக்க முடியாது.
மிஜருல்லா (காட்பாடி) : நான் என்னுடைய நண்பர்கள் 6 பேருடன், காட்பாடியில் உள்ள ஷூ’ கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகின்றேன். நாங்கள் 7 பேரும் எங்களுடைய உறவினர்களை பார்ப்பதற்காக கவுகாத்தி சென்று கொண்டிருக்கிறோம். இன்று (நேற்று) காலை, சென்னை வந்த 10வது நிமிடத்தில் எங்களது எஸ்.4 பெட்டியில் பயங்கர சத்தத்துடன் கூடிய வெடிகுண்டு வெடித்தது. அப்போது அருகிலிருந்த பலர் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்தனர். எனக்கும் கைகளிலும் கால்களிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் எனக்கு எந்த வித முறையான முதலுதவி சிகிச்சை இதுவரை அளிக்கப்படவில்லை. என்னுடைய சொந்த ஊருக்கு சென்றே சிகிச்சை மேற்கொள்ள போகிறேன்.
ரமணி (பெங்களூர்): நான், பெங்களூரில் இதே ரயிலில் எஸ்&6 பெட்டியில் ஏறினேன். கவுகாத்திக்கு செல்கிறேன். ரயில் நிலையத்தில் நின்ற சிறிது நேரத்தில், பெரும் சத்தம் கேட்டது. 2வது முறையும் பெரும் சத்தம் கேட்டது. ரயில்கள் பெட்டிகள் அதிர்ந்தன. இதனால் நாங்கள் முண்டியடித்து வெளியே வந்தோம். அப்போது பிளாட் பாரம் முழுவதும் ரத்தமாக இருந்தது. பதட்டத்துடன் ஆங்காங்கே கூச்சலுடனும், குழப்பத்துடனும் மக்கள் சிதறி ஓடியபடி இருந்தனர். பின்னர் குண்டு வெடித்தது தெரிந்தது.
போர்ட்டர் பாலா: காலையில் வழக்கம்போல் நாங்கள், ரயில்களின் வருகைக்காக காத்திருந்தோம். அப்போது துப்பாக்கி குண்டு வெடித்தது போல பயங்கர சத்தம் ஏற்பட்டது. பதறியடித்து கொண்டு சத்தம் வந்த பக்கம் ஓடினோம். அங்கு பெங்களூர்&கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ்4, எஸ்5 பெட்டிகளில் குண்டு வெடித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட, பயந்துபோன பயணிகளின் அலறல் சத்தம் கேட்டது. நாங்கள் உள்ளே சென்று பார்த்தோம். ஒரு இளம்பெண் அங்கு உடல்சிதறி இறந்து கிடந்தார். 4 பேர் காயத்துடன் மயங்கியிருந்தனர். அவர்களை நாங்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவினோம் என்றார்.
ரயில் குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்கள்
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்கள் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விசாகப்பட்டினத்தை சேர்ந்த முரளி (27), பிகாரை சேர்ந்த ஹரி (21), மேற்குவங்கத்தை சேர்ந்த விமல்குமார்தாஸ் (43), சபுன் குமார் ராய் (23), முகம்மது சரிபுல் ஹாக் (27), ஜல்பய்குரியை சேர்ந்த சரண் பர்மன் ராய்(23), மணிப்பூரை சேர்ந்த அல்தாப் கான் (17), பிஜயன் குமார் (14), அசாமை சேர்ந்த உம்மா அனி (பெண் 40), பெங்களூரை சேர்ந்த ஜிதேந்தர்ராவ் (51), வட திரிபுராவை சேர்ந்த சதன் சந்திர தர்மன் (64), ஆந்திராவை சேர்ந்த ஆஞ்சநேயலூ (29) ஆகிய 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர, சதன் மூர்மாரா, குமாரி, சுமந்த் தேவநாத் ஆகியோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெயரை தவிர இந்த மூவரை குறித்த வேறு விவரங்கள் தெரியவில்லை. இவர்களை தவிர அடையாளம் தெரியாத ஒருவரும் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரயில் நிலைய வெடிகுண்டு5 பிரிவில் வழக்குபதிவு
சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசார் கவுகாத்தி ரயிலில் குண்டு வெடித்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். ரயில்நிலைய துணை மேலாளர் பாலசுப்ரமணியம் கொடுத்த புகாரின் அடிப்படையில், ரயில்வே டிஎஸ்பி தில்லை நடராஜன், வழக்கு எண், 273/2014, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 345, 382, 324, 326, 307 ஆகியவற்றின் கீழும், ரயில்வே சட்டம் பிரிவு 151ன் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கு உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.உதவி மையம்: கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடிப்பை அடுத்து பயணிகள் விவரங்களை தெரிந்துக் கொள்வதற்கு வசதியாக தெற்கு ரயில்வே 044&2535 7398 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
ஸ்வாதி குடும்பத்துக்கு ரயில்வே சார்பில் 1 லட்சம் நிதி
ரயில் குண்டுவெடிப்பு தொடர்பாக ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுனா கார்கே கூறியதாவது: சென்ட்ரல் ரயில்நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் ஸ்வாதி என்ற 24 வயது பெண் பலியாகியுள்ளார். அவர் பெங்களூரிலிருந்து விஜயவாடாவுக்கு செல்லும் பயணியாக இந்த ரயிலில் வந்துள்ளார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ரயில்வே சார்பில் 1 லட்சம் தரப்படும். இந்த சம்பவத்தில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களுக்கு தலா 25 ஆயிரம் தரப்படும். 7 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு தலா 5 ஆயிரம் தரப்படும். அவர்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் ரயில்வே நிர்வாகம் சார்பில் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மோடியை மிரட்ட நடந்தகுண்டு வெடிப்பு?
ஆந்திராவில் மோடி பிரசாரம் செய்ய காரில் செல்லும் நேரத்தில், அவருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆந்திராவில் நடைபெறும் பொதுத் தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் வந்தார். திருப்பதியில் நேற்று முன்தினம் இரவு நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். நேற்றுக் காலை, திருப்பதி கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டார்.
பின் அங்கிருந்து காளகஸ்திக்கு சென்றார். அங்கு சாமி கும்பிட்டு விட்டு, மதனபள்ளியில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.நரேந்தி மோடி, திருப்பதியில் இருந்து காளகஸ்திக்கு கார் மூலமாக சென்றார். அந்த நேரத்தில், சென்னையில் குண்டு வெடித்தது. சம்பவத்துக்குள்ளான ரயில், பெங்களூரில் இருந்து நேற்று இரவு புறப்பட்டது. இன்று (நேற்று) காலை 5.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரவேண்டும். பின் 6.20 மணிக்கு புறப்பட்டு, கும்மிடிப்பூண்டி சூளூர்பேட்டை தடா, கூடூர், நெல்லூர் வழியாக ஓங்கோல் செல்லும்.
சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குப் பிறகு, ஓங்கோலில்தான் நிற்கும். அதேநேரத்தில், குண்டு வெடித்த நேரமான 7.10 மணிக்கு, அந்த ரயில், கூடூருக்கும், நெல்லூருக்கும் இடையில் சென்று கொண்டிருக்கும். தாமதமாக வந்ததால், சென்ட்ரலில் நின்றது.நரேந்திர மோடி ஆந்திராவில் இருக்கும் நேரத்தில் குண்டு வெடிக்க செய்து அவரை அச்சுறுத்த செய்வது குண்டு வைத்தவர்களின் நோக்கமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ரயில் தாமதமாக வந்ததால் ஆந்திராவில் வெடிக்க வேண்டிய குண்டுகள், தமிழகத்தில் ரயில் நிற்கும் போது குண்டுகள் வெடித்துள்ளன. இதே கருத்தைதான் டிஜிபி ராமானுஜம் வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாகீர் உசேனிடம்கியூ பிரிவு போலீசார்தீவிர கிடுக்கிபிடி
சென்னையில் பிடிபட்ட பாகிஸ்தான் உளவாளி ஜாகீருக்கும், ரயில் நிலைய குண்டு வெடிப்பு சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்று கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.தமிழகத்தில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் நோக்கத்துடன் வந்த இலங்கையை சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேனை, கியூ பிரிவு போலீசார் இரண்டு நாட்களுக்கு முன்னர் கைது செய்தனர்.
அவர் கைது செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குள், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 2 குண்டுகள் வெடித்தன. இதில் ஒரு பெண் இறந்தார். மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஜாகீர் உசேனை தமிழக போலீசார் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடந்த வெடிகுண்டு சம்பவமா? அல்லது வேறு அமைப்புகள் நடத்தியதா என்பதை தெரிந்து கொள்ள கியூ பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். அதேபோல ஜாகீர் குறித்த விவரங்களை மத்திய உளவுப்பிரிவும் விசாரித்து வருகிறது.
0 Comments