Home » » அபிவிருத்தி தேவை என்றால் ஹிஸ்புல்லாவை வைத்து இந்த அபிவிருத்தி அரசியலைச் செய்ய முடியும்

அபிவிருத்தி தேவை என்றால் ஹிஸ்புல்லாவை வைத்து இந்த அபிவிருத்தி அரசியலைச் செய்ய முடியும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஐந்து வருடங்களில் சிங்களக் குடியேற்றங்கள் 5030 ஏக்கர், அத்துமீறிப் பயிர்ச் செய்கை 8576 ஏக்கர், பௌத்த விகாரைகள் புதிதாக 84 ஏக்கரில் கட்டப்பட்டிருக்கின்றன, கரும்புச் செயகைக்காக 9920 ஏக்கர் வர்த்தகமானி பிரசுரம் மூலமாக சுற்றாடல் அமைச்சரால் 122063 ஏக்கர் அபகரிக்கப்பட்டுள்ளது. இராணுவ முகாம்கள் புதிதாக 54 அமைக்கப்பட்டுள்ளன. 650 ஏக்கரில் மொத்தமாக 145885 ஏக்கர் நிலங்கள் இந்த சமாதானம் என்று இந்த அரசாங்கம் கூறிக்கொள்ளும் இந்த கால கட்டத்தில் எங்கள் நிலங்கள் பறிபோகப்பட்டுள்ளன என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் மே தின நிகழ்வு மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நடைபெற்ற போது மே தின சிறப்புரை ஆற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான  சீ.யோகேஸ்வரன், பொன்.செல்வராசா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கி.துரைராசசிங்கம், மா.நடராசா, பிரசன்னா இந்திரகுமார், கோ.கருணாகரம், இரா.துரைரெட்ணம், ஞா.கிருஸ்ணபிள்ளை, கலையரசன், தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட முக்கியஸ்தர் ஜோசப் மேரி, தமிரசுக் கட்சியின் மட்டக்களப்பு இளைஞர் அணியினர், தொழில் சங்க உத்தியோகத்தர்கள், வர்த்த சங்கத்தினர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இங்கு பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்!
மேதினத்தின் வரலாறு பரவலாக அனைவரும் அறிந்த விடயமே. எல்லோரும் சர்வதேசத்தில் எப்போது மேதினம் உருவானது என்பது பற்றியே கூறினார்கள் ஆனால் நான் இந்த இலங்கையில் எப்போது மேதினம் உருவானது என்பது பற்றி கூற எண்ணுகின்றேன்.
சர்வதேசத்தில் சிக்காகோ நகரில் 1886ம் ஆண்டு N மதினம் உருவாக்கப்பட்டது. ஆனால் இலங்கையில் 1934ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் அன்று அவர்கள் இதனை விடுமுறை நாளாக பிரகடணப்படுத்தவில்லை. ஒரு அனுஸ்டிப்பு நாளாகவே பிரகடணப்படுத்தினர். ஆனால் 1956ம் ஆண்டு தான் இலங்கையில் மேதினம் முழுமையாக விடுமுறை நாளாக அப்போது  தொழிற்சங்க அமைச்சராக இருந்த இலங்கரத்னா என்கின்ற அந்த அமைச்சர் பிரகடணப்படுத்தினார்.
அதன் பிற்பாடு தான் இலங்கை அரசாங்கமும் மேதினத்தை விடுமுறை நாளாக அங்கீகரித்தது. இந்நாட்டில் தொழிற் சங்கங்கள் என்று கூறும் போது வடக்கு கிழக்கு பகுதிகளில் தொழிற் சங்கங்களை இன ரீதியாக ஒதுக்கி வைக்கின்ற காலகட்டத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
இந்த மேதினம் என்பது பல வருடங்களாக நாம் அறிவித்திருக்கின்றோம். 1949ம்ஆண்டுக்கு பிற்பாடு தமிழரசு கட்சியாக இருக்கலாம் தமிழர் விடுதலைக் கூட்டணியாக இருக்கலாம் அதற்கு பிற்பாடு இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளாக இருக்கலாம் தற்போது இருக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பாக இருக்கலாம் தொடர்ச்சியாக நாம் இந்த மேதினத்தை அனுஸ்டித்துக் கொண்டு வருகின்றோம்.
ஏனெனில் நாங்கள் உரிமைக்காக போராடுகின்ற இனம் அந்த உரிமை என்பது வெறுமனே தொழிற் சங்கத்தின் உரிமையாக மட்டும் இருக்க முடியாது. அடக்கப்பட்ட இனத்தின் உரிமை கிடைக்கும் போது தான் ஒடுக்கப்பட்ட தொழிலாளர்களும் அதன் மூலம் நிமிர்ந்து நிற்க முடியும் என்ற கோட்பாட்டின் மூலமாகத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் அந்த மே தினங்களை தொடர்ச்சியாக நடாத்திக் கொண்டு வருகின்றோம்.
அந்தவகையில் இன்று சமாதானம் என்று கூறப்படுகின்ற இந்த 05 வருட காலப்பகுதியில் 2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதியுடன் 05 வருடங்கள் முடிந்திருக்கின்றது. இந்த ஐந்து வருடங்களில் 5100 மில்லியன் நிதி மட்டக்களப்பிற்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றது என மாவட்ட அரசாங்க அதிபர் கூறியிருந்தார். அத்தோடு அவர் இன்னுமொன்றையும் தெரிவித்திருந்தார் அதில்; கூறியிருந்தார். இந்த 05 வருடங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கலாச்சார சீர்கேடுகள் சமுக சீர்கேடுகள் இளவயது திருமணங்கள் போன்ற சீர்கேடுகள் இடம்பெற்றிக்கின்றது என்றும் கூறியிருக்கின்றார்.

இதில் எம் மக்கள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும் இங்கு பணம் அதிகரிக்கின்றது ஆனால் நமது கலாச்சாரங்கள் சீர்குலைக்கப்படுகின்றன. இதன் பின்னனி என்னவென்பதை நாம் உணரவேண்டும். நிதியினால் மட்டும் கலாச்சாரத்தை ஈடுசெய்ய முடியாது நிதியினால் மட்டும் உரிமையை வென்றெடுக்க முடியாது. நிதியினால் மட்டும் மண்ணைத் தக்க வைக்க முடியாது. நிதியினால் மட்டும் நிலத்தில் நாம் வாழ்வுரிமையை பெற  முடியாது.
எனவே நாம் எமது கலை பண்பாடு கலாச்சாரங்களை நாம் பேணிப் பாதுகாக்க வேண்டும் இவற்றைப் பாதுகாக்கக் கூடியவர்களை நாங்கள் இனம்காண வேண்டும். யாருக்குப் பின்னால் நாம் நின்றால் இவற்றை கட்டிக்காக்க முடியும் என்பதை நாம் ஒரு கனம் சிந்திக்க வேண்டும். எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாம் செய்யும் பணியும் அதுதான். அபிவிருத்திதான் எமது நோக்கம் என்றால் தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடத் தேவையில்லை.
அபிவிருத்தி என்பது தேவை இதனை யாரும் செய்யலாம் அபிவிருத்தி செய்வதற்காக சம்மந்தன் ஐயா தேவையில்லை. எமக்கு அபிவிருத்தி அரசியல்தான் தேவை என்றால் ஹிஸ்புல்லாவை வைத்துக் கொண்டு நாம் இந்த அபிவிருத்தி அரசியலைச் செய்ய முடியும்.  ஆனால் எமக்கு அந்த அரசியல் தேவையில்லை. ஒரு நாட்டில் அபிவிருத்தி செய்ய வேண்டியது ஒரு நாட்டு அரசாங்கத்தின் தார்மீக கடமையாக இருக்கின்றது.
அதற்கு கோடிக்கணக்கில் நிதியினை ஒதுக்கலாம் கோடி நிதியின் மூலம் வாடிய தமிழ் இனத்தின் உரிமையைப் பெறமுடியுமா? அந்த விடுதலையை நாம் வெல்ல முடியுமா என்பது பற்றியே நாம் சிந்திக்க வேண்டும். நிதியைத் தருவதன் மூலம் எமது விடுதலையைப் பறிப்பதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இவ்வாறாக பன்முகப்படுத்தப்பட்ட நிதிகள் அமைச்சர்களுக்கும் கிடைக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கிடைக்கும். நாம் பல மேடைகளில் கூறியிருக்கின்றேன் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து நாம் கொடுக்கும் நிதிக்காக எம்மை நீங்கள் ஆதரிக்க வேண்டாம் இது யாரும் செய்வார்கள்.
அபிவிருத்தியைக் காட்டி அரசியல் செய்பவர்கள் நாங்கள் அல்லா. அபிலாசைகளுக்காக போராடும் ஒருரே ஒரு கட்சியென்றால் அது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தனித்துவம் என்று கூறுகின்றார்கள் பல கட்சிகள் தனித்துவம் என்று கூறிக்கொண்டு ஒட்டுண்ணிக் கட்சிகளாக இருந்துதான் அரசியல் செய்கின்றார்கள் இலங்கையைப் பொருத்த மட்டில் 66 கட்சிகள் இருக்கின்றன. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினைத் தவிர்த்து மற்றைய அனைத்து கட்சிகளும் ஒட்டுண்ணிக்கட்சிகள் இதனை நான் ஆதாரத்துடன் துணிந்து சொல்வேன்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த அரசியல் கட்சியுடன் அரசாங்கத்துடனும் ஒட்டுண்ணியாக இருந்து அரசியல் நடத்திய சரித்திரம் இல்லை. தனித்துவமாக இருக்கின்றோம் நாங்கள் ஏனெனில் தனித்துவமாக எமது இனம் காக்கப்பட வேண்டும். எமது நிலம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்று இன்று சர்வதேசம் வரை சென்று கொண்டிருக்கின்றோம்.
தமிழரின் தலையெழுந்து ஐந்து எழுத்துக்களைக் கொண்டுள்ளது. அ, ஆ. இ, ஈ, உ இவை தான். இதில் அ என்ற எழுத்தை தந்தை செல்வா தனது கையில் எடுத்து பல பேச்சுவார்த்தைகள் பல போராட்டங்கள் என்பன நடாத்தினார். ஆனால் அது பலனளிக்க வில்லை. அதன் பிற்பாடு ஆ வை எடுத்தோம் இந்த ஆ எனும் ஆயுதத்தினால் பல இயக்கங்கள் 1978ம் ஆண்டின் பின் போராடினாலும் 1986ம் ஆண்டு முதல் எல்லா இயக்கங்களும் ஸ்தம்பிதம் அடைய இறுதியாக 2009ம் ஆண்டு வரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் போராடியது அதுவும் மௌனிக்கப்பட்ட நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் தற்போது இ வை எடுத்துள்ளோம் இராஜதந்திர ரீதியில் சர்வதேசம் வரை எமது தமிழர் பிரச்சனையை கொண்டு சென்றுள்ளோம் இதற்கு ஒரு முடிவு கிட்டுமாயின் எமக்கு ஈ கிடைக்கும் இதன் முலம் உ வாகிய உலகம் எம்மை உற்றுநோக்கும் இதுவே தமிழர்களின் தலையெழுத்து.
ஒரு நாட்டின் இனத்தின் விடுதலை என்பது அந்த நாட்டுக்குள்ளேயே நடாத்தப்படுகின்றது மையம் கொள்கின்றது. ஆனால் அந்த விடுதலை என்பதை தீர்மானிப்பது சர்வதேசம் தான் அந்நாட்டுக்குள்ளேயே விடுதலை தீர்மானிக்கப்படுவதில்லை இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே எமது இலக்கை அடைந்து விடுவது என்பது இலகுவான காரியம் அல்ல. ஆனால் நாம் சர்வதேசம் நோக்கி சென்றுள்ள எமது பயணம் மீண்டும் திரும்பாது சர்வதேசத்தில் மையம் கொண்டிருப்பது எப்போதும் மாறாது என்பதை எம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உங்களுக்குத் தெரியும் இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் 03 தடவைகள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. உங்களுக்குத் தெரியும் இந்த தீர்மானம் என்பது எங்களுக்கிடைக்குமாயின் எமக்கு நாடு கிடைத்தாக அர்த்தம் இல்லை. ஆனால் எங்களுக்கான பயணம் எங்கள் நோக்கம் எங்களுக்கான வெற்றி அதில் தங்கியிருக்கின்றது. இந்த சர்வதேச பயணத்தில் இருக்கின்ற மையத்தை சரியான முறையில் தக்க வைக்க வேண்டிய கடைமை யாருக்கு இருக்கின்றது. இதனை தக்க வைக்க வேண்டுமாக இருந்தால் தமிழ் மக்களின் பலமாக இருக்க வேண்டும்.
எமது இம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான் இன்று எமது விடிவுக்காக போராடுகின்ற கட்சி என்பது பாலர் வகுப்பு தொடக்கம் பாட்டன் வரைக்கும் அனைவருக்கம் தெரியும். நாம் எமது கட்சியைப் பலப்படுத்த வேண்டுமாக இருந்தால் ஒவ்வொரு ஊரிலும் இருக்கின்ற தமிழர்கள் கல்விமான்கள் புத்திஜீவிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இவர்கள் வெறுமனே கல்விமான்களாக புத்திஜீவிகளாக இருக்க கூடாது. இனப்பற்றுள்ள கல்விமான்களாக புத்திஜீவிகளாக தொழிலாளர்களாக இளைஞர்களாக இருக்க வேண்டும்.
அந்த இனப்பற்று என்பது இல்லாவிட்டால் கல்வியை வைத்து எந்த பயனும் இல்லை கல்வியை வைத்துக் கொண்டு சோரம் போனால் அந்த கல்வி எதற்கு என்பதை நாம்  சற்று சிந்திக்க வேண்டும். இன உணர்வுள்ள கல்விமான்கள் தான் எமக்கு தேவை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எமது இனத்திற்கும் மண்ணுக்கும் மொழிக்கும் நிலத்திலும் பற்றுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
பாலத்தினால் எமது இன உணர்வினை மாற்ற முடியாது அபிவிருத்தியினால் எமது அபிலாசைகளை தீர்த்து விட முடியாது தாய் நிலத்தில் பற்றில்லாதவர்களுக்கு தாயிலும்  பற்றிருக்காது மண்ணில் பற்றில்லாதவர்களுக்கு மனைவியிலும் பற்றிருக்கும். பலர் கூறுகின்றார்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்கின்றது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு உணர்வுகளால் பேசி உசுப்பேத்த முடியும் அதுதான் அவர்களின் கருத்து மொத்தத்தில் எமது உணர்வுகளை நாம் வெளிக்காட்டக் கூடாது எங்கள் இனத்தயும் எங்கள் மொழியையும் விற்றுவிட்டு அடகு வைத்து விட்டு வரும் அபிவிருத்தியை நாம் ஒருபோதும் ஏற்க மாட்டோம்.
தார் வீதிக்காக நாம் கடந்து வந்த பாதையை நாம் மறக்க முடியாது. கொங்கிறீட் வீதிக்காக எமது கொள்கையை மாற்ற முடியாது எங்கள் மண் எங்கள் வளம் எங்கள் நிலம் எங்களுக்கென்று இருக்க வேண்டும் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒவ்வொரு தனித்துவம் இருக்கின்றது. கொக்கட்டிச்சோலையின் தத்துவத்தை காத்தான்குடியில் இருப்பவர் கெடுக்கக் கூடாது. காத்தான்குடியின் தனித்துவத்தை கொக்கட்டிச்சோலையில் இருப்பவர் கெடுக்கக் கூடாது. அவரவர் தனித்துவத்தை அவரவர் ஆள வேண்டும் இதுதான் எங்களின் கருத்து.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஐந்து வருடங்களில் சிங்களக் குடியேற்றங்கள் 5030 ஏக்கர், அத்துமீறிப் பயிர்ச் செய்கை 8576 ஏக்கர், பௌத்த விகாரைகள் புதிதாக 84 ஏக்கரில் கட்டப்பட்டிருக்கின்றன, கரும்புச் செயகைக்காக 9920 ஏக்கர் வர்த்தகமானி பிரசுரம் மூலமாக சுற்றாடல் அமைச்சர் அவர்களால் 122063 ஏக்கர் அபகரிக்கப்பட்டுள்ளது. இராணுவ முகாம்கள் புதிதாக 54 அமைக்கப்பட்டுள்ளன. 650 ஏக்கரில் மொத்தமாக 145885 ஏக்கர் நிலங்கள் இந்த சமாதானம் என்று இந்த அரசாங்கம் கூறிக்கொள்ளும் இந்த கால கட்டத்தில் எங்கள் நிலங்கள் பறிபோகப்பட்டுள்ளன.
இதனை எவரும் கதைக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் காட்டுகின்ற சித்திரம் அபிவிருத்தி. இந்த அபிவிருத்தி என்ற போர்வைக்குப் பின்னால் நடப்பவை தான் இந்த விடயங்கள் இவற்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது இந்நாட்டில் இராணுவத்திற்கு இன்னுமொரு உடை வழங்கப்பட்டிருக்கின்றது. காவியுடை அணிந்த இராணுவம் இந்நாட்டில் இருக்கின்றது. அவர்களும் ஆயுதம் வைத்துள்ளார்களோ இல்லையோ தெரியாது. இந்த பொதுபலசேனா போன்ற சேனாக்கள் இங்கு காவியுடை தரித்த இராணுவங்களாகச் செயற்படுகின்றனர்.
ஆனால் சகல விடயங்களிலும் நேரடியாக் போய் அவர்கள் அடாவடித்தனம் செய்கின்றார்கள். இதனை யார் கேட்கின்றார்கள் அவர்களும் பின்னால் ஒரு பலத்தை வைத்துக் கொண்டே செய்கின்றார்கள். எமது மட்டக்களப்பிலும்  காவியுடைதரித்த இராணுவ அதிகாரி இருக்கின்றார். கெவிலியா மடுவில் காணி பிடிக்க வேண்டும் என்று இறக்குமதி செய்யப்பட்ட விகாராதிகபதி அவர் தான் எமது பட்டடிப்பளை பிரதேச செயலாளரைத் தாக்கி அவருக்கு எதிராக வழக்கு போடப்பட்டிருக்கின்றது.
பட்டிப்பளை பிரதேச செயலாளரை நீக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தவரும் அவரே. அவரை மண்முனைப் பாலம் திறக்க வந்த ஜனாதிபதி அவர்கள் அவரிடம் ஆசி பெற்றுச் சென்றுள்ளார். இவ்வாறு இருக்கின்றது நிலைமை இதனை புரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலைதை; தடுப்பவர்கள் யார் இதனை புரிந்து கொள்ள வேண்டும் இததைத் தடுப்பவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இதை எம் மக்கள் உணர வேண்டும்.
நாங்கள் சட்ட புத்தகத்தில் இருக்கும் சட்டங்களை வைத்துக் கொண்டு வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றோம். இதனைத் தான் எம்மால் செய்ய முடியும். அதற்கு நீதி கிடைக்குமா என்பது கேள்வி. இலங்கை நீதியுள்ள நாடா என்பது அடுத்த கேள்வி இவ்வாறான செயற்பாடுகளுக்கு நாம் இதனை செய்யா விடில் எமது மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும் ஆனால் அரசுடன் சேர்ந்திருப்பவர்கள் இவற்றைத் தட்டிக் கேட்க மாட்டார்கள். இந்த அரசானது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளை ஒரு புலி என்ற நோக்கத்துடனயே பார்க்கின்றது.
பயங்கரவாதிகள் என சாட்டுகின்றது. நாங்கள் என்ன பயங்கரவாதிகளா இந்த அரசு செய்யும் பயங்கரவாதம் செய்வது போல் நாம் செய்கின்றோமா இன்று எமது துண்டுப்பிரசுரம் போலவே இன்னுமொரு துண்டுப்பிரசுரம் அடித்து இன்றைய இந்த மேதினம் இடம் மாற்றப்பட்டுள்ளது என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது நான் யார் யாருக்கெல்லாம் குருந்தகவல் அனுப்பினேனோ அந்த இலக்கங்களுக்கெல்லாம் எனது பெயரில் குருந்தகவல் அனுப்பப்பட்டிருக்கின்றது. இது இந்த அரச புலனாய்வாளர்களின் வேலையாகத்தான் இருக்க வேண்டும்.
இவ்வாறான இக்கட்டான சூழலில் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று அரசியல் மேற்கொண்டு வருகின்றது என்பதை எம்மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அரசியல் பயணத்தை வெற்றியடையச் செய்வதும் தோல்வியடைச் செய்வதும் எம் மக்களின் கையில் தான் இருக்கின்றது. நாம் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமானால் எம் மக்கள் அதற்குப் பின்னால் இருக்க வேண்டும் என்றார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |