Home » » கடல் வழியாக தமிழகத்திற்குள் மேலும் தீவிரவாதிகள்

கடல் வழியாக தமிழகத்திற்குள் மேலும் தீவிரவாதிகள்

பெங்களூரில் இருந்து கவுகாத்தி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த வியாழக்கிழமை காலை சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது அதில் 2 குண்டுகள் வெடித்தன.
குண்டு வெடிப்பு பற்றி விசாரணை
இதில் ஆந்திராவைச் சேர்ந்த சுவாதி என்ற பெண் என்ஜினீயர் பலி ஆனார். மேலும் 14 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கர்நாடக மாநிலம் பெங்களூர், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று அவர்கள் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
பீகார் தலைநகர் பாட்னா ரெயில் நிலையத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த குண்டு வெடிப்பிலும், சென்னை சென்டிரலில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடந்த குண்டு வெடிப்பிலும் ஒரே மாதிரியான வெடிபொருள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தேசிய பாதுகாப்பு படையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் தீவிரவாதிகள் ஊடுருவல்
இதைத்தொடர்ந்து பாட்னா ரெயில் நிலைய குண்டு வெடிப்பில் கைதாகி இருக்கும் இந்தியன் முஜாகிதீன் இயக்க தீவிரவாதிகளிடம் மத்திய உளவுப்பிரிவு மற்றும் தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த மேலும் சில தீவிரவாதிகள் தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஊடுருவி இருப்பதாகவும், ‘சிலிப்பர் செல்’ பிரிவைச் சேர்ந்த அவர்களிடம் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பதாகவும் தெரிய வந்தது.
எச்சரிக்கை
இதுபற்றி மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தமிழக அரசுக்கு தகவல் அனுப்பி உள்ளனர். அதில், கடல் வழியாக தமிழகத்துக்குள் ஊடுருவியுள்ள அந்த தீவிரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபடக்கூடும் என்று எச்சரித்து உள்ளனர்.
இதனால், தமிழகம் முழுவதும் போலீசார் ‘உஷார்’படுத்தப்பட்டு உள்ளனர். ஏற்கனவே தமிழகத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள 10-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளையும், தமிழகத்தில் ஊடுருவியுள்ள தீவிரவாதிகளையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தொடர்பு இல்லை
இதற்கிடையே கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பக்கீரிமாலிமார் தெருவில் உள்ள பள்ளிவாசலில் பதுங்கி இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அஷ்ரப் அலி (வயது 39) என்ற இந்திய முஜாகிதீன் இயக்க தீவிரவாதியை கைது செய்த போலீசார் நேற்று முன்தினம் அவரை கடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ராஜஸ்தானுக்கு நேற்று அழைத்துச் சென்றனர்.
இதற்காக சென்னை கொண்டு வரப்பட்ட அஷ்ரப் அலியை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து நேற்று முன்தினம் இரவு விடிய விடிய போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சென்டிரல் ரெயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கும், அவருக்கும் தொடர்பு இல்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து, அஷ்ரப் அலியை விமானம் மூலம் நேற்று மதியம் போலீசார் ராஜஸ்தானுக்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. பிரிவு உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மர்ம நபர் பற்றி விசாரணை
சென்னை சென்டிரல் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டுகள் வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் அங்கு இருந்து வெளியேறி சென்ற மர்மநபரின் வீடியோ பதிவை நாங்கள் நேற்று முன்தினம் வெளியிட்டு உள்ளோம். அந்த வீடியோ பதிவை அஷ்ரப் அலிக்கு போட்டுக்காட்டி, அதில் பதிவாகி இருந்த மர்ம நபரை பற்றி விசாரித்தோம். இதில், அஷ்ரப் அலிக்கும், சென்டிரல் ரெயில் நிலைய குண்டு வெடிப்பு சம்பவத்துக் கும் தொடர்பு எதுவும் இல்லை என்று தெரிய வந்தது.
குண்டு வெடிப்பு நடந்த சென்டிரல் ரெயில் நிலையத்தில் சேகரிக்கப்பட்ட வெடிமருந்தை ஆய்வு செய்தபோது, அந்த வெடிமருந்தும், பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த ஆண்டு இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு சம்பவத்தில் சேகரிக்கப்பட்ட வெடிமருந்தும் ஒன்றாக இருப்பது தெரிய வந்தது.. எனவே, கவுகாத்தி ரெயிலில் நடந்த குண்டு வெடிப்புக்கு இந்தியன் முஜாகிதீன் இயக்க தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
.ஜி.’ மகேஷ்குமார் அகர்வால்
சென்டிரல் ரெயில் நிலைய குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. ‘ஐ.ஜி.’ மகேஷ்குமார் அகர்வால் கூறியதாவது:-
ரெயிலில் குண்டு வைத்த தீவிரவாதிகள் மிகப்பெரிய ‘நெட்வொர்க்’காக அமைத்து செயல்பட்டு உள்ளனர். இவர் கள் பல மாநிலங்களில் கூடி சதித்திட்டம் தீட்டிய பின்னர் குண்டு வைத்து இருக்கிறார் கள். இதனால், சி.பி.சி.ஐ.டி. போலீசார் 150-க்கும் மேற்பட்டோர் அதிகாரிகள் தலைமையில் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு சென்று அங்கு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு விசாரணை சரியான கோணத்தில் சென்று கொண்டு இருக்கிறது. குற்றவாளிகள் யார்? என்பது பற்றியெல்லாம் ஓரளவு தடயங்களும், தகவல்களும் எங்களுக்கு கிடைத்து உள்ளது. குற்றவாளிகள் எந்நேரத்திலும் பிடிபடலாம். அதற்கு காலக்கெடு சொல்ல முடியாது.
ஒத்துழைப்பு
அதே நேரம், இந்த வழக்கு விசாரணைக்கு பொதுமக்கள் மத்தியில் இருந்து பெரும் ஒத்துழைப்பு கிடைத்து வருகிறது. குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த நேரத்தில் சென்டிரல் ரெயில் நிலையத்தில் பதிவான வீடியோவில் பதிவாகி இருந்த சந்தேகத்துக்கு இடமான நபரின் படத்தை நேற்று முன்தினம் வெளியிட்டோம்.
அந்த படத்தை பார்த்துவிட்டு, பொதுமக்கள் பலர் எங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பல தகவல்களை கொடுத்து வருகின்றனர். அவற்றின் அடிப்படையில் நாங்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். எனவே, குற்றவாளிகளை விரைவில் நெருங்கிவிடுவோம். இந்த சதித்திட்டத்தில் தொடர்புடைய அனைவரையும் விரைவில் கைது செய்து விடுவோம்.
இவ்வாறு ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால் கூறினார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |