Home » » மூன்று மாணவர்கள் கிழக்குப் பல்கலைகழகத்தில் இருந்து இடை நிறுத்தம் - மறு அறிவித்தல் வரை கல்வி நடவடிக்கை இடைநிறுத்தம் -உபவேந்தர்

மூன்று மாணவர்கள் கிழக்குப் பல்கலைகழகத்தில் இருந்து இடை நிறுத்தம் - மறு அறிவித்தல் வரை கல்வி நடவடிக்கை இடைநிறுத்தம் -உபவேந்தர்


கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு அரசியல்வாதியொருவரின் தூண்டுதலின்பேரில் சில மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் செயற்பாட்டினை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா,பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மறு அறிவித்தல் வரை நிறுத்துவதாகவும் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள உபவேந்தரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இன்று கிழக்கு பல்கலைக்கழகத்தில் சில மாணவர்கள் வெளியில் நின்று எனக்கெதிராக கூச்சல்போட்டனர்.பின்னர் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து பல்கலைக்கழகத்தின் சொத்துக்களுக்கு சேதமேற்படுத்தியுள்ளனர்.

அத்துடன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஒன்றிய தலைவர் கோமகன் என்பவர் என்னை இழுத்து என்மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

பல்கலைக்கழகத்தின் சட்டதிட்டங்களை மீறிய மூன்று மாணவர்களுக்கு இன்று வகுப்பு தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.அவர்கள் மீதான விசாரணை முடியும்வரையில் இந்த வகுப்புத்தடை அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.அதிலும் என்னைத்தாக்கிய கோமகன் இனியொருபோதும் பல்கலைக்கழகத்தில் கற்காத வகையில் அவருக்கான தடைகள் விதிக்கப்படும்.அவரது பதிவுகளும் ரத்துச்செய்யப்படும்.

நானும் கடந்த காலத்தில் இந்த பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்து மாணவர்களின் மன நிலையினை நன்கு அறிந்தவன்.அவர்கள் தங்களது பிரச்சினைகளை என்னுடன் பேசியிருந்தால் அதற்கான தீர்வுகள் வழங்கப்பட்டிருக்கும்.அதன் பிறகு அவர்கள் தங்களது நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம்.ஆனால் எதுவித நடவடிக்கையும் இல்லாமல் அரசியல்வாதியொருவரின் தூண்டுதலின்பேரில் இந்த போராட்டம் ஒரு சில மாணவர்களினால் நடத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் வகுப்புத்தடைகள் விதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் மீதான விசாரணைகள் முடிந்து அவர்களுக்கு ஓரு தீர்ப்பு வழங்கும் வரையிலும் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படுகின்றன.
பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் நாளை காலை 6.00மணிக்கு முன்பாக விடுதியை விட்டு வெளியேறுமாறும் பணிக்கப்பட்டுள்ளதாகவும் உபவேந்தர் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.




Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |