கொழும்பை மையப்படுத்தி முன்னெடுத்துச் செல்லப்பட்ட சிறுநீரக மோசடிக்கு முகநூல் உள்ளிட்ட (facebook) சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களை கண்டுபிடிக்க இந்த சமூக வலைத்தள தொடர்பு பயன்படுத்தப்படுவதாக ஹைதராபாத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த தினேஷ் மாரு என்பவர் இலங்கைக்கு அழைக்கப்பட்டு சிறுநீரக மாற்று சிகிச்சையில் உயிரிழந்துள்ளார்.
எனினும் இவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தினேஷ் மாரூவின் மின்னஞ்சல் கணக்கை சோதனை செய்த அவரது சகோதரர் சிறுநீரக மோசடி குறித்து தகவல்களை அறிந்து கொண்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும் தினேஷ் மாருவுடன் இலங்கைக்குச் சென்ற மேலும் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். அந்த இருவருக்கும் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுநீரக உதவி தேவை எனக் கோரி ஒரு குழு முகநூல் மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்துள்ளது. அதில் விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு இலங்கை செல்ல இலவச வசதி செய்து கொடுத்து இலங்கையில் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யப்பட்டு வந்துள்ளது.
பாதுகாப்பு கருதி இலங்கையில் சிறுநீரக சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments