Home » » மண்முனைப்பாலம் – மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு ஒளி மயமான எதிர்காலம்

மண்முனைப்பாலம் – மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு ஒளி மயமான எதிர்காலம்

மட்டக்களப்பு வாவி மாவட்டத்தை இரண்டாகப்பிரித்து நிற்பதால் வாவியின் கிழக்குப் பகுதி எழுவான் கரை என்றும் மேற்குப் பகுதி படுவான் கரை எனவும் பெயர் பெறலாயிற்று. இந்தப் படுவான்கரைக்கும் எழுவான்கரைக்கும் இடையிலான தொடர்பு மட்டக்களப்பு மண்முனை வாவி (இது மட்டக்களப்பு வாவியின் ஒரு பகுதி) ஊடாகவே நடைபெற்று வந்தது.
இதற்காக பாதை எனப்படும் பெரிய இயந்திரப்படகு இப்போது வரை பாவிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்கவும், மக்கள் எதிர் கொண்டு வரும் பெருமளவான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட மண்முனைப் பாலம் ஏப்ரல் 19ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவால் திறந்து வைக்கப்படுகிறது.


மட்டக்களப்பு ஏழுவான்கரையையும் படுவான்கரையின் பிரதான கிராமங்களான  முனைக்காடு, முதலைக்குடா, மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை உள்ளிட்ட பல கிராமங்களையும் இணைக்கும் மண்முனை வாவி ஊடான தரைவழி பாதையாக இது அமைந்திருக்கிறது.
தற்போது மண்முனைக்கும் முதலைக்குடாவிற்கும் இடையில் பாதை என்று அழைக்கப்படும் FERRYமூலமே மக்கள் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இரவு வேளைகளில் இந்த FERRY சேவை நிறுத்தப்படுவதால் இப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.
செல்லையாக இராசதுரை பிரதேச அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலத்தில் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டதுடன் கருங்கற்களும் அங்கு கொண்டுவரப்பட்டிருந்தன. ஆனால் 1983ஆம் ஆண்டுக்கு பின் பாதுகாப்பு அமைச்சு இந்த பால கட்டுமான பணிக்கு அனுமதி வழங்காததையடுத்து இது நிறுத்தப்பட்டிருந்தது. இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளதால் படுவான்கரையில் உள்ள பல கிராமங்கள் நன்மை அடைய உள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரையையும்,  எழுவான்கரையையும் இணைக்கும் முக்கிய போக்குவரத்துப் பாதையான மண்முனை ஆற்றுக்கு மேலாக அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு 2012 செப்ரம்பர் 04ஆம்திகதி பட்டிப்பளை பிரதேச பதில் பிரதே செயலாளர் ந.வில்வரெத்தினம் தலைமையில் நடைபெற்றிருந்தது.
இப்பாலம் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் 2012ஆம் ஆண்டு ஜுலை மாதம் வீதி அபிவிருத்தி அதிகார சபையினருக்கும் ஜெய்க்கா நிறுவனத்திற்குமிடையில் ஜப்பானில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
பாலத்தின் நிர்மாண பணிகள் 33 மாதங்களில் நிறைவடையும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 2012ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 16ஆம்திகதி வேலைத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்று மண்முனைப்பாலம் 210 மீற்றர் ஆகவும், இரு பக்கங்களிலும் 500 மீற்றர் அளவான மதகாகவும் (கோஸ்வே) மொத்தமாக 1210 மீற்றரில் அமைக்கப்பட்டுள்ளது.
மண்முனைத்துறை பாலத்துக்கான வேலைத்திட்ட அங்குரார்ப்பணம் அமைச்சர் பஷிலினால் ஜப்பானியத் தூதுவர் நொபுகிரோ றோபோ கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜித்,, சிறுவர் மற்றும் மகளிர் விவகாரப் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மீளகுடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்  உள்ளிட்டோரின் பங்குபற்றலுடன் நடைபெற்றிருந்தது.
ஜப்பான் நாட்டின் நன்கொடையில் படுவான்கரையையும் எழுவான்கரையையும் இணைக்கும் வகையில் மண்முனை ஆற்றுக்கு மேலாக அமைக்கப்பட்டுள்ள இப்பாலம் ஜப்பானின் 1473 மில்லியன் ரூபாய் செலவிலும் இலங்கை அரசின் 393 மில்லியன் ரூபாய் செலவிலும்; அமைக்கப்பட்டுள்ளது.

இயற்கை வளங்களையும், பலநூறாயிரம் ஏக்கர் நெற்காணிகளையும், தன்னகத்தே கொண்ட இப் படுவான்கரைப்பிரதேசம் பார்ப்பவர்களின் கண்களையும் மனங்களையும் கொள்ளை கொள்ளும் வனப்பு மிகு பகுதியாகப் பாணப்படுகிறது. இம் மக்களின் சமூகப் பொருளாதார கல்வி வளர்ச்சிக்கு இவ் மண்முனை போக்குவரத்துப் பாதை மிகவும் சிக்கலானதாகவே இருந்து வந்தது. இது ஒரு சவாலானதாக இருந்தமையினால் பின்தங்கிய பிரதேசம் என்று மிக நீண்ட காலகமாக முத்திரை குத்தப்பட்டிருந்தது. இது மண்முனைப் பாலத்திறப்பு காரணமாக நீங்குவதுடன் பிரதேசம் தலைநிமிர்வதற்கும் காரணமாக அமைகின்றது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்குக் கரை மக்களின் நீண்டகாலக் கனவு நிறைவு பெற்று மண்முனைப்பாலம் ஏப்ரல் 19ஆம்திகதி திறந்து வைத்து மக்கள் பாவனைக்காகக் கையளிக்கும் நிகழ்வு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாகும்.
இப்பிரதேசத்தின் அபிவிருத்தியில் மண்முனைப்பாலம் எதிர்காலத்தில் பாரிய பங்களிப்பினைச் செய்யவுள்ளதோடு படுவான்கரையும் எழுவான்கரையும் இணைக்கப்படுவதனால் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு ஒளி மயமான எதிர்காலத்தையும் கொண்டு வருமென நம்பப்படுகிறது.
முப்பது வருடங்களாக நடைபெற்ற கொடிய யுத்தத்தால் மிகவும் மோசமாகப்பாதிக்கப்பட்ட இப்பதேசத்தில் அதனால் காவு கொள்ளப்பட்ட உயிர்கள் ஏராளம், அத்துடன் கோடிக்கணக்கான பெறுமதியான உடமைகளும் துவம்சம் செய்யப்பட்டதுடன், யுத்தத்தால் கணவனை இழந்து விதவையாக்கப்பட்ட பெண்களும், அவயவங்களை இழந்த பெண்களும் , ஆண்களும் என பல்வேறு நிலைகளிலும் இழப்புக்களை சந்திக்க நேர்ந்தமையால் எதிர்காலத்தின் மீது நம்பிக்கையற்றவர்களாக துன்பியல் வாழ்வு வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு மண்முனைப்பாலமானது புதிய நம்பிக்கையைக் கொண்டுவரும் என எதிர்பார்க்க முடியும்.


வாவியால் துண்டாடப்பட்டு தனித்துவமான பிரதேசமாகக்காணப்பட்ட இப்பிரதேச மக்கள் ஆரம்ப காலம் முதல் நீரின் உதவியுடனே தமது போக்குவரத்து தேவைகளை மேற்கொண்டு வந்தனர். மட்டக்களப்பு நகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்வதற்கு உச்சமுனை துறை(மாவிலங்க துறை), மண்முனைத்துறை, அம்பிளாந்துறையையும் மற்றுமு; விவசாய நடவடிக்கைக்காகச் செல்லும் முக்கிய பாதையாக காஞ்சிரங்குடாப் பாதையையுமாக இவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். நீரின் உதவியுடன், வள்ளம், தோணி, படகு, பாதை என்பவற்றின் மூலம் பயணித்துவரும் வேளையில் ஏற்பட்ட அனர்த்தங்கள் ஏராளம். அதில் இழந்த உயிர்கள் அனேகமாகும்.
படுவான்கரைப்பிரதேசம் 50க்கும் மேற்பட்ட வருடங்கள் கல்வியில் பின்தங்கியதாகக் காணப்படுவதற்கு முக்கிய குறையாக போக்குவரத்தே காணப்பட்டது. ஆசிரியர்களின், கல்வியாளர்களின் வருகைக்கான தடையாகவும், மாணவர்களது போக்குவரத்துக்கான தடங்கலாகவும் மண்முனை ஊடான போக்குவரத்து இருந்து வந்தது.
வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வாகன வசதிகள் கிடைக்கப் பெற்ற பின்னர் உச்சமுனை என அழைக்கப்பட்ட மாவிலங்க முனைத் துறைப்பயணம் நிறுத்தப்பட்டதுடன், தொடர்ந்து இப்பிரதேசத்தின் முக்கிய பாதையாக மண்முனைத் துறைப் படகுச் சேவை விளங்கி வந்தது. ஆரம்பத்தில் மரத்தினாலான ஊண்டு பாதையும் பின்னர் இயந்திரம் பூட்டப்பட்டும் இடம்பெற்ற போக்குவரத்தினை 86ஆம் ஆண்டு வரைக்கும் பெருந்தெருக்கள் திணைக்களமே நடத்தி வந்தது. இந்த நிலையில் 1990முதல் வீதி அபிவிருத்தித்திணைக்களம் பொறுப்பேற்று போக்குவரத்தினை நடத்தியுள்ளனர். இக்காலப்பகுதியல் புனர்வாழ்வுத்திட்டத்தின் கீழ் வட- கிழக்கு மாகாண நிருவாகத்தாப் டொக்கியாட் நிறுவகத்தினால் எஞ்சின் உள்ள இயந்திரப்பாதை (40 கோஸ்ட்) வழங்கப்பட்டதால், அதன் மூலம் பாதை சேவை நடைபெற்று வந்தது.
ஆனாலும் அக்காலப்பகுதியில் யுத்தம் காரணமாக படகுப் பாதை சேவை இடைநிறுத்தபட்டு இரண்டு படகுகள் இணைக்கப்பட்டு எஞ்சின் பூட்டப்பட்ட படகுச் சேவையே நடத்தப்பட்டது. போராட்ட சூழலில் பாதைச் சேவை நிறுத்தப்பட்டதன் காரணமாக நகரத்துடன் தொடர்பினை ஏற்படுத்துவதற்கும் அத்தியாவசிய சேவையினைப் பெறவும் முடியாதவர்களாக படுவான்கரையிலுள்ள மக்கள் மிகவும் துன்பப்பட்டே வாழ்ந்தனர்.
அவ்வேளை மாவட்ட அரசாங்க அதிபராக பதவி வகித்த மௌனகுருசாமியின் பெரு முயற்சி காரணமாக பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்று மீண்டும் 25 கோஸ்ட் வலு எஞ்சின்கள் பூட்டப்பட்ட பாதை 1992ல் சேவைக்கு வந்தது. இதனையடுத்து வீதி அபிவிருத்தித்திணைக்களம் 1993ல் படகுச் சேவையைப் பொறுப்பேற்றதுடன் இரண்டு பாதைகளை சேவையில் ஈடுபடுத்தியது. அக்காலத்தில் பயணிகளின் போக்குவரத்துக்கு கட்டணம் அறவிடப்பட் போதும் 2006ஆம் ஆண்டு முதல் இன்றுவரை இலவச சேவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மண்முனைப் போக்குவரத்துக்கு படகுகள் சேவையில் இருந்த காலத்தில், ஏற்பட்ட அனர்த்தங்களால், பட்டிப்பளை பிரதேச செயலாளராகக் கடமையாற்றிய ஜெயதரன், ஆசிரியையான கங்கேஸ்வரி, எழுதுவினைஞர் சின்னத்துரை, உட்பட பல அரச உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என 30 வரையானோர் பலியாகியுள்ளனர். அந்த வகையில் புதிய பாலம் அமைக்கப்பட்டுத் திறக்கப்படும் இச் சந்தர்ப்பத்தில் இவர்களை நினைவு கூர படுவான்கரைப்பிரதேசம் கடமைப்பட்டுள்ளது.
வைத்தியசாலை வசதிகளற்ற காலத்தில் படுவான்கரைப்பிரதேசத்திலுள்ள கற்பிணித் தாய்மார்கள் மட்டக்களப்பு, காத்தான்குடி போன்ற வைத்தியசாலைகளுக்கு இப்பிரதேசம் ஊடாக நடந்து படகுச் சேவைகள் மூலம் பயணித்துச் செல்வர் இவ் வேளை வாவியின் நடுவே குழந்தை பிறந்த கதைகளும் உண்டு. இதே போன்று ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வேளை வாவியின் நடுவில் உயிரிழந்த சந்தர்ப்பங்களும் உள்ளன.


இப்பிரதேசத்தில் நடைபெறும் மரணங்கள் தற்கொலைகள், கொலைககள் போன்றவைகளின் போது பொலிஸாரின் உத்தரவின் போரில் வைத்தியப்பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு 20 கிலோமீட்டர் தூரத்துக்கு ஏற்றி இறக்கி விசாரணைகளை முடித்து மீண்டும் கொண்டு சென்ற சம்பவங்கள் இருக்கின்றன.
படுவான்கரைப்பிரதேசத்திலிருந்து இறைச்சிக்காக எழுவான்கரைக்கு வியாபாரிகளால் கொண்டு செல்லப்படும் மாடுகளை படகுச் சாரதியின் உதவியுடன் பிரயாணிகளுடன் சேர்த்து பாதையில் ஏற்றிச் சென்ற வேளை மக்கள் அனுபவித்த அசௌகரியங்கள், அதிக வாகனங்கள் ஏற்றப்பட்டு பாதையின் தட்டி எனப்படும் சங்கிலியிடப்பட்ட பகுதி அறுந்து ஏற்பட்ட அனர்த்தங்கள் என ஏராளம் உண்டு. இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம்.
உண்மையில் இப்பிரதேசத்தின் சரித்திரம், மண்முனைத் துறை போக்குவரத்தால் அடைந்த துன்பங்கள் துயரங்கள் இவையாவும் சில காலங்கள் மட்டுமே என்று எண்ணி வாழ்ந்தனர். இன்று இந்த சோதனைகளைக் கடந்து சாதனை படைத்தவர்களாக நிமிர்ந்து நிற்பதற்கு சோதனைக்காலங்களின் சோர்ந்து விடாதமையே காரணமாகும்.
தேர்தல் காலங்களில் அரசியலாவதிகள் மக்களின் வாக்குகளை பொய்யான வாக்குறுதிகளால் அபகரிக்கும் நிகழ்வு பொதுவானதாகக் காணப்பட்டாலும், மண்முனைப்பாலம் அமைத்துத்தருவதாக இப்பிரதேச மக்களிடம் வாக்குப் பெற்றுச் சென்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.  இவ்வாறான நிலையில் தான் மட்டக்களப்பு தேர்தல்தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக நீண்டகாலம் இருந்த செல்லையா இராஜதுரை அதிகாரமுள்ள அரசியல்வாதியாக பிரதேச அபிவிருத்தி அமைச்சராக இருந்த 83ல் மண்முனைப்பாலத்திற்கு அடிக்கல் நாட்டிவைத்தார். ஆனால் இடை நிறுத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து ஜனாதிபதி அபேட்சகராக போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ச மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் இடம் பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது, அவருக்கே உரித்தான உச்சரிப்பு குறைந்த தமிழில், மண்முனைக்கு பாலம் போடுறது. என்னை நம்பலாம் எனக் கூறி மீண்டும் இப்பிரதேச மக்களுக்கு புதிய நம்பிக்கையினைத் தந்தார்.
இப்பிரதேச மக்களின் முக்கிய தேவையாக இருந்து வந்த மண்முனைப் பாலம் அமைக்கும் கோரிக்கையினை அரசும் உலகமும் அங்கீகரிக்க நிறையவே காலம் எடுத்துக் கொண்டாலும் இன்றாவது இம் மக்களின் நீண்டகால கனவு நிறைவேறுவதால், இந்த மாவட்டத்தில் சகல நிலைகளிலும் உயர்ந்து விளங்கும் பிரதேசமாக படுவான்கரை, நகரமாக மாறி சாதனை படைக்கும் நாள் அண்மித்து விட்டதற்கு அடையாளமாக மண்முனைப்பாலம் என்றும் விளங்கும்.


இந்த இடத்தில் இப்பாரிய பணியை நிறைவேற்றுவதற்கு நிதியுதவி வழங்கிய ஜப்பானிய அரசுக்கும் அந் நாட்டு மக்களுக்கும், இலங்கை ஜனாதிபதி மேதகு மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கும் அரசாங்கத்திற்கும், ஜப்பானின் தூதுவருக்கும், இப்பாலம் அமைக்கும் பணிக்கு ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொண்டு உதவிய மீள்குடியேற்ற பிரதி அமைச்சரும் பட்டிப்பளை பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும்  இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கவேளையில் இப்பிரதேச மக்கள் தங்கள் பாராட்டுக்களையும் இதயபூர்வமான நன்றிகளையும் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |