தென்கொரியாவில் நடுகடலில் கப்பல் மூழ்கியதில் 9 பேர் பலியாகினர். இன்னும் 287 பேரை காணவில்லை. மோசமான வானிலை காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
தென்கொரியா இன்செயான் துறைமுகத்தில் இருந்து ஜெஜு என்ற சுற்றுலா தீவுக்கு 477 பயணிகளுடன் சென்ற செவோல் என்ற பயணிகள் கப்பல் நேற்று சற்றும் எதிர்பாராத வகையில் கடலில் மூழ்கியது. இந்தக்கப்பலில் பயணம் செய்தவர்களில் பெரும்பான்மையானவர்கள், சியோல் புறநகர் அன்சானில் உள்ள டான்வோன் உயர்நிலைப்பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் ஆவார்கள். இவர்கள் 4 நாள் சுற்றுலாப்பயணமாக சென்றார்கள்.
கப்பல் மூழ்க தொடங்கியதும் உடனடியாக தென்கொரிய கடலோரக்காவல் படைக்கு சிக்னல் அனுப்பப்பட்டது. சிக்னல் கிடைத்ததும் கடலோரக் காவல்படை மற்றும் கடற்படையின் கப்பல்களும், படகுகளும், 18 ஹெலிகாப்டர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தன. ஆனால் அந்தக்கப்பல் ஒரு பக்கமாக சாயத்தொடங்கியதுமே அது மூழ்கி விடும் என கருதி பல மாணவர்கள் உயிர் பிழைக்கும் ஆவலில் கடலில் குதித்தனர். இந்நிலையில் 179 பேர் மட்டுமே மீட்கப்பட்டனர். அவர்களில் 55 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 3 பேர் பலியாகினர் என்றும் சுமார் 300 பேர் வரையில் மாயமாகியுள்ளனர் என்று அரசு தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த விபத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர் என்றும் 287 பேர் காணவில்லை என்று இன்று அரசு தெரிவித்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை உயரலாம் என்று தகவல்கள் வெளியாகின. கப்பலை தேடும் பணியில் 100க்கும் மேற்பட்ட படகுகள் மற்றும் விமானம் ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டன. தொடர்ந்து காணாமல் போனவர்களை தேடும் பணி அங்கு தொடந்து நடைபெற்று வந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக பேசியுள்ள கப்பலின் கேப்டன் நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறியுள்ளார். என்னால் எதுவும் பேச முடியவில்லை என்று கேப்டன் லீ ஜோன் சங்க் கூறியுள்ளார். கப்பலில் 46 அவசரகால படகுகள் இருந்தும் அதில் ஒரு படகு மட்டுமே காணப்பட்டுள்ளது என்று அந்நாட்டு செய்தி நிறுவன தகவல்கள் தெரிவித்துள்ளன. மோசமான வானிலை காரணமாகவே கப்பல் விபத்துக்குள் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் முழு தகவல்கள் இது குறித்து வெளியாவில்லை.
0 Comments