Advertisement

Responsive Advertisement

உடலை அடக்கம் செய்வதில் தமிழ்-முஸ்லிம் இரு தரப்பாருக்குமிடையில் முறுகல் நிலை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி –பாலமுனை பிரதேசத்தில் அமைந்துள்ள குவைத் வீட்டுத்திட்ட பகுதிக்கு அருகாமையில் காத்தான்குடியைச் சேர்ந்த செய்யிது அஹமது பதுர்தீன் (ஸைனீஸ்) எனும் முஸ்லிம் சகோதரரின் தனியார் காணியில் கோயில்குளம் பிரதேசத்தில் மரணமான சாமித்தம்பி தவமணி 55 வயது எனும் தமிழ் சகோதரியின் உடலை 18-03-2014 இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 .மணிக்கு அடக்கம் செய்யச்சென்ற வேளையில் தமிழ்-முஸ்லிம் இரு தரப்பாருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்ப்பட்டுள்ளது.
இதனை அடுத்து ஸ்தலத்திற்கு விஜயம் செய்த காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர்  முறுகல் நிலை பொலிஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிசார் கருத்து தெரிவிக்கையில் இக் காணி அரச காணியென ஆரையம்பதி பிரதேச செயலக பிரதேச செயலாளர் வாசுதேவன் தெரிவிப்பதாகவும் காத்தான்குடியைச் சேர்ந்த செய்யிது அஹமது பதுர்தீன் என்பவர் இக் காணி தனது சொந்தக் காணியெனவும் தெரிவித்தை அடுத்தே மேற்படி பிரச்சினை ஏற்ப்பட்டுள்ளது.
இங்கு மரணமான சாமித்தம்பி தவமணியின் குடும்பத்தினர்  கருத்து தெரிவிக்கையில் இக் காணியில் மரணமானவரின் உடலை அடக்கம் செய்யுமாறு ஆரையம்பதி பிரதேச செயலாளர் வாசுதேவன் தெரிவித்தாக குறிப்பிட்டனர்.


இதைத்தொடர்ந்து இனங்களுக்கிடையில் பிரச்சினை வராமல் இவ் விடயத்தில் ஒரு தீர்வைபெறும் நோக்கில் காத்தான்குடி பொலிசார் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்ததாகவும் வழக்கை விசாரித்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் தற்காலிகமாக இக் காணியில் மரணித்த சகோதரியின் உடலை அடக்கம் செய்யாமல் வேறு இடத்தில் அடக்கம் செய்யுமாறும் இது தொடர்பில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் வாசுதேவனை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் இக் காணி தொடர்பான விசாரணைகளை மேற்கொன்டு  அறிக்கைகளை எதிர்வரும் 25 திகதி இடம்பெறவுள்ள இது தொடர்பான வழக்கில் சமர்ப்பிக்குமாறு நீதவான் காத்தான்குடி பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு நீதவான் நீதி மன்றத்தின் தீர்ப்பை அடுத்து  கோயில்குளம் பிரதேசத்தில் மரணமான சாமித்தம்பி தவமணி 55 வயது எனும் தமிழ் சகோதரியின் உடல் அக் காணியிலிருந்து தாழங்குடா பொது மயானத்துக்கு இன்று பிற்பகல் சுமார் 5.30 மணியளவில் கொண்டு செல்லப்பட்டது.


சம்பவ இடத்திற்கு களுவாஞ்சிக்குடி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்நாயக்கா,வாழைச்சேனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.லால் செனவிரட்ன,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பூ.பிரசாந்தன்,பரீட், ஆரையம்பதி பிரதேச செயலாளர் வாசுதேவன், ஆரையம்பதி பிரதேச சபை செயலாளர் சி.ஜே.அருட்பிரகாசம் ,காத்தான்குடி பொலிஸ் நிலைய சிறு குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி ரணசிங்க உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள்,இராணுவ அதிகாரிகள்,புலனாய்வு பிரவினர் உட்பட பலரும் விஜயம் செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments