எங்களது சம்பளப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் வாழைச்சேனை காகிதஆலையின் நீர்த்தாங்கிமேல் ஏறி உண்ணாவிரதம் இருந்து உயிரைவிடப் போவதாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு – வாழைச்சேனை காகிதாலை ஊழியர் தங்களது 3 மாதகால சம்பளத்தை நிலுவையுடன் வழங்க வேண்டும் உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ச்சியான பணி புறக்கணிப்பின் தொடராக இன்று வெள்ளிக்கிழமை ஓட்டமாவடி பிரதேச செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், எங்களது வயிற்றிலடிக்காதே, தொழில் திணைக்களமே எங்களை 3 மாதங்களாக மறந்து விட்டாயா, 3 மாத சம்பளம் எங்கே, தற்காலிக் தொழிலாளிகளின் 5 மாதக் கொடுப்பனவுக்கு வழி என்ன? உள்ளிட்ட வாசகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசங்களையும் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள், வாழைச்சேனை காகிதாலையிலிருந்து பேரணியாக ஓட்டமாவடிப்பாலத்தின் ஊடாக கோரளைப்பற்று மேற்கு – ஓட்டமாவடி பிரதேச செயலகம் வரை வந்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன், பிரதேச செயலாளர் எம்.சி.அன்சாரிடம் அரசாங்க அதிபருக்கு சமர்ப்பிப்பதற்கான தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரைக் கையளித்தனர்.
அரசாங்க வழங்கள், மற்றும் நிறுவனங்களின் அமைச்சர் அன்ரன் திசேராவை சந்தித்து உரையாடிய போது எங்களது கோரிக்கையை தீர்த்துத் தருவதாக உறுதியளித்திருந்தார். ஆனாலும் தங்களது கோரிக்கைகளுக்குக் கிடைத்த உறுதி மொழி நிறைவேற்றப்படாமையினாலேயே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
அவர்களது மகஜரில், கடந்த 15 வருடங்களாக காகிதஆலை நஸ்டத்தில் இயங்கி கொண்டிருக்கிறது. இதனால் தொழிலாளர்களுக்கு சம்பளம் தவிர்ந்த ஏனைய கொடுப்பனவுகள் யாவும் நிறுத்தப்பட்டன.
சம்பளம் கூட ஏனைய திணைக்களங்களைவிட குறைவானதே. ஆனால், அந்தச் சம்பளம் கூட கேள்விக்குறியாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் ஒழுங்காகக் கிடைப்பதில்லை. அந்த வகையில், ஒவ்வொரு மாதமும் 25ஆம்திகதி சம்பளம் கிடைக்கவேண்டும். தவறும் பட்சத்தில் அந்த மாத இறுதியில் அதாவது 30ஆம்திகதி தவறாமல் தரவேண்டும்.
2013 டிசம்பர் மாத மிகுதிச் சம்பளம் 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தரப்பட வேண்டும்.
எங்களது சம்பளத்தில் களித்து வங்கிக்கு அனுப்பும் எங்களது கடன் தொகைக்கான மாதாந்த செலுத்துகை பணம் அந்த மாதத்திலேயே அனுப்பப்பட வேண்டும். தற்போது எங்களது சம்பளத்தில் களித்து எடுக்கப்பட்ட வங்கிக்கான நிலுவை முழுவதும் உடனடியாக செலுத்தப்படல் வேண்டும்.
எங்களது சம்பளத்தில் களித்து எடுக்கப்படும் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி பணத்தையும் நிறுவனத்தால் வழங்கப்படும் தொகையையும் ஒவ்வொரு மாதமும் தவறாமல் செலுத்துதல் வேண்டும்.
2008ஆம் ஆண்டு சுயவிருப்பில் சென்று நஸ்ட ஈட்டுத் தொகை வழங்கப்படாமல் மீண்டுமு; வேலையில் இணைந்து கொண்டவர்களுக்கான 50 வீத சம்பளம் முழுமையாக தரப்பட வேண்டும். அத்துடன் வருடாந்த ஏற்றம் சிறுதொகையே அவர்களுக்கு வழங்கப்பட்டது. அது முழுமையாக வழங்கப்பட வேண்டும்.
தற்போது செயல்படும் உமியிலான செயற்பாட்டால் தொழில்சாலை இயந்திரங்களுக்கும், தொழிலாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது. இதை நிவர்த்தி செய்வதற்கு முதலில் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments