விடுதலைப் புலிகளுக்கு கிழக்கில் நாங்கள் நியமனம் வழங்கத் தயாராக இல்லை. நீங்கள் எங்கு போய் முறையிட்டாலும் தமிழர்களுக்கு நியமனம் கிழக்கில் வழங்கப்படமாட்டாது என தன்னைச் சந்திக்க வந்த பட்டதாரிகளிடம் கிழக்கின் ஆளுநர் கூறியதை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாக அரியநேத்திரன் எம். பி. தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்துக்கென நடாத்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் போட்டிப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றிருந்தும் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்படாமல் இருந்த மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த பட்டதாரிகள் பலர் கிழக்கின் ஆளுநர் ரியல் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரமவை சந்தித்து தமது குறைபாடுகளைச் சொல்லி திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்துக்கு கடந்த திங்கட்கிழமை சென்றிருந்தார்கள்.
அவ்வாறு சென்ற பட்டதாரிகளிடம் ஆளுநர் நடந்து கொண்ட முறை பற்றி பத்திரிகைகளுக்கு தெரிவித்த போதே அரியநேத்திரன் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் யுவதிகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் போட்டிப் பரீட்சையில் மிகக்கூடிய புள்ளிகளைப் பெற்றிருந்த போதிலும் இனவிகிதாசார அடிப் படையில் தமிழர்களுக்கு மட்டக் களப் பிலும் அம்பாறையிலும் இடமில்லையென காரணம் காட்டி நேர்முகப்பரீட்சைக்கு முதலாம் நிலை தொடக்கம் 5 ஆம் நிலைப் புள்ளிகளைப் பரீட்சையில் பெற்றவர்கள் கூட அழைக்கப்படவில்லை.
மிகக்குறைந்தளவு புள்ளிகளைப் பெற்ற முஸ்லிம் சிங்கள பரீட்சார்த்திகளே நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.இந்த அநீதியை தெரியப்படுத்த மேற்படி இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த பட்டதாரிகளே ஆளுநரை சந்தித்து தமது கவலையைத் தெரிவிக்க சென்றுள்ளனர்.
ஆளுநர் நடந்து கொண்ட முறை அராஜகமானதும் நாகரீகமற்றதும் ஆகும். நீங்கள் அனைவரும் விடுதலைப்புலிகளைச் சேர்ந்தவர்கள். நீதிமன்றமல்ல எங்கு சென்றாலும் தமிழர்களுக்கு நியமனம் வழங்கப்படமாட்டாது என ஒரு இராணுவத்தளபதி போல் நடந்து கொண்டுள்ளார். கடந்த காலங்களில் இந்த மாவட்டங்களில் தமிழர்களுக்கு கூடுதலான நியமனம் வழங்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களும் சிங்களவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இனிவரும் காலங்களில் தமிழர்களுக்கு நியமனம் வழங்கப்படமாட்டாது என அந்த பட்டதாரி இளைஞர்களையும் யுவதிகளையும் அநாகரிகமாக நடத்திக் கொண்டதுடன் ஒரு இராணுவத் தளபதி போல் நடந்தும் கொண்டுள்ளார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்க ஒரு விடயமாகும்.
இது போன்றே அண்மையில் முகாமைத்துவ உதவியாளர் நியமனத்தையும் ஆளுநர் செய்துள்ளார். அதற்கு எதிராக நீதிமன்றம் செல்ல வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டது. இதன் காரணமாகவே ஆளுநர்களை சிவில் உத்தியோகத்தர் ஒருவரை நியமிக்கும் படி கோரி வந்துள்ளோம். முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் ஆலோ சனைப்படி ஆளுநரைச் சந்திக்க சென்ற அந்தப் பட்டதாரிகளுடன் ஆளுநர் நடந்து கொண்ட முறை அநாகரிகத்தன்மை வாய்ந்ததென அவர் மேலும் தெரிவித்தார்.


0 Comments