இலங்கையில் அதி கூடிய நச்சுத்தன்மை கொண்ட உணவுப்பொருட்களை உற்பத்தி செய்யும் மாகாணங்களில் முதல் இடத்தினை கிழக்கு மாகாணம் பெறுவதோடு குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் முதல் நிலை பெறுகின்றதென மாவட்ட சுற்றாடல் ஆணையாளர் ஜனாப் நௌபர் அலி தெரிவித்துள்ளார்.
கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையில் சுற்றாடல் கழகங்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும் தொப்பி அணிவிக்கும் நிகழ்வும் கல்லூரி முதல்வர் தலைமையில் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட சுற்றாடல் ஆணையாளர் ஜனாப் நௌபர் அலி, கல்முனை தமிழ்ப் பிரிவிற்கான கோட்டக் கல்வி பணிப்பாளர் ஜெகநாதன், சிறப்பு அதிதியாக கல்முனை பிரதேச சுற்றாடல் அதிகாரி அருஸ்கான், கல்முனை கோட்ட சுற்றாடல் அதிகாரி திருமதி பவானி சந்திரகுமார் மற்றும் கல்லூரி பிரதி அதிபர்கள், முகாமைத்துவ குழுக்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
மாவட்ட சுற்றாடல் ஆணையாளர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தெற்காசியாவிலேயே புற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமானதாகவும் அதிலும் குறிப்பாக இலங்கையிலே வடகிழக்கு மாகாணங்களிலே அதிகமாக இந்நோயுள்ளவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய புற்று நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இது வரைக்கும் இனங்காணப்படாமல் அதிகமானோர் இன்றும் இம்மாவட்டத்தில் வாழ்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நோயினை ஆரம்பத்தில் கண்டுபிடித்து அதற்கான சிகிச்சையினை ஓரளவு வசதி படைத்தவர்களே பெற்றுக்கொள்கின்றார்கள். வசதி குறைந்தவர்கள் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்களா என்பதனை அறியாமலேயே வாழ்கின்றார்கள். இவையனைத்திற்கும் காரணம் இந்த மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அனைத்திலும் அதிகமான அளவில் நச்சுப் பொருட்கள் சேர்த்திருப்பதனாலேயே இந்நோய்கள் இலகுவாக மக்களைச் சென்றடைகின்றன. இதற்கு யார் காரணம் என்ற வினாவினை நாம் ஒவ்வொருவரும் கேட்போமானால் வேறு யாரும் காரணமல்ல நாங்கள் தான் காரணம். எங்களை சுற்றியுள்ள சூழலில் அன்றாடம் நாம் உண்ணும் உணவு குடிக்கும் நீர், சுவாசிக்கும் வளி, நாம் பாவிக்கும் மருந்து அனைத்திலும் நச்சுத்தன்மை அதிகமாகக் காணப்படுவதே இவையனைத்திற்கும் காரணமாக இருக்கின்றது.
இன்று உலகம் கணனிமயமாக்கப்பட்டிருக்கின்றது. இது இன்றைய கால கட்டத்திற்கு பொருத்தமானதாக அமைந்தாலும் அதனால் பாதகமான விளைவுகளே அதிகமாக இருக்கின்றது.
ஒரு கணனி வெளியிடும் காபனீரொட்சைட்டை உறிஞ்ச வேண்டுமாக இருந்தால் 100 500 தொடக்கம் மரங்களை நாட்ட வேண்டி இருக்கின்றது. அந்த அளவிற்கு நாங்கள் மரங்களை பேணிப் பாதுகாப்பது மிக மிகக் குறைவு என்று தான் கூற முடியும். காரணம் நாங்கள் மரங்களை நாட்டுவதனைத் தவிர்த்து அதனை அழிப்பதிலேயே குறிப்பாக இருந்து செயற்படுகின்றோம் என்பதுதான் உண்மை.
இவ்வாறு இயற்கைச் சூழலை குழப்பும் போது தான் மனிதன் பல இயற்கை அனர்த்தங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றான். இதனால் எமது அதிகாரம் கேள்விக்குறியாகவே இருக்கின்றது என்றார்.
0 Comments