எனக்கு தொடர்ந்து அரசியலில் இருக்கும் எண்ணம் கிடையாதென மீள்குடியேற்றப்
பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார் .
மட்டக்களப்பு மாவட்டத்தில் குறுகிய காலத்தினுள் பல அபிவிருத்திகளை செய்துவிட்டு தான் அரசியலிலிருந்து விலகுவதற்கு உள்ளதாகக் கூறிய பிரதியமைச்சர் , இவ்வாறு விலகுவதற்கிடையில் தன்னைச் சிறந்த முறையில் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார் .
தனது பிரதேசத்தையும் மாவட்டத்தையும் கட்டியெழுப்புவதற்கு தான் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார் .
களுவாஞ்சிக்குடி இளைஞர் முன்னேற்றக் கழகத்தின் 32 ஆவது வருடாந்த விளையாட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 23 ) களுவாஞ்சிக்குடியில் நடைபெற்றது . இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார் .
அவர் மேலும் உரையாற்றுகையில் ,
அண்மையில் சம்பந்தன் கிண்ணியாவில் வைத்து ஓர் கருத்தினை வெளியிட்டிருந்தார் . அரசிடம் பிச்சை எடுத்து தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டிய தேவை எமக்கில்லை எனத் தெரிவித்திருந்தார் . அவரின் கருத்திலிருந்து பார்க்கும்போது தமிழன் சாப்பிடவும் கூடாது . வளர்ச்சியடையவும் கூடாது என நினைக்கின்றார் என எண்ணத் தோணுகின்றது .
இதனை விடுத்து அபிவிருத்தி மற்றும் உரிமை ஆகிய இரண்டினையும் நாங்கள் ஒன்றாக நோக்குவேம் . அரசின் பக்கமிருந்துதான் இவை இரண்டினையும் பெற முடியும் , இதனை விடுத்து எதிர்க்கட்சியிலிருந்து கத்துவதனால் எதனையும் பெறமுடியாது . இதற்கு ஒரு சிறந்த உதாரணம்தான் 13 ஆவது திருத்தச் சட்டம் தேவை என்பதனை பாராளுமன்றத்தில் நான் கதைத்து வருகின்றேன் . இதனை வேறு யாரும் கதைக்கமாட்டார்கள் .
' உலகில் பொதுவானவையாக விளையாட்டும் இசைத்துறையும் காணப்படுகின்றன . விளையாட்டின் நோக்கமானது சமூகத்தை ஒற்றுமைப்படுத்துவதுடன் , இளைஞர் , யுவதிகளின் ஆளுமை மற்றும் திறமைகளை வளர்ப்பதாகும் .
5 கண்டங்களை இணைப்பதற்காக ஒலிம்பிக் கொடியில் 5 வர்ணங்களைக் கொண்ட வளையங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன . இந்த ஒலிம்பிக் விளையாட்டு கி . பி 776 ஆம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது .
அப்போதைய காலகட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட விளையாட்டுக்கள் தற்போது நவீன மயப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன . அதன் ஒரு அங்கமாகத்தான் தேசிய மட்டம் , மாகாண மட்டம் , மாவட்ட மட்டம் , பிராந்திய மட்டம் , கிராமிய மட்டம் என பல்வேறுபட்ட பிரிவுகளில் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன . விளையாட்டுக்களில் மரதன் ஓட்டம் மிகவும் பிரதான இடம் வகிக்கின்றது .
களுவாஞ்சிக்குடியைப் பொறுத்தவரையில் சிறந்த கல்விமான்களைத் தந்த இடமாகக் காணப்படுகின்றது . அந்த வகையில் , களுவாஞ்சிக்குடியிலுள்ள கல்விமான்களுடன் இணைந்து நான் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறுபட்ட அபிவிருத்திகள் பற்றி கலந்தாலோசித்து வருகிறேன் .
அதற்காக வேண்டித்தான் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே தனித் தமிழ் தொகுதியாகக் காணப்படுகின்ற பட்டிருப்பு தொகுதியை அபிவிருத்தி செய்ய வேண்டும் என பாடுபட்டு வருகிறேன் . மட்டக்களப்பு மாவட்டத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இந்த பட்டிருப்பு தொகுதி மக்களிடத்தில் உள்ளது . இதனை இப்பகுதி மக்கள் யாரும் மறந்துவிடக்கூடாது . அதற்காகத்தான் இந்த தொகுதியிலே நான் அபிவிருத்திக் குழுத் தலைவராக இருந்து பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றேன் .
0 Comments