ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 25வது கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை தோற்கடிக்க எவ்விதத்திலும் உதவ முடியாது என்று இந்தியா தெரிவித்துவிட்டதாக எக்கொனமிக் ரைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் தமக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தை தோற்கடிப்பதற்கான ஆதரவைத் தேடி சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல.பீரிஸ் அண்மையில் புதுடில்லிக்கு விஜயம் செய்திருந்தார்.
இந்நிலையில், இந்திய நாடாளுமன்றத் தேர்தல் அண்மித்து வரும் நிலையில், தமிழ் மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்த விரும்பாக இந்தியா சிறிலங்காவுக்கு உதவ மறுத்துள்ளதாக இவ்வூடகம் குறிப்பிட்டுள்ளது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தை கடந்த புதன்கிழமை புதுடில்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
இச்சந்திப்பின் போது, ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் தமக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரப்படாது என்பதை உறுதிப்படுத்த இந்திய மத்திய அரசு உதவ வேண்டும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் கோரிக்கை விடுத்திருந்ததாக இந்திய வெளிவகார அமைசசின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயினும், இந்திய நாடாளுமன்றத் தேர்தல் அண்மித்து வரும் நிலையில், இது தொடர்பில் சல்மான் குர்ஷித் எந்த வாக்குறுதியையும் அளிக்கவில்லை என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதேவேளை, இது தொடர்பில் வொஷிங்டனுடன் நேரடியாகப் பேசிக் கொள்ளுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸூக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் தொடர்பாக இந்தியா சரியான நேரத்தில் முடிவெடுக்கும் என்றும் பீரிஸிடம் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் அண்மித்து வரும் நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி இதுவரை எந்தக் கட்சிகளுடனும் கூட்டணி அமைக்கவில்லை.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பில் சிறிலங்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தால் தமிழகத்தில் கூட்டணி அமைப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் என்பதாலேயே, இவ்விடயத்தில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்திய மத்திய அரசு எவ்வித வாக்குறுதியையும் அளிக்கவில்லை என எக்கொனமிக் ரைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில் சிறிலங்காவுடன் நெருங்கிய உறவுகளைப் பேணுவதற்கும் இந்தியா விருப்பம் கொண்டுள்ளதாக இவ்வூடகம் மேலும் தெரிவித்துள்ளது
0 Comments