Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

புலனாய்வுப் பிரிவினருக்கு நினைவுத்தூபி 14 தமிழர்களும் உள்ளடக்கம்.

வடக்கில் படையினர் மூலோபாய நிலைகளுக்குள் முடக்கப்பட்டுள்ளது மிகப் பெரிய சவால் என்றும், இதனைச் சமாளித்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது இராணுவப் புலனாய்வுத்துறையின் பொறுப்பே என்றும் தெரிவித்துள்ளார் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.
கரந்தெனியவில் நேற்றுமாலை  இராணுவப் புலனாய்வுத் தலைமையகத்தையும், போரில் மரணமான இராணுவப் புலனாய்வுத் துறையினருக்கான நினைவுச் சின்னத்தையும் திறந்து வைத்து உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“போர் முடிந்த பின்னர் வடக்கில் பிரதான மூலோபாய நிலையங்களுக்குள் மாத்திரம் இராணுவம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது எமக்கு பாரிய சவால், இந்த சவால்களுக்கு முகம் கொடுத்து நாட்டின் பாதுகாப்புக்கு உறுதி செய்யும் பொறுப்பு இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சார்ந்தது. 
மூன்று பத்தாண்டுகளாக இடம்பெற்ற போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காமலும், அவர்கள் மீள ஒன்றிணையாமலும், புதிய பயங்கரவாத குழுக்கள் உருவாகாமலும் பாதுகாக்கும் பாரிய பொறுப்பு புலனாய்வுப் பிரிவினருக்கே உள்ளது.
பெரும் அர்ப்பணிப்புக்கு மத்தியில் பெற்றுக் கொண்ட சமாதானத்தை உறுதிப்படுத்தும் பொறுப்பு புலனாய்வுத்துறையை சார்ந்தது. போர் முன்னெடுக்கப்பட்ட காலத்திலும் போருக்குப் பின்னரான காலத்திலும் படையினர் சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
வடக்கில் குறுகிய காலப்பகுதிக்குள் இராணுவத்தினர் பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளனர்.  கண்ணிவெடிகளை அகற்றுதல், இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தல், சரணடைந்த முன்னாள் புலி. உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளித்தல் போன்ற பல்வேறு சவால்களுக்கு இராணுவம் முகம் கொடுத்து வந்தது.
தொடர்ந்தும் வெவ்வேறு சவால்களுக்கு இராணுவம் முகம் கொடுத்து வருகிறது.  எந்தவொரு நடவடிக்கையை முன்னெடுப்பதாயினும் புலனாய்வுத் தகவல் மிகவும் இன்றியமையாதது.  போரின்போது புலனாய்வுத் தகவல்கள் தான் இந்த பாரிய வெற்றியை பெற்றுத்தந்தது.

அதேபோன்று போருக்குப் பின்னரும் நாட்டின் பாதுகாப்பு மிக முக்கியமானது. அதற்கும் புலனாய்வுத் தகவல் மிகவும் இன்றியமையாதது.  எனவே தான் போர் முடிவுற்றாலும் புலனாய்வு பிரிவின் எண்ணிக்கையை நாம் அதிகரித்தோம்.  எல்லா சவால்களுக்கும் முகம் கொடுக்கும் வகையிலான பயிற்சிகளையும் வழங்கினோம்.
தென்மாகாணத்தில் எமக்கு கிடைத்த இந்த விசாலமான நிலப்பரப்பை இராணுவத்தளபதியின் ஆலோசனைக்கு அமைய இராணுவப் புலனாய்வு பிரிவுக்கு வழங்கியுள்ளோம்.  இராணுவ உயர் அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பின்னர் இராணுவ புலனாய்வுத் தலைமையகம் நிறுவப்பட்டுள்ளது.
தற்பொழுது சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டும் பொறுப்பு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  என்றாலும் நாட்டின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு தொடர்ந்தும் செயற்பட வேண்டியது புலனாய்வுத்துறையின் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார்.
அம்பலாங்கொடை, கரந்தெனிய பகுதியில் 90 ஏக்கர் பரப்பளவு நிலத்தில், இராணுவப் புலனாய்வுப் பிரிவு தலைமையகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இங்கு போரில் உயிரிழந்த 8 அதிகாரிகள் மற்றும் 56 ஏனைய தரத்தினர் என மொத்தம், 64 படையினரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியையும் கோத்தாபய ராஜபக்ச திறந்து வைத்துள்ளார்.
இங்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 14 தமிழர்களின் நினைவுச்சின்னங்களும் அமைக்கப்பட்டுள்ளன.  இங்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நேற்று அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
1990ம் ஆண்டு ஜுலை 30ம் நாள் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம், இராணுவப் புலனாய்வுப்பிரிவு இராணுவத்தில் உருவாக்கப்பட்டது.
இதனை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் லயனல் பலகல்ல ஆவார்.
ஆரம்பத்தில் கொழும்பில் இயங்கிய இந்தப் படைப்பிரிவுத் தலைமையகம் பின்னர் வவுனியாவுக்கு மாற்றப்பட்டது.  விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இராணுவப் புலனாய்வுத்துறை முக்கிய பங்கு வகித்திருந்தது.
இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் மட்டுமன்றி, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நாசவேலைகளை மேறகொள்வதிலும் இராணுவப் புலனாய்வுப் பிரிவு ஈடுபட்டது.  இதற்கென தமிழ் ஆயுதக்குழுக்களின் உறுப்பினர்களையும் இராணுவப் புலனாய்வுப் பிரிவு உள்வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்று நடைபெற்ற இராணுவப் புலனாய்வுத் தலைமையகத் திறப்பு விழாவில், இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க, இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க, இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் நாயகமும், யாழ். படைகளின் தளபதியுமான மேஜர் ஜெனரல் உதய பெரேரா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments