மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானைகளின் அச்சுறுத்தலிலிருந்து தம்மை பாதுகாக்குமாறு கோரி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பிரதேசத்தில் விவசாயிகள் இன்று (07.02.2014) ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர்.
விவசாய அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இந்த ஆரப்பாட்ட பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர் சீ யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலய முன்றிலிலிருந்து ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் பிரதான வீதியூடாக ஒரு கிலோமீற்றர் தூரத்தைக் கடந்து கமநல சேவைத் திணைக்களத்தையடைந்தது.
ஆர்ப்பாட்டக்காரர்கள்
மனிதனின் உயிர் பெறுமதி அற்றதா?
யானைக் காடு எங்கள் பிரதேசம் அல்ல,
நாங்கள் யானைக்கு எதிரானவர்கள் அல்ல,
யானை வெடியோ மின்சார வேலியோ தேவையில்லை,
எங்கள் காடு யானைகள் வளர்க்கும் இடம் அல்ல,
யானைகளை சரணாலயத்திற்கு கொண்டு செல்லுங்கள்,
யானைக்கு எதிரானவர்கள் மனித உயிரை பலி கொள்ளாதே!
போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திய கோசங்கள் எழுப்பியவண்ணம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்ட முடிவில் மகஜர் ஒன்று பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதரிடம் கையளிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக், காயப்பட்ட இறந்தவர்களின் குடும்பங்களுக்கு;, பாதிக்கப்பட்ட உடமைகள் வீடுகள், நஷ்டஈட்டை வழங்கவேண்டும், யானை தங்கியிருக்கும் பற்றைக் காடுகளை துப்பரவு செய்தல் மற்றும் துப்பரவு செய்வதற்கான அனுமதி வழங்கல் யானைக்குரிய பாதுகாப்பு வேலி அமைத்தல், ஏற்கனவே அமைக்கப்பட்ட வேலிகளை மறுசீரமைத்தல், உயிர் ஆபத்துக்களை ஏற்படுத்தும் யானைகளை வேறு இடங்களுக்கு வெளியேற்றுதல் போன்ற கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டன.
பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் இங்கு கருத்துதெரிவிக்கையில்,
நீங்கள் வழங்கிய மகஜரில் குறிப்பிடப்பட்ட விடயங்களை மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கவுள்ளேன். இதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு ஏற்கனவே தீர்வுகள் பெறப்பட்டிருந்தாலும் மக்களுக்கு யானைகளினால் அச்சுறுத்தல் உயிர் ஆபத்துகள் காணப்படுவதை என்னால் காணக்கூடியதாகவுள்ளது.
இந்த பிரச்சினைக்கு தீர்வுபெற்றத்தரும் நோக்குடன் எதிர்வரும் 17ம் திகதி மாவட்ட ரீதியான கூட்டம் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் விவசாயிகள் கலந்து கொண்டு தமது பிரச்சினைகளை தெரிவிக்கலாம்.
யானைத் தாக்குதலினால் இறப்பவர்களுக்குரிய நஷ்டஈடுகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. யானைக்குரிய பாதுகாப்பு வேலிகள் தற்போது திருத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றார்.



0 Comments