3வயதுப் பெண்குழந்தையை ஆயிரம் ரூபாவிற்கு விற்க ஒரு தமிழ்த்தாய் மட்டக்களப்பு காத்தான்குடி சந்தையில் பேரம் பேசிக்கொண்டிருந்தாள். அந்தக் குழந்தையை காப்பாற்றிக் கொண்டு வந்து தந்த தமிழனுக்கு முதலில் நன்றிகள்.
19.01.2014அன்று நேசக்கரம் அமைப்பானது டென்மார்க் அன்னை அறக்கட்டளை அமைப்பின் நிதியாதரவில் குசேலன்மலை (கரடியனாறு) மாணவர்களுடனான பொங்கல் விழாவினைச் செய்திருந்தது.
வளமையான வரவிலிருந்து 2பிள்ளைகள் அதிகமாயிருந்தார்கள். 2பிள்ளைகளின் வரவுக்கான காரணத்தை விசாரித்ததில் ஒரு பெண்குழந்தைக்கு நடந்த அவலம் தெரியவந்தது. குசேலன்மலை (கரடியன்குளம்) கிராமத்தில் பணத்திற்காக பல குழந்தைகள் விற்கப்பட்ட விடயமும் வெளிச்சத்துக்கு வந்தது.
அது மட்டுமன்றி பெண்குழந்தைகள் சிலர் அதே கிராமத்தில் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டதும் அந்தக் குழந்தைகளை மருத்தவமனைகளில் வைத்தே யாருக்காவது கொடுத்துவிட்டுப் போன பெற்றோரின் சிறுமிகளும் இந்தக் கிராமத்தில் வாழ்கிறார்கள்.
ஒரு 13வயதுச் சிறுமிக்கு நடந்த அவலம் :-
அவள் 13வயதில் விற்கப்பட்டாள் சில ஆயிரம் ரூபாவிற்கு. 13வயது முடிய முதல் அவள் கர்ப்பிணியாகி குழந்தையைப் பெற்றாள். அந்தக் குழந்தையை யாரோ மருத்துவமனையில் எடுத்துச் சென்று விட்டார்கள் தற்போது 15வயதாகும் அவள் தனது கிராமத்தில் உறவினருடன் வாழ்கிறாள்.
14வயதுச்சிறுமி தம்பிக்கு தாயாக :-
அவளுக்கு இப்போ 14வயதுதான். தாயார் எப்போ வீட்டுக்கு வருவார் என்பது தெரியாது. எப்போதாவது வருவார் பிறகு மீண்டும் காணாமல் போய்விடுவார். அவளே ஒரு குழந்தை தனது 3வயது நிரம்பிய தம்பியையும் பராமரித்து தானும் படிக்கிறாள். படிப்பதற்கு விருப்பம் உள்ள அவள் சிலவேளைகளில் தம்பியை விட்டுப்போக ஆளில்லாமல் தம்பியுடன் இருந்துவிடுவாள். ஆனால் படித்து பெரிய ஆளாகும் கனவு இவளுக்குள் இருக்கிறது.
ஒரு தாய் :-
இவளைத் தாய் என்று சொல்லவே முடியவில்லை. இவளுக்கு கணவன் இல்லை. கணவன்கள் இருக்கிறார்கள். பல பிள்ளைகள். ஓவ்வொரு பிள்ளையையும் சாராயத்துக்காக விற்றதும் சில ஆயிரம் ரூபாவுக்கு விற்றதும் நடந்திருக்கிறது. பணம் கிடைத்தால் இவள் எந்த ஆணையும் கணவனாக ஏற்றுக் கொண்டு கொஞ்சநாள் குடும்பம் நடாத்துவாள். பிறகு பிள்ளைகளை பணத்திற்காக விற்றுவிடும் கொடுமையைச் செய்யும் பெண்.
இச்செய்தியை நாளை அல்லது இன்னும் சில நாட்களுக்கு அனைத்து ஊடகங்களும் பரபரப்புச் செய்தியாகக் கூட ஓட வைக்கும். ஆனால் இது போல பல தமிழ்க் குழந்தைகளை முஸ்லீம்களுக்கும் சந்தைகளில் சாராயத்துக்கும் விற்கிற அவலம் கிழக்கு மாகாணத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
இவற்றைத் தடுக்க என்ன செய்யப் போகிறோம் என்பதனை ஒவ்வொரு பொறுப்பு மிக்க ஊடகமும் அரசியல்வாதிகளும் சிந்தித்தல் அதற்கான வழியை அல்லது தீர்வைத் தருதலே விற்கப்படும் குழந்தைகளுக்கான நன்மையாக முடியும்.
அண்மையில் கூட மட்டக்களப்பின் வறுமையென்று ஒரு செய்தி ஊடகங்களை ஆக்கிரமித்திருந்தது. அவலத்தை பார்த்த உடனே துடிக்கிற மனங்கள் அந்தச் செய்தியின் பரபரப்பு ஓய்ந்து போனதும் குலுக்கி விட்டு வைத்த சோடாப்போல வேகம் அடங்கி அமைதியாகி விடுகிறது.
மட்டக்களப்பின் ஏழைகள் என ஊடகங்கள் காட்டிய குடும்பங்கள் ஓரிடத்தில் வாழ்பவர்கள் அல்ல. இவர்கள் பணக்காரர்களின் வயல்களில் வயல் பராமரிப்புக்கு ஊதியத்துக்கு அமர்த்தப்படுவோர். இவர்கள் வாழ்வு இப்படியே போகத்துக்கு போகம் வயல்களில் தான் வாழ்க்கை. சொந்தமாக நிலமோ வீட்டையோ இவர்கள் வாங்கி வாழ்வதில்லை. பணம் கொடுத்தால் போதும் அதனை வாங்கிக் கொண்டு இன்னொரு இடத்தில் கையேந்தி நிற்பார்கள். ஊடகங்கள் காட்டிய அந்தக் குடும்பங்களில் இன்றைய நிலமையென்ன ?
இத்தகையவர்களை ஒருங்கிணைத்து அவர்கள் தங்களை சிந்திக்கும் வகையில் அவர்களைத் தயார்படுத்துவதற்கு நாளாகும். முதலில் தனது உழைப்பும் தனது குடும்பத்தின் மூலதனமும் சுரண்டப்படுகிறது என்பதனை உணர வைக்க வேண்டும். இவர்களோடு பழகி இவர்களுடன் வாழ்ந்து இவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வழிகளைச் செய்தலே நிரந்தர தீர்வைத் தரும். இதனை விடுத்து உதவிகளைக் கொடுத்துக் கொண்டிருக்க அவர்களும் வாங்கிக் கொண்டு கடந்து போய்விடுவதால் இத்தகைய நிரந்தர ஏழைகளாக வாழும் மனிதர்களை மாற்ற முடியாது.
உதாரணம் :-
கிழக்கில் மீன்பிடித்து வாழும் குடும்பங்கள் உள்ள கிராமங்கள் பல இருக்கிறது. இவர்களுக்கு வலைகளை முஸ்லீம் முதலாளிகள் வழங்கியிருப்பார்கள். ஆனால் பிடிக்கப்படும் மீன்களை வலைகொடுத்த முஸ்லீம்களுக்கே விற்க முடியும். மீன்களை கருவாடாக்கினாலும் அதனை வாங்குபவர்கள் முஸ்லீம் வியாபாரிகளே.
அதுவும் அவர்கள் கொண்டு போகும் தராசில் மட்டுமே நிறுத்து மீனை அல்லது கருவாட்டை வாங்குவார்கள். இந்த வியாபாரிகளின் தராசுகள் பல கிலோ மீன்களை கொள்ளையடித்துவிடும் கொள்ளைத்தராசுகள். தனது உழைப்பு சுரண்டப்படுவதை குறித்த மீனவர்கள் புரிந்து கொள்ளமாலேயே ஒரு நாளுக்கு ஒவ்வொரு தொழிலாளியின் உழைப்பிலும் அநியாயத்துக்கு பலநூறுகிலோ மீன்கள் கொள்ளையிடப்படுகிறது.
அதுமட்டுமன்றி மீனின் விலையைக்கூட நிர்ணயிப்பது முஸ்லீம் வியாபாரிகளே. மிகவும் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்யும் மீனை இந்த முதலாளிகள் கொள்ளை விலைக்கு விற்று இலகுவில் இலாபத்தை சம்பாதித்துக் கொள்கிறார்கள். மீனை வாங்கிச் சாப்பிடுகிறவர்கள் தமிழர்கள் என்பது அடுத்த விடயம்.
இங்கு மீனைப் பிடிக்கிறவர் தமிழன் மீனைவாங்கிச் சாப்பிடுகிறவர் தமிழர். இடையில் வியாபாரியாக வந்து அதிக இலாபத்தைப் பெறுபவர் முஸ்லீம் வியாபாரி. இங்கே தமிழனின் உழைப்பும் பொருளாதாரமும் எங்கே எப்படி இலகுவாக கொள்ளையிடப்படுகிறது என்பதனை சிந்தியுங்கள் ?
தமிழ் வளமும் உழைப்பும் சுரண்டப்படும் உண்மையை தன்னையே உணராத ஒரு சாதாரண தொழிலாளியால் உணரவே முடியாது. இத்தகையவர்களிடம் போய் உன்னை இவர்கள் சுரண்டுகிறார்கள் உணர்ந்து கொள்ளென்று சொன்னோமானால் சொல்கிற எங்களை உயிரோடு திரும்ப அனுமதிப்பதே உத்தரவாதமில்லை.
இந்த மீனவர்களுக்கு நாங்கள் தராசுகளை இலவசமாக வழங்கி உனது மீனை நீயே நிறுத்து விற்பனையைச் செய்யென்று கொடுக்கலாம். அடுத்து அவர்களுடனான நட்பைப்பேணி அவர்களது மனங்களை வென்று கொஞ்ச நாட்கள் செல்ல சிறு சுற்றுலாக்களுக்கு அழைத்துச் செல்லலாம். ஒருநாள் அவர்களுக்கான மன ஆற்றலுக்கான மாற்றமாகச் செய்யலாம். அத்தோடு அவர்கள் செய்யும் தொழிலாகிய மீன வியாபாரச் சந்தைகளுக்கு அழைத்துச் செல்லலாம்.
தொழிலாளர்களை மீன் வியாபாரம் நடக்கும் சந்தைகளுக்கு அழைத்துச் சென்று சந்தை நிலவரத்தை அவர்களே அறியக்கூடிய நிலமையை உருவாக்கலாம். இது மெல்ல மெல்ல அவர்கள் தங்களது உழைப்பு சுரண்டப்படுவதை அவர்களே உணர வழியைத் திறக்கும். இந்த மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு நீண்ட நாட்கள் பிடிக்கும்.
ஆனால் அப்படியொரு மாற்றத்தைக் காணாதவரை தொழிலாளிகள் ஏமாற்றப்படுவது தொடர்ந்து கொண்டே செல்லும். இதுவே இவர்களுக்கு பழகிப்போன விடயமாகிவிடும். ஒருபோதும் எங்களால் மீட்கப்பட முடியாத சமூகமாக இவர்கள் மாறிப்போக நாங்களும் காரணமாகிவிடுவோமோ என்ற பயம் எங்களுக்கும் இருக்கிறது.
இத்தகைய குடும்பங்களில் பிறந்த பிள்ளைகளின் நிலமையோ மிகவும் கவலைக்குரியது. படிப்பு அதன் பெறுமதியை உணராத பெற்றோர்களின் பிள்ளைகள் தொடர்ந்து கூலித்தொழிலாளர்களாகவே வாழ்ந்து போகிறது இச்சமூகம். இவர்களுக்கு உதவி நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து உதவிகளை வழங்கும் தமிழ் அமைப்புகளும் ஒருநாளைக்கு போய் பொருட்களை கொடுத்து அவற்றை படமெடுத்து காட்டுவதோடு நின்றுவிடாமல் அவர்களுக்கான நிரந்தரமான முன்னேற்றத்தைக் காட்டி விடுவதே சிறப்பாகும்.
இத்தகைய கிராமங்களுக்கு உதவ விரும்புவோருக்கான ஆலோசனையை அவர்களுக்கான முழுமையான கண்காணிப்பை எம்மால் செய்து தர முடியும். இப்பணிக்கு எம்மால் தெரிவு செய்யப்படுவோருக்கான மாதாந்த கொடுப்பனவினை வழங்கி அவர்களை நீங்கள் உதவும் கிராமங்களில் கவனிப்பாளர்களாக நியமிக்கலாம். இவ்வாறு நியமிக்கும் பொறுப்பு வாய்ந்தவர்களை அக்கிராமங்களில் குடியிருத்தி குறித்த கிராமங்களில் மக்களின் மனங்களை வென்று பணிகளை மேற்கொள்ளக்கூடியவர்களை எம்மால் தர முடியும்.
மற்றும் பின்தங்கிய கிராமங்களில் கல்வியை முன்னேற்றுவதில் முக்கியமான கவனத்தை செலுத்த வேண்டியது அவசியமாகும். அடிப்படை பொருளாதாரமோ அன்றாட உணவுக்கோ வசதியற்ற குடும்பங்கள் பிள்ளைகளை படிக்க அனுப்புவதையே விரும்பாதவர்கள். அன்றாடம் மாடு மேய்த்தோ வயலில் காவல் புரிந்தோ அன்றாட தேவையை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் உள்ள குடும்பங்களிடம் கல்வியே கண் என நிறுவ முடியாது.
இக்கிராமங்களில் பிரத்தியேக உளவள ஆற்றுப்படுத்தல் கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ளலாம். கற்றல் செயற்பாடுகளில் பங்கேற்கும் பிள்ளைகளுக்கான உணவையும் வழங்கி இவற்றை நடைமுறைப்படுத்தும் போது பிள்ளைகளை கல்வியில் கவனம் செலுத்தும் ஆற்றலை வளர்க்கலாம். பெற்றோரையும் மெல்ல மெல்ல உள்வாங்கி பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வழியை மேற்கொள்ளலாம்.
இதேபோன்றதொரு நடைமுறையையே குசேலன்மலை கிராமத்தில் ஆரம்பித்தோம். மாடுமேய்க்கப்போன பிள்ளைகள் கூட இக்கற்றல் செயற்பாட்டுக்கு வாரவிடுமுறை நாட்களிலும் மாலைநேர வகுப்புகளிலும் பங்கேற்கிறார்கள்.
பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்புகிற எம்மால் நடாத்தப்படும் பிரத்தியேக வகுப்புகளுக்கு அனுப்பும் பெற்றோருக்கு தொழில் முயற்சிக்கு உதவியென்ற ஒரு திட்டத்தை கடந்த வருடம் நேசக்கரம் தெரிவு செய்த சில கிராமங்களில் அறிமுகப்படுத்தியிருந்தோம். நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் வெற்றியளித்திருக்கிறது. இத்திட்டத்தை ஒவ்வொரு இடங்களுக்கும் நடைமுறைப்படுத்தலாம். இதன் மூலம் நீண்டகாலத் திட்டமான கல்வியை முன்னேற்றலாம்.
இணையத்தின் கையில் உலகம் சுழலும் இக்காலத்தில் மின்குமிழையே காணாத மின்பொறிகளைக் காணாத பிள்ளைகள் வாழும் கிராமங்களும் கிழக்கில் இன்னும் இருக்கிறது. இக்கிராமங்களிற்கான மின்வசதியை அப்பகுதிகளுக்கு உரிய அரசியல்வாதிகள் செய்து கொடுக்க வேண்டிய கடமையை அரசியல்வாதிகளுடன் தொடர்புகளை பேணும் புலம்பெயர் சமூகம் உணர்த்தலாம்.
பாமரனை இன்னும் அரசியல்வாதிகள் பாமரனாகவே வாழ வைக்கும் செயற்பாடுகள் தான் பல பிரதேசங்களில் நடைபெறுகிறது. புலம்பெயர் சமூகத்தின் உதவிகளை பல அரசியல்வாதிகள் தங்கள் தொகுதிகளில் மட்டும் வழங்குவது மற்றும் தேர்தல் காலங்களை அண்டிய காலத்தில் வழங்குவதோடு அவர்களது சமூகப்பணி முற்றுப்பெற்று விடுகிறது.
புலமைப்பரிசில் பரீட்சை முடிந்தால் பல அரசியல்வாதிகள் ஓடிப்போய் சித்தியடைந்த மாணவர்களுக்கு சேமிப்பு புத்தகமும் வழங்கி கௌரவிப்பும் செய்து விடுவதில் முன்வருவதை கடந்த 2வருடம் அதிகமாகக் காணலாம். இதே அரசியல்வாதிகளுக்கு உதவுவோர் புலம்பெயர் தமிழர்கள். பரிசில் வழங்கி படம் எடுக்கிறதற்கு முண்டியடிக்கும் இவர்கள் இம்மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பிரத்தியேக வகுப்புகளை நடாத்தவோ அல்லது அடைவுமட்டம் குறைந்த மாணவருக்கான சிறப்பு கற்றலை வழங்கக்கூடிய பொருளாதார வளத்தையோ கொடுக்க முன்வருவதில்லை. ஆனால் யாரோ பிள்ளைகளின் அடைவை மேம்படுத்த தங்கள் உழைப்பை இழந்திருப்பார்கள் ஆனால் பரிசு வழங்குவதில் மட்டும் அரசியல்வாதிகள் முதன்மையாகி விடுகிறார்கள்.
புலமைப்பரிசில் சித்தியடையும் மாணவர்கள் தான் தனியார் காப்புறுதி நிறுவனங்களின் முதலீட்டு இலாபமாகவும் இருப்பதை இந்த அரசியல்வாதிகளும் அறியமாட்டார்கள். புலமைப்பரிசில் சித்தியடையும் பாடசாலைகளை காப்புறுதி நிறுவனங்கள் உடனடியாக அணுகிவிடுவார்கள். சித்தியடைந்த பிள்ளைகள் எதிர்காலத்தில் மருத்துவராகுவார் அல்லது தொழில்நுட்பவியலாளர் ஆகுவார் என தாங்களே கணக்குப்போட்டு அவர்களுக்கு பெற்றோரை காப்புறுதி செய்யுமாறு போய்விடுவார்கள். 5ம் வகுப்பில் புலமைப்பரிசியில் சித்தியடையும் சாதாரண ஏழைக்குழந்தை க.பொ.சா.தரம் வரை கற்று முடிக்க தேவையான அடிப்படை உதவியை இந்த அரசியல்வாதிகளும் சரி காப்புறுதி நிறுவனங்களும் செய்ய முன்வராதது கவலையே.
பரிசு வழங்கவும் பொன்னாடை போர்த்தவும் முண்டியடிக்கும் அரசியல்வாதிகளே கிராமம் தோறும் உங்கள் பணிகளைச் செய்ய முன்வாருங்கள். ஒவ்வொரு அரசியல்வாதியும் முன்வந்தால் எங்கள் பிள்ளைகள் கல்வியில்; நீங்கள் நினைக்காத உச்சத்தை அடைந்துவிடுவார்கள். புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் உதவிகளை உதவினோம் என்ற கணக்கில் இல்லாமல் உருப்படியான முன்னேற்றத்தைக் காட்டும் வகையில் பயன்படுத்துங்கள் நிச்சயம் தமிழரின் வறுமையை அடுத்த 5வருடத்தில் இல்லாதொழிக்க முடியும்.
கிழக்கின் அரசியல்வாதிகளே !
உங்கள் தொகுதிகளில் உள்ள பின்தங்கிய கிராமங்களைப் பாருங்கள். எத்தனையோ பெண் குழந்தைகளும் ஆண் குழந்தைகளும் ஆயிரம் ரூபாவிற்கும் அரைப்போத்தல் சாராயத்திற்கும் விற்கப்படுகிறார்கள். இக்குழந்தைகளைக் காப்பாற்ற உங்கள் ஆதரவைத் தாருங்கள்.
போரால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் குழந்தைகளை விற்பது என்பது அங்கங்கு நடந்து கொண்டேயிருக்கிறது. சில குழந்தைகள் முஸ்லீம்களுக்கு விற்கப்பட்டு அந்தக் குழந்தைகள் முஸ்லீமாக மதம் மாற்றப்பட்டுள்ளது நிகழ்ந்திருக்கிறது.
19.01.2014 அன்று நேசக்கரத்தால் இனங்காணப்பட்ட 3வயது பெண் குழந்தைப் போல பல சின்னஞ்சிறு பிஞ்சுகளை விற்கும் பெற்றோரை சட்டத்தின் முன் நிறுத்த ஆவன செய்யுங்கள்.
நாங்கள் கண்டெடுத்த 3வயதுச் சிறுமி இந்த சமூகத்தை மாற்றும் சக்தியைக் கொண்ட சாதனைப்பெண்ணாக்கூட வரக்கூடும். அந்த அழகான பெண் குழந்தை போல எத்தனையோ குழந்தைகள் உங்கள் தொகுதிகளில் உள்ள கிராமங்களிலும் இருக்கிறார்கள். இத்தகைய அவலங்களும் இன அழிப்புத்தான்.
உங்களைத் தாக்குவதாக எண்ணாமல் மக்களுக்காக மக்களின் வாக்குகளை வென்ற ஒவ்வொரு அரசியல்வாதியும் மக்களின் பிரச்சனைகளை கவனிக்குமாறு தாழ்மையும் வேண்டுகிறோம்.
எங்களிடம் பெரும் நிதிவளமில்லை பெரும் அரசியல் செல்வாக்குமில்லை. ஆகையால்தான் உங்களிடம் வேண்டுதல் விடுக்கிறோம். எங்கள் இனத்தை மீள எழவைக்கும் சக்தி உங்களிடமே அதிகம் இருக்கிறது.
யுத்தம் முடிந்து 5வருடங்கள் இன்னும் சிலமாதங்களில் நிறைவடையப் போகிறது. இதுவரையில் புலம்பெயர் நாடுகளில் இருந்து எம்மவர்களால் கொடுக்கப்பட்ட உதவிகளில் அல்லது தொழில் முயற்சிகளில் பயனாளிகள் அடைந்த வெற்றி அல்லது பயனைத் திரும்பிப் பார்த்தோமானால் நாங்கள் நினைத்த வெற்றியை எட்டாமல் தோற்றுப் போனோம் என்பதே உண்மை.
இத்தோல்விக்கான காரணம் உதவினோம் ஆனால் உதவிகளை சரியாக இனங்கண்டு வழங்காமல் அள்ளிக் கொடுத்தோம். சோற்றைக் குடுத்தாலே வாழ்வை சிந்திப்பார்கள் என நினைத்து மாதாந்த கொடுப்பனவுகளைக் கொடுத்து உழைக்கும் இனத்தை சோம்பேறிகள் ஆக்கிவிட்டோம்.
பத்தாயிரம் ரூபா மாதம் பெறக்கூடிய தொழிலில் இணையுங்கள் எனக் கேட்டால் பிச்சைக்காசு பத்தாயிரத்துக்கு மாதம் முழுதும் கஸ்ரப்படுறதைவிட தொழிலே இல்லையென விண்ணப்பித்து பிரித்தானியாவிலிருந்து 50பவுண்ஸ் எடுப்பது இலகுவென்ற மனநிலையில் பலர் இருக்கிறார்கள். இவர்களையும் நாங்களே உருவாக்கிவிட்டோம்.
உழைப்பின் பெறுமதியை உணர வைக்க மாதாந்த கொடுப்பனவுகளிலும் தொகையாய் வழங்கும் உதவிகளிலும் தங்கியிருக்கவிடாமல் உழைப்புக்கான வழியைக் அமைத்துவிடுதல் அவசியமாகிறது. புலம்பெயர் நாடுகளில் ஒவ்வொருவரும் குளிர் , மழை , உணவக நெருப்பு வெக்கையில் நின்று உழைக்கும் உழைப்பின் பெறுமதியை உணர வைக்க வேண்டும். உழைத்தால் தான் வாழ்வு பிள்ளைகளை படிப்பித்தால் தான் வரலாறு என்ற உண்மையை உணர்த்த உதவிகளை ஒருங்கிணைத்து வழங்குவதும் உதவியமைப்புகளிடம் தொடர்பாடல் நட்புரிமையுடனான கலந்துரையாடல்களும் இருக்க வேண்டும்.
இந்த தொடர்பாடலுக்கும் ஒருங்கிணைவுக்கும் நேசக்கரம் என்றுமே துணைவர தயாராகவே இருக்கிறது. வீழ்ந்து போன எங்கள் இனத்தின் பொருளாதாரம் எழுச்சி காண வீழ்ந்து போன கல்விச் சமூகம் எழுச்சி பெற எங்கள் ஒருங்கிணைவின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த இணையுங்கள் என்ற வேண்டுகோளை உரிமையோடு விடுப்பதோடு எம்முடன் இணைந்து தாயகத்திற்கான பணிகளை மேற்கொள்ள விரும்புவோரையும் வரவேற்கிறோம்.
0 Comments