அவுஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பிராந்தியத்தில் அனற்காற்று வீசும் பின்னணியில், கட்டுப்படுத்த முடியாத காட்டுத் தீ பற்றி விக்டோரியா மற்றும் தென் அவுஸ்திரேலிய மாநிலங்களைச் சேர்ந்த தீயணைப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.இந்த இரண்டு மாநிலங்களும் சாதனையை நெருங்கக்கூடிய அளவிலான வெப்பத்தை சந்தித்து வருகையில், அவுஸ்திரேலிய தலைநகர பிராந்தியத்திலும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது.
கிராம்பியன்ஸ் தேசிய பூங்கா மற்றும் பெரும் பாலைவன தேசிய பூங்காவிற்கு அருகில் கட்டுப்படுத்த முடியாத காட்டுத்தீ பற்றி விக்டோரிய அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள். கிராம்பியன் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்காக நீரைப் பீய்ச்சியடிக்கும் எட்டு விமானங்களுடன், நூற்றுக்கணக்கான தீயணைப்புப் படைவீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளார்கள். பிரதேசவாசிகள் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேற வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலகின் உஷ்ணமான நகராக மாறிய அடிலெயிட்இன்றைய நண்பகலுக்குப் பின்னர், அடிலெயிட் நகரம் உலகின் மிகவும் உஷ்ணமான நகர் என்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டது. இந்த நகரின் வெப்பநிலை 44.2 பாகை செல்சியஸ் என்ற மட்டத்திற்கு உயர்ந்திருந்தது.1939ஆம் ஆண்டு வீசிய அனற்காற்றின்போது அவுஸ்திரேலியாவில் பதிவான 46.1 பாகை செல்சியஸ் வெப்பநிலையே, அந்நாட்டின் ஆகக்கூடுதலான வெப்பநிலையென சாதனைப் புத்தகங்களில் பதியப்பட்டுள்ளது.விக்டோரியாவில் 30 இற்கு மேற்பட்ட காட்டுத்தீ
விக்டோரியா மாநிலத்தின் 30 இற்கு மேற்பட்ட இடங்களில் கட்டுப்படுத்த முடியாத காட்டுத் தீ விளைந்திருப்பதால் இங்கு அவசர நிலைமை குறித்த எச்சரிக்கை அறிவித்தல்கள் அமுலில் உள்ளன. பல இடங்களில் உருவான காட்டுத்தீ வேறு இடங்களுக்குப் பரவி வருவதாக ஏபிசி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
மாநிலத்தின் தென்பகுதியில் இடிமின்னலுடன் கூடிய கடும் காற்று வீசி வருவதால் இங்கு பற்றைகள் பற்றியெரிந்து காட்டுத் தீ உருவாகலாமென வானிலை அவதான நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.அதிக உஷ்ணம் காரணமாக மின்விநியோக வலைப்பின்னல்கள் வலுவிழந்துள்ள நிலையில்,ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

0 Comments