இளைஞர் அலுவல்கள், திறன் அபிவிருத்தி அமைச்சின் செயற்பாடுகள் பெரும்பாலும் குறித்த ஒரு இனம் சார்ந்தும், ஆட்சி புரியும் அரசாங்கத்தின் அரசியலை பலப்படுத்தும் நோக்கம் சார்ந்துமே செயற்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இன்றைய இளைஞர் அலுவல்கள், திறன் அபிவிருத்தி அமைச்சின் வரவு செலவு திட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். சீ.யோகேஸ்வரன் மேலும் உரையாற்றுகையில்,
|
ஒரு நாட்டின் பெரும் சொத்தாகவும், முதுகெழும்பாகவும் திகழ்பவர்கள் இளைஞர்கள். இவர்கள் சிறந்த முறையில் உருவாக்கப்பட்டாலோ அந்நாடு சுபீட்சம் காண இடமுண்டு. இன்று உலகில் உள்ள அத்தனை நாடுகளும் இளைஞர்களின் அபிவிருத்தில் கூடிய கவனம் செலுத்தி வருகின்றது.
இவ்வேளை எமது நாட்டில் இளைஞர்களை வளம்படுத்தவும், அவர்கள் வேலையின்மை விரக்தியை குறைக்கவும், சர்வசக்தி மிக்கவனாக உருவாக்கவும் உட்பட்ட பல விடயங்களை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்ட அமைச்சே இளைஞர் அலுவல்கள் திறன் அபிவிருத்தி அமைச்சாக அமையும் என எதிர்பார்க்கின்றேன்.
ஆனாலும் இவ்வமைச்சின் செயற்பாடுகள் பெரும்பாலும் குறித்த ஒரு இனம் சார்ந்தும், ஆட்சி புரியும் அரசாங்கத்தின் அரசியலை பலப்படுத்தும் நோக்கம் சார்ந்துமே செயற்படுவதாக உள்ளது. திட்டங்கள் நூல் வடிவில் அல்லது இறுவட்டு வடிவில் பார்ப்பதற்கு நன்றாக உள்ளது, செயற்பாடு இத்திட்டங்களை முழுமைப்படுத்துவதாக இல்லை.
இன்று இவ்வமைச்சின் மூலம் பல அதிகார சபைகளும், பயிற்சி சபைகளும் இருக்கின்றன. ஆனால் எவ்வளவு தொழில் பயிற்சிளை வழங்கினாலும் இன்று வேலை இல்லா திண்டாட்டம் இளைஞர் சமூகத்தில் இருந்து மறையவில்லை.
கடந்த வருடங்களில் பல்கலைக் கழகத்தை முடித்து வேலையின்றி கஷ்ரப்பட்டவர்கள் தற்போது வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். ஆனால் பல்கலைக் கழகம் செல்ல முடியாது கல்வித் தகைமைகளில் குறைவாக இருக்கும் இளைஞர் யுவதிகள் நிரந்தர தொழில் இன்றி மகிவும் கஷ்ரப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இளைஞர் அலுவல்கள் அமைச்சு பயிற்சி வழங்குவதுடன் நின்று விடாது தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்கக் கூடியதாக அமைய வேண்டும். முன்பு ஐக்கிய தேசிய கட்சி காலங்களில் இளைஞர் விவகார அமைச்சு தொழில் அமைச்சு அல்லது வேறு ஏதாவது ஒரு அமைச்சுடன் தொடர்புபட்டிருந்தால் தொழில் வாய்ப்பு ஏற்பாடுகள் நடைபெற்றது.
இவ்வேளை இளைஞர் அலுவல்கள் திறன் அமைச்சின் கீழ் தொழில் நுட்பக் கல்வி மற்றும் பயற்சி திணைக்களம் இயங்குகின்றது. இது 1893ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இதன் வரலாற்றில் 120 வருடங்களுக்கு பின் ஒரே ஒரு தமிழ் பணிப்பாளர் நாயகம் நியமனம் பெற்றுள்ளார். இவர் இலங்கை நிருவாக சேவையில் தகமையுள்ளவராகவும், பல அனுபவங்களை கொண்டவராகவும் காணப்பட்டார். இந்நிலையில் இவர் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவர் என்ற வகையில் இந்நடவடிக்கைக்காக அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.
இன்று இவ் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இளைஞர் பாராளுமன்றம் என்று ஒன்று நடாத்துகின்றது. அண்மையில் மனித உரிமைகள் ஆணையாளரையும் கொண்டு வந்து இளைஞர் பாராளுமன்ற நிகழ்வை காட்டியுள்ளனர். ஆனால் இவ் இளைஞர் பாராளுமன்றம் முதலாவது தடவை நடைபெற்ற தேர்தலில் சகல பிரதேசங்களிலும் இளைஞர்கள தீவிரமாக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்காக போட்டியிட்டனர்.
ஆனால் 2வது தடவையாக நடைபெற்ற இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் போட்டியில் குதித்தமை மிகக்குறைவாகும். குறிப்பாக 2வது இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் 198 பேர் இளைஞர் வாக்கு மூலமும் 138 பேர் போட்டி இன்றியும் தெரிவாகியுள்ளனர்.
குறிப்பாக இந்நாட்டின் முஸ்லிம், தமிழ் இனங்களின் இளைஞர் யுவதிகள் இத்தேர்தலில் கூடிய கவனம் செலுத்தவில்லை. காரணம் இளைஞர் பாராளுமன்ற அமர்வுகளிலும் இவ்விரு இனத்தை சேர்ந்தவர்களும் கண்துடைப்பான முறையிலேயே நடாத்தப்பட்டுள்ளனர்.
இவ்விளைஞர் பாராளுமன்றத்தில் தெரிவாகி பின் தங்களது பதவிக் காலம் முடிந்த இளைஞர் யுவதிகள் பெரும்பாலும் இன்று தொழிலின்றியும், கவனிப்பின்றியும் திரியும் நிலையை காணக்கூடியதாகவுள்ளது. இவர்கள் இப்போது மிகவும் கஷ்ரப்படுகின்றனர். இந்நிலைமைகளை கருத்தில் கொண்டே இளைஞர்கள் இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி பிரதேசத்தில் எந்தவொரு இளைஞரும் தேர்தலில் போட்யிடவில்லை. வவுணதீவு, வாழைச்சேனை, செங்கலடி, கிரான், களுவாஞ்சிக்குடி, கோறளைப்பற்று மத்தி இவைகளில் ஒவ்வொருவர் மட்டுமே இதற்கு விண்ணப்பித்து வாக்களிப்பு இன்றி தெரிவானார்கள். குறிப்பாக நாடு முழுவதும் 138 பேர் இந்நிலையில் தெரிவாவதற்கு இதன் திட்டமிடல் தன்மை இளைஞர் சமூகத்தை மேம்படுத்தும் விதத்தில் அமையவில்லை என்பதையே காட்டுகின்றது.
இன்று வடக்கு கிழக்கு மாகாணங்கள் யுத்த சூழலால் பாதிக்கப்பட்ட நிலையில் இங்கு வாழும் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் தொழில் இன்மை, வறுமை போன்றவற்றை நீக்கும் வகையில் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இயங்கும் மன்றங்கள், நிறுவனங்கள், அதிகார சபைகள் மேற்கொள்ளும் பங்களிப்பு மிகக் குறைவாகவே உள்ளது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மூலம் விசேட தேவையுள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில் பயிற்சி, சிசிச்சை என்பன பிரித்தானியா, அமெரிக்கா, இத்தாலி, அவுஸ்ரேலியா, ஸ்பானியா, இந்தியா போன்ற நாடுகளின் தன்னார்வ தொண்டர் நிறுவன உதவி மூலம் நடாத்தப்பட்டதாக அமைச்சின் இறுவட்டு வெளிப்படுத்துகின்றது.
இதனால் வடக்கு கிழக்கை சேர்ந்த விசேட தேவைக்குரியவர்கள் எத்தனை பேர் பயனடைந்தவர்கள் என்பதை நான் அறிய விரும்புகின்றேன். ஏனெனில் இன்று வடக்கு கிழக்கில் யுத்தம் காரணமாக பெருகியுள்ள விசேட தேவைக்குரிய இளைஞர் யுவதிகள் அன்றாட வாழ்க்கைக்காக மிகவும் கஷ்ரப்பட்டுக் கொண்டிருப்பருதை இச்சபையில் குறிப்பிட விரும்புகின்றேன்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு வடக்கு கிழக்கு மாகாணங்களில் முன்பு பாரிய பயிற்சி நிலைகள் இருந்தன. இவை யுத்த சூழலால் பாதிக்கப்பட்டு விட்டது. இன்று வடக்கு கிழக்கில் கணவனை இழந்தும், விசேட தேவைக்குரியவராக இருந்தும், உறவுகளை இழந்தும், பறிகொடுத்தும் துன்புறும் இளைஞர் யுவதிகளுக்கு உதவும் வகையில் இங்கு புதிய பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதேபோன்று பயிற்சி நிலையங்களை புனரமைக்க வேண்டும்.
திருகோணமலையில் நிலாவெளி தொழில் பயிற்சி நிலையத்தில் 1985ம் ஆண்டுக்கு முன் ஹோட்டல் முகாமைத்து பயிற்சி உட்பட பல பயிற்சிகளைக் கொண்ட பாரிய பயிற்சி நிலையம் 888 ஏக்கரில் அமைந்திருந்தது. இது சரித்த ரத்வத்தை என்பவர் பணிப்பாளர் நாயகமாக இருந்த காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியின் போது காணப்பட்டது. டூவின இளைஞர் யுவதிகளுக்கு இங்கு பல பயிற்சி நெறிகளும், தொழில் பயிற்சி வாய்ப்பும் வழங்கப்பட்டன.
ஆனால் இன்று அக்காணிகள் தெற்கில் உள்ள 52 தனவந்தர்களுக்கு அவர்கள் வருமானம் பெற வழியேற்படுத்தி பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இக்காணியை தக்க வைக்க இவ் இளைஞர் விவகார அமைச்சு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இது கிழக்கு மாகாணம் என்பதாலா? அதில் சிறிதளவு காணியாவது பெற்று ஒரு தொழில் பயிற்சி நிலையத்தை தாபித்து இளைஞர் யுவதிகளுக்கு உதவ வேண்டுமென்று அமைச்சரை கேட்டுக் கொள்கின்றேன்.
இன்று திருகோணமலை மாவட்டத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட காரியாலயத்தில் ஒரு தமிழரும் உத்தியோகத்தர்களாக இல்லாத நிலை காணப்படுகின்றது. தற்காலிக நியமனத்தில் வெருகல் பிரதேசத்தில் உதவியாக இளைஞர் சேவை அதிகாரி நியமிக்கப்பட்ட ஒரு தமிழ் இளைஞரையும் நிறுத்தி வைக்கும் முயற்சி நடைபெறுவதாக அறிகின்றேன்.
அத்தோடு திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட காரியாலயம் வாடகை கட்டடங்களிலேயே இயங்கி வருகின்றது. இதற்கான சொந்தக் கட்டடம் இதுவரை அமைக்கப்படவில்லை. இவ்வியடத்தில் கவனம் செலுத்துமாறு அமைச்சரை அன்பாக கேட்டுக் கொள்கின்றோம். இவ்விடயமாக முன்பும் அமைச்சின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளேன்.
அத்தோடு இவ்விரு மாவட்ட இளைஞர் யுவதிகள் விளையாட்டு பயிற்சி பெறுவதற்கோ, தங்களது விளையாட்டு நிகழ்வை நடாத்துவதற்கோ தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கென எதுவித மைதானமும் இல்லை. வசதிகளை ஏற்படுத்தாது விளையாட்டு அபிவிருத்தி பற்றி பேசி பயனில்லை. அமைச்சு இதிலும் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.
ஆனால் கொரிய அரசின் தலைமையுடன் தெரிவு செய்யப்பட்டுள்ள தொழில் நுட்பக் கல்லூரியில் மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் கல்லூரியை சேர்த்துக் கொள்ளாமையினை இட்டு எங்கள் கவலையை தெரிவிக்கின்றோம்.
குறிப்பாக மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரி கடந்த 5 வருடங்களுக்கு மேலாக நிரந்தர அதிபர் அற்ற நிலையில் பதில் அதிபராக நிருவாகிக்கப்படுகின்றது. இத்தொழில்நுட்ப கல்லூரிக்கு 8 நிரந்தர விரிவுரையாளர்கள் அவசியமாக தேவையாக உள்ளனர்.
உபகரண வசதி, இயந்திர வசதி, பௌதீகவளம் இருந்தும் படிப்பிப்பதற்கு நிரந்தர விரிவுரையாளர் இன்றி 7 பாடநெறிகள் மூடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சனி, ஞாயிறு பகுதிநேர வகுப்புகளுக்கும் நிரந்தர வரிவுரையாளர்கள் இல்லாத காரணத்தால் மணவர்கள் தமது பயிற்சி நெறியை தொடர முடியாது கஷ்ரப்படுகின்றனர்.
அத்தோடு அவுஸ்ரேலிய அங்கீகாரம் பெற்ற தேசிய தொழில்சார் தகைமை அதாவது Nஏஞ பாடநெறிக்கு பௌதீகவளம் இல்லாத நிலை காணப்படுகின்றது. இதற்கு ஏற்ற பௌதீக வளத்தை ஏற்படுத்தி உதவுமாறு அமைச்சை கேட்டுக் கொள்கின்றேன். இலங்கையிலே தற்போது 27170 மாணவர்கள் Nஏஞ பாடநெறிகளை கற்கும் வேளை இம்மாணவர்களுக்கு இதற்கான வசதியை ஏற்படுத்துவது அவசியமாக உள்ளது.
இவ்வேளை திருகோணமலை தொழில்நுட்ப கல்லூரிக்கு 160 மாணவர்களுக்கு ஏற்ற வகுப்பறை, தொழில் நுட்ப மண்டபம் ஆகிய வசதி கொண்ட இருமாடி கட்டடம் அமைக்கும் முயற்சியை வரவேற்கின்றேன். வாழ்க்கை தொழில் பயிற்சி அதிகார சபை (ஏவுயு) மூலம் 18 வருடங்களில் 433000 இளைஞர் யுவதிகள் பயனடைந்ததாக குறிப்பிட்டுள்ளீர்கள். இவர்களுக்கு பொருளாதார ரீதியில் பாரிய பங்களிப்பு நல்கி உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளீர்கள். வடக்கு கிழக்கு மாகாணங்களில் எத்தனை பேர் பயனடைந்தவர்கள் என்பதை அறிய விரும்புகின்றேன்.
இன்று தொழில்பயிற்சி அதிகாரி சபையால் நடாத்தப்படும் தொழில்பயிற்சி நெறிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி, ஓந்தாச்சிமடம், வந்தாறுமூலை, மட்டக்களப்பு உட்பட்ட தொழில் பயிற்சி நிலையங்களில் பங்குபற்றுனர்கள் மிகவும் குறைவாக உள்ளனர். இதற்கு காரணம் வறுமையாகும். எனவே இவ்வறிய இளைஞர் யுவதிகளுக்கு ஏதாவது ஒரு கொடுப்பனவு உதவியை வழங்கி பயிற்சி நெறியில் இவர்கள் பயிற்சி பெற உதவுமாறு அமைச்சை கேட்டுக் கொள்கின்றேன்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பில் ஒரு தொழில் பயிற்சி நிலையம் இயங்குகின்றது. ஆனால் இங்கு மூன்று நான் பயிற்சி நெறிகளே நடைபெறுகின்றது. 50 பேருக்கு மேல் பயிற்சி பெறும் அளவிற்கு கட்டட வசதி இல்லை. இப்பயிற்சி நிலையத்தை அபிவிருத்தி செய்யும் முகமாக தேவைகளை கட்டடங்களை தாபிக்கவும், பயிற்சி நெறிகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க முன்வருமாறு வேண்டுகின்றேன்.
அத்தோடு இங்கு 5 ஏக்கருக்கு மேல் காணி பயன்பாடற்று காணப்படுவதால்;. இதை விவசாய பண்ணை, விவசாய பாடநெறி போன்றவற்றுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவும் கோருகின்றேன். புதிதாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா தொகுதியிலும், மடடக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியிலும் இரு தொழில் பயிற்சி நிலையங்களை உருவாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அன்பாக கோருகின்றேன்.
தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை மூலம் வடக்கு கிழக்கு இளைஞர் யுவதிகளுக்கென வெளிநாட்டு உதவியுடன் தேசிய மட்ட பயிற்சி நிலையம் ஒன்றை ஏற்படுத்தவுள்ளதாக தங்களது திட்டத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இதை வரவேற்கின்றோம். எழுத்தளவின்றி செயலளிவில் மேற்கொள்ள முன்வருமாறு அன்பாக வேண்டுகின்றோம்.
2008ம் ஆண்டு கொரிய நாட்டு உதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில. கல்குடா தொகுதியில் வாழைச்சேனை பிரதேசத்தில் இளைஞர்களுக்கான தொழில் நுட்பக் கல்லூரி ஒன்று அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டது. பிரதேச செயலாளர் காணியும் வழங்கியுள்ளார். சென்ற வரவு செலவுத் திட்டத்திலும் இது சார்பாக பேசியுள்ளேன். ஆனால் இன்று வரை இதுசார்பாக எந்த பதிலையும் காணலவில்லை. ஏன் இத்தொழில் நுட்பக் கல்லூரி இன்னும் இங்கு நிறுவப்படவில்லை என்பதை அறிய விரும்புகின்றேன்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர்களை ஓய்வூதிய திட்டத்தில் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கின்றேன். இதன்பின் வந்த சமுர்த்தி அதிகார சபை ஓய்வூதிய திடடத்துள் உள்வாங்கப்படும் வேளை அதிகார சபையில் முதல் இடத்தில் இருக்கும் இவ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தை ஏன் ஓய்வூதிய திட்டத்தில் கொண்டுவர முடியாது.
ஆகவே இளைஞர் விவாகார திறன் அபிவிருத்தி அமைச்சின் திட்டங்கள் சார்பான இறுவெட்டு குறிப்பீடுகள் இந்நாட்டின் இளைஞர்களின் தொழில் இன்மை விரக்தியை நீக்குவதாக அமைய வேண்டும் என கேட்டுக் கொண்டு முடிக்கின்றேன்.
கடந்த பாராளுமன்ற வரவு செலவுத் திட்டத்திலும், இளைஞர் விவகார ஆலோசனைக் கூட்டத்திலும் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் நீண்ட காலத்திற்கு பின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்திற்கு முன்னாள் கிழக்கின் முதலமைச்சர் ஊடாக இந்தியா தூதரகத்தால் வழங்கப்பட்ட பஸ்வண்டி மிகவும் உடைத்த நொறுங்கிய நிலையில் தற்போது தேசிய இளைஞர் சேவை மன்றம் பொறுப்பேற்று கொண்டு செல்லப்பட்டது என்பதை அறிகின்றேன். இந்த நடவடிக்கைக்கு அமைச்சரை பாராட்டுகின்றேன்.
இதேபோன்று USAID தொண்டர் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட ஐம்பது இலட்சம் பெறுமதியான இசைக்கருவி பொருட்களை கண்டு பிடித்து இளைஞர்களிடம் கையளிக்குமாறு அமைச்சரை கேட்டுக் கொள்கின்றேன். இப்பொருட்களை வழங்கும் போது யார் மாவட்ட செயலக உதவிப் பணிப்பாளராக இருந்தாரோ அவரே தற்போது கிழக்கு மாகாணப் பணிப்பாளராக தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் இருக்கின்றார்.
|
0 Comments