விசா விதிகளை மீறியதாக இலங்கையில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு திருப்பியனுப்பப்பட்ட தமிழ்நாட்டு ஊடகவியலாளர் மகா. தமிழ் பிரபாகரன், காவலில் வைக்கப்பட்டிருந்தபோது உளவியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்தார். அவர் நேற்றைய தினம் விடுதலையாகி நாடு திரும்பியவுடன் வழங்கிய பேட்டியின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் வழங்கிய பேட்டியின் சில முக்கிய அம்சங்கள் வருமாறு,
|
நான் எந்தவொரு ஊடக நிறுவனப் பிரதியாகவோ, பணியாளராகவோ இலங்கைக்கு செல்லவில்லை. விகடனில் புலித்தடம் தேடி... தொடர் கட்டுரை மட்டும் எழுதியிருந்தேன். அவ்வளவுதான். என்னைக் கடற்கரையோரமாக வைத்தே இராணுவத்தினர் கைது செய்தனர். நான் பல காட்சிகளை எனது புகைப்படக் கருவியில் பதிவு செய்திருந்தேன். ஆனால் இராணுவத்தினர் என்னைக் குற்றச்சாட்டுவதற்காக இராணுவ உயர் பாதுகாப்பு பிரதேசங்களையும் முகாம்களையும் மட்டும் படமெடுத்ததாக தெரிவித்திருந்தனர்.
என்னைக் கைது செய்த மூன்று நாட்களும் ஆயுதபாணிகள் சகிதம் மிரட்டும் பாணியிலேயே நடத்தினார்கள். நீ சொல்வதை நாம் எழுத முடியாது. நாம் கேட்பதற்கு சாதமான பதிலாகவே நீ சொல்ல வேண்டும் என என்னை வற்புறுத்தினார்கள். நாச்சிக்குடா காவல்துறையில் சாப்பிட்டபின் குடிதண்ணீருக்குப் பதிலாக பெற்றோலை வைத்திருந்தார்கள். அதிலிருந்து எனக்கு அவர்களின் மீது சந்தேகம் வலுத்திருந்தது. விசாரணையின் போது என்னை ஒரு விடுதலைப்புலிகளின் ஆதரவாளராக, ஒரு தமிழராக மட்டும் அவர்கள் நோக்கினார்களே தவிர , சாதாரண மகனாக அவர்கள் விசாரணை செய்யவில்லை.
சுற்றுலா விசாவில் வந்ததாக இராணுவத்தினர் சுமத்திய குற்றச்சாட்டிற்கு அவர் பதிலளிக்கையில், அதெல்லாம் ஒரு குற்றச்சாட்டு கிடையாது, ஊடகவியலாளர் வீசா பெற்று வந்து யாழ்ப்பாணம் சென்ற சனல்4 நிறுவனத்தினர் உட்பட சர்வதேச செய்தியாளர்களை கடந்த மாதங்களில் வவுனியாவில் வைத்து தடுக்கவில்லையா? இவைகளெல்லாம் வேடிக்கையான குற்றச்சாட்டுக்கள் என்றார். சரி. அப்படியிருந்தாலும் ஏன் என்னை முன்னால் தடுக்கவில்லை. போகவிட்டு பின்னால் வந்து ஏன் தடுத்தார்கள்? தான் இலங்கை அரசின் அராஜகப் போக்குகளை உலகமறியச் செய்வேன் என்றும் தெரிவித்தார்.
|
0 Comments