போரின்போதும் அதன் பின்னரும் இலங்கையின் எப்பாகத்திலும் தமிழர்கள் சுதந்திரமாக வாழக்கூடிய நிலை இருந்து வருகிறது. ஆனால் சிங்கள மக்கள்தான் அன்றும் இன்றும் சுதந்திரமாக வாழ முடியாதுள்ளனர் என்று கூறியுள்ளார் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன்.
இங்கே எந்த மக்க ளின் மனித உரிமை கள் மீறப்பட்டுள்ளன? பிரச்சினை யாருக்கு இருக்கிறது? மனித உரிமைகளைப் பற்றிப் பேச வேண்டியவர்கள் யார்? என்று நேற்றுப் பல கேள்விகளைத் தொடுத்தார் அவர்.
“போரில் இராணுவத்தினரும் உயிரிழந்தனர். இவர்களின் உயிரிழப்புக்குப் பொறுப்புக் கூறுவது யார்? தமிழருக்கு ஒரு நியாயம் சிங்களவர் களுக்கு ஒரு நியாயமா?” என்றும் அவர் கேள்விகளை எழுப்பினார்.
“நடந்தது நடந்து முடிந்துவிட்டது. இனி நடக்க வேண்டியவற்றைப் பார்ப்போம். அதைவிடுத்து ஒருவர்மீது ஒருவர் குற்றஞ்சுமத்துவதில் பயனில்லை. இலங்கை தொடர்பில் சர்வ தேச நாடுகள், தப்பான அபிப்பிராயத் தைக் கொண்டுள்ளன. இதனை பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூனிடமும் நான் எடுத்துரைத்தேன்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க இலங்கை வந்திருந்த பிரிட்டன் பிரதமருக்கும் தமக்கும் இடையிலான சந்திப்பின்போது தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தொடர்பில் “உதயனி’டம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
போர்க்குற்றங்கள்
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் இரு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மக்கள் மட்டும் பாதிப்படையவில்லை. போரின்போதும் அதன் பின்னரும் நாட்டின் நிலைமைகளில் பாரிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த மூன்று வருடங்களாக நாட்டு மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர். யுத்தம் பற்றி எனக்கு அதிகமாகத் தெரியாது. அதனால் அது குறித்து நான் பேச விரும்பவில்லை. இருப்பினும், போரில் இராணுவத்தினரும் கொல்லப்பட்டனர். அப்படியாயின் அவர் களது உயிருக்கு யார் பொறுப்பு கூற வேண்டியவர்கள்?
யாருக்கு மனித உரிமை பிரச்சினை?
இலங்கையில், எந்தத் தமிழரும் எங்கும் சுதந்திரமாக வாழலாம் என்பதை இலங்கையின் சாராசரி குடிமகன் – தமிழன் – இலங்கையன் என்ற வகையில் நான் கூறிக் கொள்கின்றேன். போரின்போது தமிழர்கள் வடக்கிலும் வாழ்ந்தனர்.
கொழும்பு உள்ளிட்ட தெற்கிலும் சுதந்திரமாக வாழ்ந்தனர். வாழும் உரிமை இருந்தது. ஆனால் சிங்கள மக்களுக்கு போரின்போதும் வடக்கிற்குச் செல்ல முடியாத நிலை இருந்தது. அங்கு சென்று வாழ்ந்திருந்தால் சிங்கள மக்கள் உயிருடன் இருந்திக்க முடியாது.
ஆனால் போர் முடிவடைந்துள்ள தற்போதைய சூழ்நிலையிலும், சிங்கள மக்கள் வடக்கில் சென்று வாழ முடியாத நிலை உள்ளது. முல்லைத்தீவில் மட்டும்தான் சிறிதளவு சிங்கள மக்கள் இருக்கின்றனர்.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதியில் சிங்கள மக்களைக் குடியேற்ற வேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகின்றது. அப்படியாயின், எந்த மக்களது மனித உரிமைகள் மீறப்படுகின்றன? யாருக்கு அந்தப் பிரச்சினை இருக்கிறது?
தப்பான அபிப்பிராயத்தில் சர்வதேசம்
சர்வதேச நாடுகள் இலங்கை தொடர்பில் தப்பான அபிப்பிராயத்தைக் கொண்டுள்ளன. இதனை பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூனிடம் நான் தெரிவித்தேன். இலங்கை நன்றாக அபிவிருத்தி அடைந்துள்ளது என்று அவர் கூறனார்.
அத்துடன், சில விடயங்களில் அரசு அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், கனடா முதலான நாடுகள் தங்களது அரசியல் நலன்கருதி இலங்கை தொடர்பில் கருத்து வெளியிடுகின்றன.
அரசியல் பேசவில்லை
நான் அரசியல் பேசவில்லை. எனக்கு அரசியல் தேவையும் இல்லை. அதனால் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் குறித்து நான் கருத்திற்கொள்வதில்லை. வடக்கு மக்களுக்குத் தேவையான அபிவிருத்திகளை அரசு செய்கின்றது. என்னால் இயன்ற உதவிகளை நானும் செய்கின்றேன். இன்னும் சிறிது காலத்த்தில் வடக்கு மேலும் அபிவிருத்தி அடைந்துவிடும்” என்றார்.
ஆக மொத்தம் சிங்கள் விசுவாசத்தை நன்கு வெளிப்படுத்தியுள்ளார் சிங்கள முரளி!
0 Comments