பொதுநலவாய மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது குறித்து புதுடில்லி இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில், இதுகுறித்து உடனடியாக தீர்மானிக்க வேண்டும் என ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
நவம்பர் மாதம் 10ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரையில் பொதுநலவாய மாநாடு நடைபெறவுள்ளது. இதில் 15ஆம் 16ஆம் திகதிகளில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் அமர்வுகள் நடைபெறவுள்ளன.
இந்தியாவின் தேசிய நலனைக் கருத்திற் கொண்டே பிரதமர் தீர்மானம் எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர்கள் ஒடுக்கப்படுவதாகத் தெரிவித்து அமர்வுகளில் பங்கேற்கக் கூடாது என தமிழக அரசியல் கட்சிகள் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அமர்வுகளில் பங்கேற்பது குறித்து இன்னமும் இந்திய பிரதமர் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு அமர்வுகளில் பங்கேற்பது அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறும் பொதுத் தேர்தலில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்திலுள்ள காங்கிரஸ் கட்சி, அமர்வுகளைப் புறக்கணிப்பது, இலங்கையுடனான உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும் என்ற அதிகாரிகளின் ஆலோசனைகளையும் ஆழமாக ஆராய்ந்து வருகிறது.
0 Comments