கதிர்காமம் மாணிக்க கங்கைக்குள் பெருமளவு முதலைகள் வந்துள்ளதால் பக்தர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் நீராடுவதனை தவிர்த்துக் கொள்ளுமாறு கதிர்காமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார். கதிர்காமம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழையினால் யால காட்டுக்குள்ளிருந்து பெருமளவு முதலைகள் மாணிக்க கங்கைக்குள் ஊடுருவியுள்ளன. இவை ஆள்நடமாட்டமில்லாத பகுதிகளில் பதுங்கியிருந்து மனிதர்களை தாக்கக்கூடியவை.
|
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இதேபோன்றதொரு சந்தர்ப்பத்தில் மாணிக்க கங்கை கரையில் குழந்தையை அமர வைத்துவிட்டு தாய் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது முதலை குழந்தையை நீருக்குள் இழுத்துச் சென்று கொன்றது. இதேபோன்று ஹொரணையிலிருந்து கதிர்காமத்திற்கு வந்த பக்தர் குழுவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் முதலையினால் இழுத்துச் செல்லப்பட்டார். ஏனையோர் எடுத்த முயற்சியின் காரணமாக இளைஞன் காப்பாற்றப்பட்ட போதும், முதலை அவரது வலது கையுடன் ஆற்றுக்குள் மறைத்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, மழைகாலத்தில் சிறிய அருவிகளுக்கூடாக முதலைகள் மாணிக்க கங்கைக்கு வருவது வழமையே என்றும், முதலைகள் உண்ணக்கூடிய மீன் வகைகள் மாணிக்க கங்கையில் இருப்பதே இதற்குக் காரணம் என்றும் ஊவா வலையத்துக்கான வன விலங்கு உதவி பணிப்பாளர் சிசிர டி சில்வா, தெரிவித்துள்ளார்.
|
0 Comments