கடந்த நான்கு நாட்களில், நான்கு இந்து கோவில்கள் மலையகத்தில் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவங்கள், வட பகுதியின் இந்து கோவில் அழிப்பு-கொள்ளை கலாச்சாரம் மலையகத்துக்கும் பரவி விட்டுள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரத்தினபுரி மாவட்ட கொலொன்ன போலிஸ் பிரிவில் ஹேஸ் தோட்ட அம்மன் கோவிலில் ஒரு சம்பவமும், மாத்தறை மாவட்ட தெனியாய போலிஸ் பிரிவில் தெனியாய, அணில்கந்த தோட்டங்களில் அம்மன், முருகன் கோவில்களில் மூன்று சம்பவங்களும் என மொத்தம் நான்கு கொள்ளை சம்பவங்களில் கோவில் உண்டியல் பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன என்ற தகவல்கள் எனக்கு இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளன என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
|
இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
இது தொடர்பாக போலிஸ் மாஅதிபர் இலங்ககோனை தொடர்பு கொண்டு நான் கடுமையாக ஆட்சேப புகார் தெரிவித்த பிறகு தென் பிராந்திய சிரேஷ்ட பிரதி போலிஸ் மா அதிபர் விக்கிரமரத்ன, மாத்தறை சிரேஷ்ட போலிஸ் அத்தியட்சகர் தென்னக்கோன் மற்றும் கொலொன்ன, தெனியாய போலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ஆகியோர் என்னை தொடர்பு கொண்டு தமது விசாரணை நடவடிக்கைகளை விபரித்தார்கள். சம்பந்தப்பட்ட தோட்ட மக்களிடம் விசாரித்த போது ஸ்தலத்துக்கு மோப்ப நாய்களுடன் பொலிசார் வந்து விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சொன்னார்கள்.
வடக்கில் நடப்பது போல் இவையும் திட்டமிட்ட இந்து கோவில் அழிப்பு-கொள்ளை சம்பவங்களா என்ற சந்தேகம் இப்பகுதி மலையக மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் சந்தேக நபர்கள் பற்றி தகவல்கள் இருப்பின் உடன் போலிசுக்கு அல்லது எனது கைபேசிக்கு (777312770) அறிவியுங்கள் என கேட்டுகொள்கின்றேன்.
|
0 Comments