முன்னொரு காலத்தில் இந்தியா என்ற தேசத்தை மகாத்மா காந்தி ஊடாகப் பார்த்தோம். பின்னர், ஜவகர்லால் நேரு ஊடாகப் பார்த்தோம். அதன் பின்னர், அன்னை இந்திராகாந்தி... எனப் பிரமாணடமாகத் தெரிந்த இந்தியா இப்போது கேவலத்தின் உச்சியில் கொடி ஏற்றிப் பறக்கவிட்டுள்ளது. ஊழல் செய்வதற்கு அச்சமில்லை... அதனை மறைப்பதிலும் வெட்கம் இல்லை... உச்ச அதிகாரத்திலிருக்கும் இந்தியப் பிரதமர் முதல், கீழ் மட்டப் பணியாளனான ஆபீஸ் பையன்வரை ஊழலுக்கு பதவி வித்தியாசமும் இல்லை. வயது வித்தியாசமும் இல்லை.
|
ஐந்து ரூபாய் லஞ்சம் வாங்கிய கீழ் மட்ட ஊழியன், பதவியிலிருந்து தூக்கப்படுகின்றான். பத்திரிகைகளிலும் புகைப்படத்துடன் செய்தியாகிவிடுகின்றான். ஆனால், கோடிக்கணக்கில் ஊழல் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட பிரதமர் மன்மோகன்சிங் இப்போதும் தனது பதவியில் அசையாமல் உட்காந்திருக்கிறார். அவரது நிலக்கரி ஊழல் குறித்த ஆவணங்கள் அனைத்தும் அவரது அலுவலகத்திலிருந்தே காணாமல் போய்விடுகின்றது. அதற்காகவும் அவர் வெட்கப்படவில்லை.
இந்தியாவில் நடைபெறும் குற்றச்செயல்களுக்கான உண்மையான குற்றவாளிகள் தெரிந்தோ, தெரியாமலோ தப்ப வைக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக அனுப்பி வைக்கப்படுபவர்களோ, அப்பாவி மனிதர்களோ தண்டனைக்கு உள்ளாக்கப்படுவது இந்தியாவுக்குப் புதிதானது அல்ல. ஆனாலும், வில தருணங்களில் சத்தியம் தோற்கடிக்கப்பட முடியாத நிலையில் உண்மைகள் வெளிவந்து விடுகின்றன. அந்தத் தருணங்கள் எல்லோருக்கும், எப்போதும் உரிய நேரத்தில் கிடைத்து விடுவதில்லை.
1991 மே மாதம் 21-ம் திகதி தமிழகதத்தின் சிறிபெரும்புத்தூரில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு ஒன்றில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். ஒரு பெண் மனித வெடி குண்டு ராஜிவ் காந்தியின் மரணத்திற்குக் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணைகள் எதுவும் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாகவே, தீர்ப்பு எழுதப்பட்டு, விடுதலைப் புலிகள்மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த குண்டு வெடிப்பின் சூத்திரதாரியாகக் கருதப்பட்ட ஒற்றைக்கண் சிவராஜா உட்பட, அவரது சகாக்கள் அனைவரும் அதன் பின்னரான காவல்துறையின் சுற்றிவளைப்பின்போது தற்கொலை செய்து கொண்டனர்.
விடுதலைப் புலிகள்மீது கொலைக் குற்றத்தைச் சுமத்திய இந்திய காவல்துறையினால், அதற்கு மேல் நகர முடியவில்லை. அதனால், வழமையான பாணியில் குற்றவாளிகளுக்கான நபர்களையும், அதற்கான ஆவணங்களையும் தயார் செய்தார்கள். அவசரம், அவசரமாக நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டார்கள். அதற்கான சாட்சியங்களும் தயார் செய்யப்பட்டது. பெரும்பாலானவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதோடு இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வரவே இந்திய நடுவண் அரசு முடிவு செய்தது.
கைது செய்யப்பட்டவர்களில் 27 பேருக்கு தடா நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட மேன் முறையீட்டில் பேரறிவாளன், சாந்தன், முருகன், அவரது மனைவியான நளினி ஆகியோருக்கு மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சட்ட, மனிதாபிமானப் போராட்டத்தில் நளினியினது மரண தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
22 வருட காலங்களாக தூக்குக் கயிற்றின் நிழலில் அந்த மூவரது காலங்களும் தொலைக்கப்பட்டாலும், அவர்களுக்கு மரண தண்டனை வழங்கியே தீரவேண்டும் என்ற முடியில் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் உறுதியோடு இருந்தனர். இந்த மரண தண்டனையை நிறைவேற்றுவது என்பது தமிழகத்தின் உணர்வுகளோடு விளையாடுவதாகவே இருக்கும் என்பது மத்திய அரசுக்குப் புரிய வைக்கப்பட்ட காரணத்தால், காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வருவதற்கு முன்னதாகவே இந்த மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான சூழ்நிலை வலிந்து உருவாக்கப்பட்டது.
துக்குத் தண்டனை வழங்கப்பட்ட பின்னரும் நீண்ட காலமாகத் தண்டனை வழங்காமல் சிறையில் வைக்கப்பட்டிருந்த குற்றவாளிகளது 'பைல்'கள் தூசி தட்டி எடுக்கப்பட்டு, மும்பைத் தாக்குதல் குற்றவாளி காசாப் தூக்கிலிடப்பட்டார். அதன் பின்னர், அப்சல் குரு... என தூக்குத் தண்டனைகள் தொடர்ந்தன. அவசரம் அவசரமாக தமிழகத்திலும் தூக்குக் கயிறுகள் தயாராக்கப்பட்டன.
ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட மூவரில், சாந்தனும், முருகனும் ஈழத் தமிழர்கள். தமிழுணர்வாளர்கள் தவிர்ந்து, அவர்களுக்காக நீதிப் போராட்டம் நடாத்துவதற்கு யாருமே கிடையாது. ஆனால், பேரறிவாளனது தாயார் 22 வருடங்களாக வடித்த கண்ணீரும், அவர் நடாத்திய தனி மனிதப் போராட்டமும் ஒரு அரச பயங்கரவாதத்தை அம்பலத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
பேரறிவாளன் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்தை, அந்த வழக்கின் போக்கிற்கு இசைவாக நான் மாற்றம் செய்தேன் என, அந்த வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரியான தியாகராஜன் தெரிவித்துள்ளார். பொய்யான ஆதாரங்களை உருவாக்கியதன் மூலம் பேரறிவாளன் என்ற இளைஞன் தனது இளமைக் காலம் முழுவதையும் சிறையில், மிகுந்த மன உளைச்சலுடனும், மரண அச்சத்துடனும் கழித்துள்ளார். இது பேரறிவாளனுக்கு மட்டும் நிகழ்ந்த கொடுமையாக இருக்க முடியாது. சாந்தன், முருகன், நளினி மீதான குற்றச்சாட்டுக்களும் இவ்வாறே சோடிக்கப்பட்டிருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
சட்டத்தையும், நீதியையும் ஏமாற்றுவதன் மூலம் தண்டிக்கப்பட்ட அப்பாவியான இளைஞன் பேரறிவாளன் தன் வாழ்நாளின் பெரும் பகுதியைத் தெலைத்துவிட்டு, தனக்கான நீதிக்காகக் காத்திருக்கின்றான். நாகரிகம் அடைந்துவரும் மனித குலத்தில் நடைபெற்ற மிகக் கொடுமையானதொரு சம்பவமாக இது கருத்தப்பட வேண்டும். இதற்கான முழுப் பொறுப்பையும் இந்திய நடுவன் அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். பொறுப்பை ஏற்று, பாதிக்கப்பட்ட அந்த இளைஞனிடமும், நாட்டு மக்களிடமும் மன்னிப்புக் கோரும் பக்குவம் .ந்திய ஆட்சியாளர்களுக்கு இருக்கப்போவதில்லை. நீதி மன்றங்களாவது, நீதியை நிலைநாட்ட முன்வர வேண்டும்.
|
0 Comments