எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டால் மூன்று பிரபலமான பெண்களில் ஒருவரை பொதுவேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் எதிர்க்கட்சிகள் கலந்துரையாடி வருகின்றன. அடுத்த வருடத்தில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அப்படி தேர்தல் அறிவிக்கப்பட்டால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, இலங்கையின் 43வது பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா ஆகிய மூவரில் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வைப்பது என எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. பொது வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை நிறுத்துவது தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் கடந்த வாரத்தில் இருமுறை பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக தெரியவருகிறது
|
அதேபோல் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவை பொது வேட்பாளராக போட்டியிட வைக்க முடியும் என சிரேஷ்ட சட்டத்தரணிகள் சிலர் அண்மையில் ரணில் விக்ரமசிங்கவுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதனிடையே ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக அனோமா பொன்சேகாவை நிறுத்துவது என சரத் பொன்சேகாவின் ஜனநாயக் கட்சி தீர்மானித்துள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாது போனால் அனோமா பொன்சேகாவை பொது வேட்பாளராக போட்டியிட வைப்பது தொடர்பில் சரத் பொன்சேகா, ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். ரணில் விக்ரமசிங்கவுக்கு பதிலாக வேறு ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் அனோமா பொன்சேகா கட்டாயம் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
|
0 Comments