கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் விளையாடும் கடைசி மற்றும் 200-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் வரும் 14-ம் தேதி தொடங்குகிறது. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான இந்தப் போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இதனால் ரசிகர்களின் வசதிக்காக ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பன இன்று தொடங்கும் என்றும், இதன்மூலம் 3 ஆயிரம் டிக்கெட்டுகள் வரை விற்பனை செய்யப்படும் என்றும் மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவித்திருந்தது. இதுதவிர 10 ஆயிரம் ரூபாய் விலையிலான 1500 சிறப்பு டிக்கெட்டுகளும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. வான்கடே ஸ்டேடியத்தில் 32 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வசதி உள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் சங்கம் அறிவித்தபடி இன்று காலை ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை தொடங்கியது. ஆனால் ஒரே சமயத்தில் பலர் இணையதளத்தில் பதிவு செய்ய முற்பட்டதால் இன்று பிற்பகல் இணையதளம் முடங்கியது. இதனால் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். இதேபோல் மகாராஷ்டிர மாநிலம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் வான்கடே ஸ்டேடியத்தில் உள்ள மும்பை கிரிக்கெட் சங்கத்தில் டிக்கெட் வாங்குவதற்காக திரண்டனர். இதனால் அங்கும் குழப்பம் ஏற்பட்டது. ஆன்லைன் மூலமாக மட்டுமே டிக்கெட் விற்பதாக ரசிகர்கள் பேசியதால், பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் அவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.
0 Comments