இனவாதிகளுக்கான சாட்டையடியாக அமைந்திருக்கும் மூன்று மாகாண சபை தேர்தல் முடிவுகள்
இனவாதம் பேசி தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பதை வடமேல் மற்றும் மத்திய மாகாணசபை தேர்தல்கள் எடுத்துக் காட்டியுள்ளன. இனவாதத்தைக் கக்கும் ஹெல உறுமய மற்றும் விமல் வீரவன்சவின் கட்சி என்பன இத்தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளன.இதன் மூலம் தாம் இனப்பாகுபாட்டை விரும்பவில்லை என்பதை சிங்கள மக்கள் எடுத்துக் கூறியுள்ளனர். இது இனவாதத்துக்கான சாட்டையடியாகும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமுன்ற உறுப்பினர் பொன் செல்வராசா கூறினார்.
வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பன்சேன பிள்ளையாரடி, மண்டபத்தடி ஆகிய கிராமங்களுக்கு விஜயம் செய்த அவர் அங்கு வாழும் மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார்.அதன்பின் மண்சேனை ஆலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஆலயத்தலைவர் ஐ. பாஸ்கர தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மேலும் கூறியதாவது:-வடக்கு தேர்தலை நடத்த வேண்டாம் என்று பேரினவாதிகள் கூக்குரல் எழுப்பினர்.ஆனால் அது நடைபெறவில்லை.தற்போது வேறு விதமாகக் கூறுகின்றனர்.அபிவிருத்தியின் மூலம் தமிழ் மக்கள் நிம்மதியான வாழ்வு வாழமுடியாது. எமது அபிலாஷைகள் நிறைவேறக்கூடியதான நிரந்தரத் தீர்வின் மூலமே அது சாத்தியமாகும்.கடந்த 60 வருட காலமாக இதனை நாம் கோரி பல வழிகளிலும் போராடி வருகின்றோம்.நிரந்தரத் தீர்வின்றி சமாதான வாழ்வை எட்ட முடியாது. தமிழ் மக்களின் அபிலாஷைகளை தீர்க்கக்கூடியதான அரசியல் தீர்வுதான் நமக்கு வேண்டும்.போர் முடிந்தும் தமிழர்களுக்கு நிம்மதியான வாழ்வு கிட்டவில்லை.இங்கு வாழும் மக்களின் வாழ்க்கையே அதற்கு சாட்சியாகவுள்ளது.மாகாண சபை முறை ஒரு தீர்வு இல்லை.இதன் காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை ஏற்கவில்லை எனவும் கூறினார்.
0 Comments