Home » » இந்தியா–ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் தொடக்கம்

இந்தியா–ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் தொடக்கம்

இந்தியா–ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் தொடக்கம்



ஜார்ஜ் பெய்லி தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக 7 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுவதற்கு முன்பாக ஒரு 20 ஓவர் போட்டியிலும் களம் இறங்குகிறது. இதன்படி இந்தியா–ஆஸ்திரேலியா இடையிலான 20 ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.
இவ்விரு அணிகளிலும் பெரும்பாலான வீரர்கள் சமீபத்தில் முடிந்த சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடிய அனுபவத்தோடு வந்திருக்கிறார்கள். அதனால் களத்தில் அதே உத்வேத்துடன் மல்லுகட்டுவார்ள். இந்திய அணியை பொறுத்தவரை சமீப காலமாக நல்ல பார்மில் உள்ளது. உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அணிக்கு திரும்பியுள்ள யுவராஜ்சிங்கின் வருகை அணியை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
போட்டி குறித்து இந்திய கேப்டன் டோனி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு வீரர் அணிக்கு திரும்பும் போது அவருக்கு நெருக்கடி இருக்கத்தான் செய்யும். முடிந்த வரை யுவராஜ்சிங்கை நெருக்கடி இல்லாமல் இயல்பாக விளையாட முயற்சி செய்வோம். தனி வீரராக அணிக்கு வெற்றி தேடித்தரக்கூடிய திறமை யுவராஜ்சிங்குக்கு உண்டு என்பதை அறிவோம். அவர் மிகப்பெரிய வீரர். தனது திறமை மீது கேள்வி எழும்பியபோதெல்லாம், தன்னை நிரூபித்து காட்டியிருக்கிறார். இந்த தொடரில் அவர் அசத்துவார் என்று நம்புகிறேன்’ என்றார்.
ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங் மூன்றிலும் ஓரளவும் பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச் அண்மையில் இங்கிலாந்துக்கு எதிராக 156 ரன்கள் குவித்து 20 ஓவர் போட்டியில் உலக சாதனை படைத்தார். இதே போல் ஆல்–ரவுண்டர் ஷேன் வாட்சன் இந்திய மண்ணில் விளையாடிய அனுபவத்தில் கைதேர்ந்தவர். இவர்கள் தான் அந்த அணியின் பேட்டிங் தூண்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விரு அணிகளும் இதுவரை ஏழு 20 ஓவர் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 4–ல் ஆஸ்திரேலியாவும், 3–ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன.
இந்திய அணி இந்த ஆண்டில் விளையாடும் முதல் 20 ஓவர் சர்வதேச போட்டி இது தான். இந்திய வீரர்களுக்கு, நைக் நிறுவனம் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஆடை நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய உடையுடன் தான் இந்திய வீரர்கள் இன்று களத்தில் குதிக்கிறார்கள்.
போட்டி நடக்கும் ராஜ்கோட்டில் சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இன்றும் அங்கு 60 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதால் ஆட்டத்தில் மழை அச்சுறுத்தலாக இருக்கக்கூடும்.
ஆனால் வடிகால் வசதி சிறப்பாக இருப்பதால், மழை நின்றதும் தண்ணீரை துரிதமாக வெளியேற்றிவிட்டு போட்டியை தொடங்கி விட முடியும் என்று மைதான நிர்வாகிகள் கூறியிருக்கிறார்கள். ராஜ்கோட் மைதானம் பொதுவாக ரன் குவிப்புக்கு சாதகமானது. இந்த முறையும் அதில் எந்த மாற்றமும் இருக்காது எனறு பிட்ச் பராமரிப்பாளர் தீரஜ் பிரசன்னா கூறியுள்ளார்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–
இந்தியா: ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, விராட் கோலி, யுவராஜ்சிங், சுரேஷ் ரெய்னா, டோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், இஷாந்த் ஷர்மா, புவனேஸ்வர்குமார், ஜெய்தேவ் உனட்கட் அல்லது வினய்குமார் அல்லது அமித் மிஸ்ரா.
ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச், ஷேன் வாட்சன், கிளைன் மேக்ஸ்வெல், ஜார்ஜ் பெய்லி (கேப்டன்), ஆடம் வோக்ஸ், நிக் மேடின்சன் அல்லது ஹென்ரிக்ஸ், பிராட் ஹேடின், பவுல்க்னெர், நாதன் கவுல்டர் நிலே, மிட்செல் ஜான்சன் அல்லது கிளைன்ட் மெக்கே, சேவியர் டோஹர்த்தி.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |