காஷ்மீரில் இந்திய கிராமத்தை ஆக்கிரமித்தது பாகிஸ்தான்! எல்லையில் பதற்றம்!!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லையோர கிராமமான ஷாலா படாவை பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி வருகிறது. அத்துடன் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்து திடீர் தாக்குதல்களையும் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் மன்மோகன்சிங், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் நியூயார்க்கில் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
இதனிடையே கடந்த செப்டம்பர் 23-ந் தேதியன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஷாலா படா என்ற எல்லையோர கிராமத்தை பாகிஸ்தான் ராணுவத்தினர் ஆக்கிரமித்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த கிராமம் கைவிடப்பட்ட கிராமம். இங்கு மக்கள் கைவிட்டுச் சென்ற வீடுகளில் தற்போது பாகிஸ்தான் ராணுவத்தினர் தங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்தினரை வெளியேற்ற இந்திய படையினர் தாக்குதல் நடத்தி வருவதாகவும் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
0 comments: