கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பிரதி அதிபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய கல்முனை வலயக் கல்வி அலுவலக பிரதி கல்வி பணிப்பாளர் சற்று முன்னர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை ஸாஹிராக் கல்லூரிக்கு இன்று (29) விஜயம் செய்த கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் திட்டமிடலுக்கு பொறுப்பான பிரதி கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் சில வகுப்புக்களுக்கு சென்று பரிசோதனை செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை தொடர்ந்து இவர் பிரதி அதிபர் ஏ.கபூர் மீது தாக்குதல் நடத்தியிருந்தார்.
இதனையடுத்து கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் குழப்பகரமான சூழ்நிலை ஏற்பட்டது. இதன்போது பிரதி கல்வி பணிப்பாளரின் மோட்டார் வாகனம் அடித்து நொறுக்கப்பட்டு முற்றாக சேதப்படுத்தப்பட்டது.
அத்துடன் கல்லூரி அதிபரின் காரியாலயத்தில் இருந்து பிரதி கல்வி பணிப்பாளர் வெளியேறிச் செல்ல முடியாதவாறு மாணவர்கள் திரண்டு சுற்றி வளைத்து கோஷங்களையும் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த கல்முனைப் பொலிசார் நீண்ட நேர இழுபறிக்குப் பின்னர் இவரைப் பாதுகாப்பாக மீட்டு கைது செய்து கல்முனைப் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.


0 Comments