மட்டக்களப்பு பொலிசார் திருடப்பட்ட பொருட்களை 48 மணி நேரத்தில் கண்டுபிடித்து சாதனை படைத்தனர்
எதுவித ஆதாரங்களும் சாட்சிகளும் இன்றி 48 மணித்தியாலத்துக்குள் மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தினை கண்டுபிடித்து கொள்ளையிடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் மேமன் சில்வா தெரிவித்தார்.
இன்று (14) பிற்பகல் மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில், கொள்ளையிடப்பட்டு மீட்கப்பட்ட பொருட்களை ஊடகவியலாளர்களுக்கு காட்டிய பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு நகரில் உள்ள பிரபல இலத்திரனியல் விற்பனை நிலையம் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணையின்போது ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் புலனாய்வுத்துறையினர் மேற்கொண்டுவந்த தீவிர விசாரணையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பகுதியை சேர்ந்தவர். வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுல பகுதியில் இவர் பதுங்கியிருந்தபோதே கைதுசெய்யப்பட்டார்.
இவர் கொள்ளையிட்ட இலத்திரனியில் விற்பனை நிலையத்துக்கு அருகில் உள்ள சலூனில் தொழில் புரிந்துவந்துள்ளார். விசாரணைக்கு சென்ற பொலிஸார் அங்கிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று தொடர்பில் விசாரணை செய்தபோது பொலிஸாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தினையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்தபோதே இந்த கொள்ளைச்சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டது.
மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள் கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பு வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்தில் வைத்து கொள்ளையிடப்பட்டது என தெரியவந்தது.
இதன்போது கடந்த வியாழக்கிழமை இரவு மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்துக்கு முன்பாகவுள்ள மட்டக்களப்பின் பிரபல இலத்திரனியில் விற்பனை நிலையத்தின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இரண்டு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எல்.சி.டி தொலைக்காட்சி பெட்டி, மடிக்கணினி கையடக்க தொலைபேசிகள், கமராக்கள் என்பன கொள்ளையிட்டுச் செல்லப்பட்டுள்ளன.
குறித்த பொருட்களும் சந்தேக நபரிடம் இருந்து மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதன்போது மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி கிங்கஸ்லி குணவர்த்தன, மட்டக்களப்பு மாவட்ட குற்றப்புலனாய்வுத்துறை பொறுப்பதிகாரி றஹீம் உட்பட இந்த கொள்ளைச்சம்பவம் தொடர்பில் விசாரணை செய்து கண்டுபிடித்த பொலிஸ் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
0 Comments