தமிழக மீனவர்களின் 2 கோடி பெறுமதியான 5 படகுகளை அரசுடமையாக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு!
இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்ட காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மீனவர்களுக்கு சொந்தமான 5 விசைப்படகுகளை அரசுடமையாக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காரைக்கால் மற்றும் நாகபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 34 பேரையும் அவர்கள் சென்ற 5 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.
கடந்த ஜூலை 31ம் தேதி சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். நீதிமன்றத்தால் சிறைவைக்கப்பட்ட மீனவர்கள், செப்டம்பர் 6ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் இவர்களது படகுகள் விடுவிக்கப்படவில்லை.
இதையடுத்து படகுகளை விடுவிக்க கோரி நீதிமன்றத்தில் இந்திய தூதரக அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று 26 ம் தேதி நடக்கும் என நீதிபதி அறிவித்தார்
யாழ்ப்பாணம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 34 மீனவர்களில் படகின் உரிமையாளர்களான 5 மீனவர்களை தவிர எஞ்சிய 29 பேரையும் விமானம் மூலம் இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப இந்திய தூதரக அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
ஆனால், படகுகளை விடுவிக்கப்படாத நிலையில் தாங்கள் நாடு திரும்ப மாட்டோம் என மீனவர்கள் இந்தியாவிற்கு வர மறுத்து விட்டனர்.
இதன்பின், கொழும்பு சிறப்பு முகாமில் தங்கியிருந்த மீனவர்களிடம் இந்திய தூதரக அதிகாரிகள் படகுகள் மீட்டுத் தரப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து கடந்த 22 ம் தேதி மீனவர்கள் 34 பேரும் மண்டபத்திற்கு வந்தனர்.
இந்நிலையில், நாகை மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பான விசாரணை நேற்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது தமிழக மீனவர்களின் சார்பில் யாழ்ப்பாணம் நீதிமன்ற முன்னாள் நீதிபதி திருநாவுக்கரசு படகுகளை விடுவிக்க வலியுறுத்தி வாதிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இலங்கை அரசு வழக்கறிஞர், ‘‘மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்கள். எனவே குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர்களது படகுகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றார்.
இதையடுத்து, பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன், ‘‘இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த தமிழக மீனவர்கள் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டனர். எனவே குற்றவாளிகளுக்கு சொந்தமான 5 படகுகளையும் பறிமுதல் செய்து அவற்றை அரசுடமையாக்கப்படுகிறது என அறிவித்தார்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்த குற்றத்தை ஒப்புக்கொண்டால்தான் சிறைபிடிக்கப்பட்ட படகுகளுடன் விடுவிக்கப்படுவார்கள் என இந்திய தூதரக அதிகாரிகள் சிறையில் இருந்த மீனவர்களிடம் கூறியுள்ளனர்.
இதனை நம்பிய தமிழக மீனவர்கள் தாங்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தது உண்மைதான் என நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.
இதனால், மீனவர்களை மட்டும் விடுவித்த பருத்தித்துறை நீதிமன்றம் அவர்களது படகுகளை விடுவிக்காமல் இலங்கை அரசின் உடமை என அறிவித்துவிட்டது.
இதன் மூலம் தமிழக மீனவர்களுக்கு சொந்தமான சுமார் 2 கோடி மதிப்புடைய 5 விசைப் படகுகளை இழக்க இந்திய அதிகாரிகளே காரணமாக இருந்துள்ளனர்.
இலங்கையின் பிடியில் இருக்கும் மேலும் 25க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளுக்கும் இதேநிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் மீனவர்களிடையே எழுந்துள்ளது.
0 Comments