பிரதேச மட்ட திருமண நல்லிணக்க சபை அமைத்தலும் சேவை வழங்குனர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வும் கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.
குறித்த நிகழ்வினை மனித எழுச்சி அமைப்பும் (HEO) அம்பாறை மாவட்ட செயலகமும் ஒருங்கிணைந்து மேற்கொண்டுள்ளன.
இதன் போது நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பளீல் நெறிப்படுத்தலில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, சிரேஸ்ட சட்டத்தரணியும் கல்முனை காதி நீதிபதியுமான எம்.டபிள்யு.ஆர்.ஏ.எப். இன் சட்ட ஆலோசகருமான எப்.எம்.ஏ அன்சார் மௌலானா, நில உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பின் இணைப்பாளரும் (PARL) மனித எழுச்சி அமைப்பின் (HEO) இயக்குநருமான கே. நிஹால் அஹமட் ,மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.டி.எம் கலீல், கலந்துகொண்டனர்.
மேலும் குடும்ப வாழ்வில் பாதிப்புற்று நலிவுறும் பெண்கள் குழந்தைகளைப் பாதுகாத்தலுக்கும், காதி நீதிமன்றங்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கான சமூகத்தின் பொறுப்புணர்வை அதிகரிக்கும் திட்டம் குறித்து இங்கு வளவாளராக கலந்து கொண்ட அஷ்ஷெய்க் கலாநிதி றவூப் ஸெய்ன் குறிப்பிட்டார்.
இது தவிர அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைய கடந்த 14.12.2023 அன்று மாவட்ட ரீதியாக ஒன்று கூடலில் எடுக்கப்பட்ட பிரதேச ரீதியான சபை அமைத்தலும் பிரதேச மட்டத்தில் சேவை வழங்குனர்களாக உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வினை தொடர்ச்சியாக நடாத்துதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் காதி நீதிமன்றங்கள் அமைந்துள்ள 8 பிரதேசங்களிலும் மேற்குறித்த நோக்கங்களை நடைமுறைப்படுத்துவதற்கான செயலமர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட நில உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பின் இணைப்பாளரும் (PARL), மனித எழுச்சி அமைப்பின் (HEO) இயக்குநருமான கே. நிஹால் அஹமட் தற்போது அமைக்கப்படவுள்ள பிரதேச மட்ட சபைக்கு பிரதேச செயலாளர் தலைவராகவும் மற்றும் காதி நீதிபதி ஆலோசகராகவும் இருந்து தலைமைத்துவத்தை வழங்குவதுடன் பொருத்தமானவர்கள் இச்சபைக்கு உள்வாங்கப்படவுள்ளனர். மேலும் இச்சபையினூடாக பிரதேசத்தில் தீர்க்க முடியுமான குடும்ப பிரச்சினைகளைத் தீர்த்து விட்டு அதன் பிறகு தீர்க்க முடியாத பிரச்சினைகளை காதிநீதிமன்றத்திற்கு எடுத்து செல்லல், காதி நீதிபதிகளுக்கு நிருவாக ஆளணியைக் கூட்டி கட்டமைப்பை வலுப்படுத்த பிரதேச செயலகங்களில் உள்ள பொருத்தமான அபிவிருத்தி உத்தியோகத்தர்களை காதி நீதிமன்றத்தில் அலுவலகக்கட்டமைப்பை ஏற்படுத்தி காதி நீதிபதிகளுடைய செயற்பாடுகளை இலகுபடுத்தி கொடுத்தல் தொடர்பில் ஆராய்தல் ஊடாக எதிர்காலத்தில் சமூகம் பல்வேறு நன்மைகளை பெற்றுக்கொள்ளும் என தனதுரையில் குறிப்பிட்டார்.
குறித்த செயலமர்வில் பிரதேச திருமண பதிவாளர்கள், உலமாக்கள், பெண்கள் சிறுவர்கள் சார்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பொறுப்பாளர்கள் ,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments: