இலங்கை எதிர்கொள்ளும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளித்து நிலையான மற்றும் உள்ளடக்கிய மீட்சியை ஊக்குவிக்கவேண்டும் என சர்வதேச நாணயநிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைமை அதிகாரி பீட்டர் புரூவர் தெரிவித்துள்ளார்.
யூடியுப் வீடியோவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின்மீட்சி மற்றும் ஸ்திரதன்மைக்கு ஊக்குவித்தல்ஆகியவை குறித்து வீடியோவில் கருத்து தெரிவித்துள்ள அவர் அதிகரித்த பொருளாதார நெருக்கடிகள் மற்றும் கொள்கை தவறுகளிற்கு பின்னர் இலங்கை மீளகட்டியெழுப்புவது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணயநிதியம் உதவுவதற்கே இங்கு வந்துள்ளது,இலங்கைக்கு மிகவும் தேவையான தருணத்தில் அடுத்த நான்கு வருடத்திற்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க சர்வதேசநாணயநிதியம் முன்வந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2019 முதல் காணப்பட்ட குறிப்பிடத்தக்க அளவு வரிவிலக்களிப்பும் எதிர்பார்க்கப்பட்ட சீர்திருத்தங்களில் காணப்பட்ட தாமதங்களும் இலங்கை அதிகளவு கடன் குறைந்தளவு அந்நியசெலாவணி கையிருப்புடன் கொரோனா பெருந்தொற்று காலத்திற்குள் நுழையவேண்டிய நிலையை ஏற்படுத்தியது என தெரிவித்துள்ள பீட்டர் புரூவர் அந்நியசெலாவணி கையிருப்பில் இல்லாததால் மின்துண்டி உணவு மருந்து அத்தியாவசியப்பொருட்கள் போன்றவற்றிற்கான தட்டுப்பாடு உருவானது நீண்ட பெட்ரோல் வரிசைகள் உருவாகின எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தனது வரலாற்றில் முதல் தடவையாக தனது கடனை திருப்பி செலுத்த முடியாத வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டது,இதற்கான சுலபமான தீர்வுகள் இல்லை இந்த பாரிய பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு அனைவரும்; ஒன்றிணையவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும் அதேவேளை நலிவடைந்த நிலையில் உள்ள மக்களிற்கு ஆதரவளிக்கவேண்டும்,என வேண்டுகோள் விடுத்துள்ள சர்வதேச நாணயநிதியத்தின் அதிகாரி சர்வதேச சமூகம் இலங்கையின் முயற்சிகளிற்கு ஆதரவளிக்கவேண்டும் அதன் காரணமாக இலங்கை மீண்டும் வலுவான உள்ளடக்கிய வளர்ச்சிப்பாதையில் பயணிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments: