Home » » மாணவர்களின் கல்வி உலகின் வழிகாட்டியாக திகழும் ஆசிரியத்துவத்தின் முக்கியத்துவம்

மாணவர்களின் கல்வி உலகின் வழிகாட்டியாக திகழும் ஆசிரியத்துவத்தின் முக்கியத்துவம்

 





“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” எனும் கூற்றிற்கு இணங்க இவ் உலகில் எத்தனையோ தொழில்கள் காணப்பட்ட போதிலும் அறப்பணியாக மதிக்கும் தொழிலாக ஆசிரியத்துவம் அமைகின்றது. வாழும் காலம் மட்டுமல்ல ஒரு மனிதன்மரணித்த பின்பும் பிற மனிதர்களால் போற்றப்பட்டு மனங்களில் ஒரு சிலரால் தான் வாழவும் ஆளவும் முடியும் அவர்களில் ஆசிரியர்கள் முதல் நிலை வகிக்கின்றனர். பாரம்பரிய சமூதாயத்தில் ஆசிரியர் சேவை இறை தொண்டாக கருதப்பட்டது. அதன் பின்னணியில் சமூதாயத்தின் ஆல விருட்சமாக இருந்து பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் ஊடாக மாணவர்களின் எதிர்கால வாழ்வு சிறப்பிக்க வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்கள் ஆசிரியர்களாவர். ஆசிரியத் தொழிலின் உன்னத நிலையினை பேணும் வகையில் ஆசிரியர்களின் கௌரவம், மேன்மை, உயர்வு, மாண்பு என்பவற்றினை எடுத்தியம்புவதற்காக 1966ல் பரீஸ் யுனேஸ்கோ மாநாட்டின் படி அக்டோபர் 6 ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகின்றது. இவ்வாறான உயர் நிலையினைக் கொண்ட ஆசிரியர் பணியினை கடமையாக கருதாமல் பாக்கியமாக கருத வேண்டும். மாதா, பிதா, குரு, தெய்வம் எனும் ஒழுங்கின் படி மனிதனை முழுமைப்படுத்தும் ஆற்றல்கள் குருவிடம் உள்ளமை ஏற்புடையதாகும். அந்த வகையில் ஆசிரியரை பொறுத்தே மாணவரது நிலை தீர்மானிக்கப்படுகின்றது. மாணவர்களது அறிவு மட்ட வளர்ச்சி, செயற்பாடுகள், திறன்கள், வெற்றிகள் அனைத்தும் மாணவனை வழிப்படுத்தி நெறிப்படுத்தும் ஆசிரியரையே சாரும். அந்த வகையில் மாணவர் விருத்தியில் ஆசிரியரின் பங்கு முதன்மையானதாக காணப்படுகின்றது.


கல்வி என்பது இயற்கையாக எழும் வளர்ச்சியாகும். மாணவர்களின் இவ் வளர்ச்சிக்கு ஆசிரியர் உந்து சக்தியை வளங்குகின்றார். கல்வியினை மனித வாழ்க்கைக்கும் தொழிலுக்கும் ஆயத்தக் கருவியாகவும் மாணவர்களிடம் இருக்கின்ற எல்லாத் திறன்களையும் ஆற்றல்களையும் இசைந்து வளர்ச்சி பெறச் செய்வதற்கு பக்கபலமாக இருப்பவர்கள் ஆசிரியர்களே ஆவர். பாடசாலை மாணவர்களின் நடத்தைகள் அவர்கள் வாழும் சழூகத்திற்கு பயன் தரக்கூடிய வகையில் நிறைவு செய்பவர்களில் ஆசிரியர்கள் முதல் நிலை பெறுகின்றனர். அத்துடன் மாணவர்கள் சமூகத்தில் நல்ல உயர் நிலை, பொருத்தப்பாடு அடைந்து வாழத் தேவையான அறிவு, திறன்கள், உளப்பாற்கு பழக்க வழக்கங்கள்,  விழுமியங்கள் போன்றவற்றை ஆசிரியர் கலைத்திட்ட இயக்குனராக இருந்து மாணவர்களுக்கு புகட்டுகின்றனர். பாடப்பொருளை தான் கற்று கற்பித்தல் சாதனங்கள், சிறந்த கற்பித்தல் முறைகளின் ஊடாக தனது கற்பித்தலை விருத்தி செய்து மாணவர்களை கற்க வழி காட்டுகின்றனர். வகுப்பறையில் மாணவர்களை முகாமைத்துவம் செய்பவராகவும் ஆலோசனை வழிகாட்யாகவும் அழகியல் உணர்வுள்ள கலைஞனாகவும் இணைப்பாளராகவும் ஆசிரியர் பல வகையிலும் மாணவர்களது விருத்திக்கு கைகொடுக்கின்றனர்.


அந்த வகையில் சிறந்த பண்புகளை தம்முள் கொண்ட ஆசிரியர்கள் சிறந்த வினைத்திறனான மாணவ சமூதாயத்தை உருவாக்குவர். ஆகையால் ஆசிரியர்கள் மாற்றத் வதிறனை ஏற்றுக்கொள்பவர்களாகவும், மாற்றத்தினை உருவாக்குபவர்களாகவும், தனது தொழிலை வளர்ச்சி நிலைக்கு கொண்டு செல்பவராகவும். மாணவர்களிடையே நடுநிலை பங்கினை வகிப்பவராகவும், முன்மாதிரியானவராகவும் உளவியல் நுட்பம் அறிந்தவராகவும், ஆலாசனை மற்றும் வழிகாட்டல் தன்மையுடன் புதியவற்றை படைக்கும் ஆற்றல் கொண்டவராகவும், மரபினையும் நவீனத்துவத்தினையும் பேணும் தன்மை உடையவராகவும் இருத்தல் வேண்டும். இவ்வாறான பண்புகளினையுடைய ஆசிரியர்கள் மாணவர் சமூகத்தினை உயர் நிலைக்கு இட்டுச் செல்லும் ஆற்றல் படைத்தவர்களாவர். இதனையே காந்தியடிகள் “மாணவனின் இதயத்தை தொடுவதன் மூலம் அவனிடம் இருந்து சிறந்த ஆற்றலினை இனங்காண முடியும்” என கூறியுள்ளார். 


மாணவ விருத்தியில் பங்கு கொள்ளும் ஆசிரியர்கள் வாண்மை தேர்ச்சியுடையவர்களாக இருத்தல் அவசியம். பாடத்திட்டத்தில் முழுமையான அறிவு, வகுப்பறை ஒழுங்கு, பாடசாலை இடைவினைகள், பெற்றோருடனான பின்னூட்டல்கள் முதலியன பற்றி அறிந்திருத்தல் அவசியமாகும். “தாய் ஊட்டாத பாலை பசு ஊட்டும்” என்பது போல இல்லம் புகட்டாத இயல்பை ஆசிரியர் புகட்டுவார். இவ் உறவானது மாணவர்களின் எதிர்காலத்தினை கட்டியெழுப்பும் வகையில் அமைகின்றது.


எனினும் மாணவ விருத்தியில் பங்கெடுக்கும் ஆசிரியர்கள் நெருக்கீடுகளுக்கும் முகம் கொடுக்கின்றனர். ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான ஆய்வுகள் உலக அளவிலே பரவாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. திறமைமிக்க மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்கள் அனைத்திலும் திறம்பட அமைந்திருத்தல் வேண்டும். எனினும் தரம் குறைவான முகாமைத்துவமானது ஆசிரியர்களின் உயர்நிலைக்கான சவாலாகும். அத்துடன் சில ஆசிரியர்கள் பாட அறிவில் போதியளவு தேர்ச்சி அற்றவர்களாகவும் காணப்படுகின்றனர். வளர்ந்து வரும் நவீன உலகிற்கு ஏற்ற தொழில்நுட்ப அறிவு அற்றவர்களாகவும் காணப்படுகின்றனர். ஆசிரியர் பூரண ஆற்றல் உடையவராக இருப்பதனால் மட்டுமே அவரால் பயிற்றுவிக்கும் மாணவர்களும் பூரண ஆற்றலுடையவராக உருவாக முடியும். ஆகையால் ஆசிரியர்கள் இவ்வாறான தன்மைகளில் கவனம் செலுத்துவது அவசியமாகும். அத்துடன் ஆசிரியர்கள் அதிக வேலைப்பழுவினையும் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமன்றி பாடசாலைகளில் அதிகளவான காகித வேலையினாலும் பாட நேரம் போதாமை முதலியனவற்றாலும், ஆசிரியர்கள் நெருக்கீடுகளுக்கு முகம் கொடுக்கின்றனர். மேலும் பாடசாலைகளில் வளப்பற்றாக்குறை, ஆசிரிய-மாணவர்களுக்கிடையிலான தொடர்பில் இடைவளிகளும் பெற்றோரின் ஒத்துழைப்பின்மையும், வேண்டத்தகாத அரசியல் விளைவுகளும், இனத்துவ மதத்துவ முறுகல் நிலைகளும் ஆசிரிய சமூகத்தினை கற்பித்தலில் ஈடுபடுவதற்கு நெருக்கீடுகளை ஏற்படுத்துகின்றன. இவ்வாறான சூழ்நிலைகளில் ஆசிரியர்களால் மாணவர்களை நெறிப்படுத்தி வழிப்படுத்தி மாணவ சமுதாயத்தினை உயர் நிலைக்கு இட்டுச்செல்ல முடியுமா? என்பது ஜயப்பாடே ஆகும்.


ஆசிரியர், மாணவர்கள் சீரான நிலையில் இருப்பதன் மூலம் மாத்திரமே கற்றல் கற்பித்தல் சீரானதாக இடம்பெறும். அந்த வகையில் மாணவர்களது நிலையும் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் பிரதான பங்கினை வகிக்கின்றது. எனினும் முதலாளித்துவத்தின் வளர்ச்சியும், தொழில்நுட்பத் துறையில் அதீத முன்னேற்றங்கள், நுகர்ச்சிபண்பாட்டின் எதிர்மறைப்பண்புகள், இல்லாமையின் அழுத்தங்கள், போர்நிலைகளின் தாக்கம், இயற்கை சீற்றம் முதலிய காரணிகளால் மாணவ நடத்தையில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றன. அதன் படி மாணவர்கள் பாடசாலையில் இடைவிலகல். நேரம் தாழ்த்தி பாடசாலை செல்லல், பாடவேளைகளில் இடை நடுவே வௌpயேறல், வகுப்பறைச் செயற்பாடுகளை வலுவிழக்கச் செய்தல், கற்பித்தலின் போது இடையூறுகளைச் செய்தல், செயற்பாடுகளில் ஈடுபடாது தனிமைப்படல், வகுப்பறையில் மோதுதல் உடலுக்கு ஊறு விளைவித்தல், ஒப்படைகள் கணிப்பீடுகளை நிறைவேற்றாமை முதலிய நடத்தை மாற்றங்கள் தோன்றுகின்றன. இவை அனைத்தும் ஆசிரிய மாணவர்களின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளிலும் கல்வி வளர்ச்சியிலும் பாதிப்பினை உண்டு செய்கின்றன. மாணவர்களின் விருத்தியில் ஆசிரியரின் பங்கானது அளப்பரியதாகும். மாணவர்களின் நடத்தை மாற்றங்கள் ஆசிரியரின் கற்பித்தலுக்கு எதிராக காணப்படும் எனில் அங்கு கல்வி வெற்றியளிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.


ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் பங்குவகிக்கும் கல்வி செயற்பாட்டில் ஆசிரியர்கள், மாணவர்களின் சவால்களாலும் நெருக்கீடுகளாலும் தாக்கம் ஏற்படுவது தவிர்க்க முடியாத விடயம் ஆகும். அந்த வகையில் பாடசாலையில் உள்ளமைந்த தொடர்புகளும் இடைவினைகளும் பாதிக்கப்படுதல், பாடசாலையில் மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்களும் அதற்கான நன்மை தரும் விளைவுகளும் வீழ்ச்சி அடைதல் இகற்பித்தல் செயற்பாடுகளை வினைத்திறனாக மேற்கொள்ள முடியாமை, மனதை ஒருங்குவிக்க முடியாமை, கூட்டாக தொழிற்பட முடியாமை, வெற்றிப் பாதையினை அடைய முடியாமை முதலிய பாதிப்புக்களை எதிர்கொள்ளும் நிலை உருவாகின்றது. இவை பாடசாலை மட்டத்தில் மட்டும் பாதிப்பினை ஏற்படுத்தாது மாணவர்களது எதிர்காலத்தினையும் எமது தேசத்தின் வளர்ச்சியினையும்கேள்விக்குறியாக்கும்.


நெருக்கீடுகள் நீடித்துச் செல்லும் நிலையினை தவிர்த்தல் மூலமே இவற்றினை சீராக்க முடியும். ஆசிரியர்கள் தம்மை திருத்திக் கொள்ளலும் மாற்றியமைத்தலும் அவசியமாகும். அத்துடன் பாடசாலையின் தொடர்புகளையும் இடைவினைகளையும் சீர்படுத்தல். உளரீதியான சிந்தனைகளை மாற்றியமைத்தல், பின்வாங்கும் செயற்பாடுகளை கைவிட்டு எதிர் சீராக்கலில் ஈடுபடுதல் முதலியவற்றின் மூலம் தாக்கத்தினை குறைத்துக் கொள்ள முடியும். அத்துடன் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஓய்வு தருவதன் மூலமும் சாதகமான நிலையினை உருவாக்கலாம். அத்துடன் தியான வழிமுறைகளை முன்னெடுத்து மனதை ஒருநிலைப்படுத்தல், அழுத்தங்களை கட்டுப்படுத்தல், உறுதியினை  வளர்த்தல், உடற்பயிற்சி, நல்ல பொழுது போக்குக்குகளையும் இவாசிப்பு ஆக்கச் செயற்பாடுகளில் ஈடுகொடுத்தல், அலெக்சாண்டரின் நுட்பமான தவறான உடற்கோலங்களையும் உடல் மொழிகளையும் மாற்றியமைத்து விரும்பத்தக்கபுதிய உடற் கோலங்களை உருவாக்கும் நுட்பத்தினை பயன்படுத்தல், அறிவினை வளர்க்கும் தற்படிமத்தினை வளர்த்தல் முதலிய அணுகு முறைகளில் ஈடுபடுவதன் மூலம் ஆசிரிய, மாணவர்களின் நெருக்கீடுகளை குறைத்து ஆசிரிய, மாணவர்களின் கற்றல் கற்பித்தலில் துரிதமான முன்னேற்றத்தினை உருவாக்க முடியும். 


இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்களாக தோற்றுவிக்கும் ஆசிரியப் பணியானது இவ் வையகம் நிலைத்திருக்கும் வரை உறுதியுடன் நிலைத்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கல்விச் செயற்பாடுகளை இங்கிதமாக முன்னெடுக்கும் ஆசிரியர்கள் சீரான பாதையில் செல்வதுடன் மாணவர் சமூகத்தினையும் சீரான பாதையில் இட்டுச் செல்ல பெரிதும் துணை புரிகின்றனர். மாறிவரும் சர்வதேச சூழலை கருத்திற்கொண்டு புதிய தலைமுறையினரை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். ஆசிரிய மாணவ உறவானது வெறுமனே தண்டனை உறவாக இல்லாது சுமூகமான உறவாக இருப்பது அத்தியாவசியம் ஆகும். “ஆசிரியப் பணியே அறப்பணி அதற்கே உன்னை அற்பணி” எனும் கூற்றின் படி ஒவ்வொரு மாணவனின் வாழ்க்கையிலும் ஆசிரியர் முக்கிய பங்கு வகிக்கின்றார் என்பதனை எம் சமூகம் உணர்ந்து அதன்படி நடத்தல் வேண்டும்.


யோ. அகல்யா,

உதவி விரிவுரையாளர்,

கல்வி, பிள்ளை நலத்துறை,

கிழக்குப்பல்கலைக்கழகம்,

இலங்கை.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |