Home » » சமூகமயமாக்கல் செயன்முறையின் குறைபாடுகள் காரணமாக தோன்றும் சமூகப் பிரச்சினைகள்*

சமூகமயமாக்கல் செயன்முறையின் குறைபாடுகள் காரணமாக தோன்றும் சமூகப் பிரச்சினைகள்*



அறிவியல் கண்டுபிடிப்புகளாலும் அரசியல் சமூக மாற்றங்களாலும் உலகம் முழுவதும் பல மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு ஏற்ப சமூகமயமாக்கல் செயன்முறை இடம்பெற்ற வண்ணம் உள்ளது. இன்று உலகம் ஒரு சிறு கிராமமாக சுருங்கி விட்டது. இதனால் நாடுகளிடை யேயும் மக்களிடையேயும் இடைவெளி குறைந்து தொடர்புகள் அதிகரித்துள்ளன. இதனால் மனித சிந்தனைகளாலும் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், சம்பிரதாயங்கள், பழக்க முறைகள், சமுதாய அமைப்புகள் போன்றவற்றாலும் மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இவற்றுக்கு ஏற்ப ஆதி தொட்டு இன்றுவரை மனிதன் சமூகமயமாக்கலில் ஈடுபடுகிறான். மனிதன் சமூகமயமாக்கலினை சீராக மேற்கொண்டால் மாத்திரமே மனிதனாக வாழ முடியும். இல்லையெனில் மனிதனின் இயல்புத் தன்மை மாறி மனிதன் வாழ்வது கேள்விக்குறியாகிவிடு ம். ஆகையால் சமூகமயமாக்கல் செயன்முறை சீராக இடம் பெறுதல் அவசியம் ஆகும்.




எனினும் சமூக சசூழலையும் சமுதாயத்தையும் சரியாக புரிந்து கொள்ளாமலும் சமூகத்திற்கு ஏற்புடைய மனிதனாக இயைபாக்கம் பெறாமலும் மனிதனின் நடத்தை வேறு விதமாகவும் நடைமுறைக்கு எதிராகவும் செல்லும்போது சமூகமயமாக்கலில் குறைபாடுகள் தோன்றுகின்றன. 


சிறுபராயம் முதல் பிள்ளைகளை நெறிப்படுத்தாமை 


பிள்ளைகளின் தவறுகளை சீர் செய்யாமை 


உளவியல் ரீதியான தாக்கங்கள், வழிகாட்டுதல் இன்மை 


வாழும் சுழலில் உள்ள பிரச்சினைகள் குரோதங்கள் போன்ற காரணங்களால் மனிதனின் சமூகமயமாக்கல் செயன்முறையானது சிக்கல் அடைகின்றன. 


இத்தகைய குறைபாடுகளால் மனித சமுதாயத்தில் சமூகப் பிரச்சினைகள் உருவெடுக்கின்ற. அவையாவன, 

தற்கொலைகள் 

பிறழ்வு நடத்தைகள் 

பாலியல் சார்ந்த குற்றங்கள் 

போதைப்பொருள் பாவனை  

இன முரண்பாடு 

கலாச்சார சீர்கேடுகள் 

முறையற்ற ஆடை அலங்காரம் 

இளைஞர் விரக்தி 

குடும்ப முரண்பாடு, இளவயது திருமணம் 

 

தற்கொலை என்பது  விருப்பத்துடன் ஒருவர் தன்னைத்தானே கொலை செய்து கொள்ளும் செயலாகும். தற்கொலைகள் பெருமளவில் வறுமையால் ஏற்படுவதாக கூறப்பட்டாலும் தற்போது அதற்கான காரணங்கள் பல விதமாக அமைகின்றன. 


 பெற்றோரிடையே ஏற்படும் பிரச்சினை 

காதல் தோல்வி 

குடும்ப உறவுகளில் மனரீதியான அழுத்தம் 

சமுதாய ரீதியான ஒதுக்கம் 

சுய கௌரவத்திற்கு பங்கம் ஏற்படும் நிலை 

தாழ்வு மனப்பாங்கு

ஆளுமைக் குறைபாடு என்கின்ற எண்ணம் போன்ற நிலையில் மனிதன் தற்கொலை மேற்கொள்கின்றான்.


எனினும் இத்தகைய தற்கொலைகள் மனிதனின் மனம், உடல், அறிவு மூன்றும் சமூகத்துடன் இணைந்து செல்லாமையால் தோன்றுகின்ற பிரச்சினையாகும். பிரச்சினைக்கு முகம் கொடுப்பதற்கு பக்குவம் இன்றியும் தற்கொலைகள் இடம்பெறுகின்றன. குழந்தையினை சமூகப்படுத்தாது, வெளி உலகுக்கு அனுப்பாது, அதிக பாதுகாப்பு, அரவணைப்புடன் ஏனைய சிறுவர்களுடன் விளையாடுவதற்கு விடாது வீட்டினுள் வைத்து  பிள்ளையினை பெற்றோர் வளர்க்கும்போது, திடீரென பிள்ளை பல்கலைக்கழகம், கல்லூரிக்குச் கற்கச் செல்லும் போது விடுதிகளில் தங்கிக் கொள்ளும் நிலை தோன்றும். அதன் போது பிள்ளை அவற்றை முகம் கொடுக்க முடியாத நிலையில் பல்கலைக்கழக வாழ்வில் இடம்பெறும் சவால்கள் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் தற்கொலை செய்கின்றது. இதற்கு அடிப்படைக் காரணம் குறித்த பிள்ளைக்கு சீரான சமூகமயமாக்கலின்மையாகும். 


அந்தவகையில் செப்டம்பர் 10 உலக தற்கொலை தடுப்பு தினமாக அனுஸ்டிக்கப்படுகின்றது. உலக சுகாதார நிறுவனமானது ஒரு வருடத்தில் 10 லட்சம் பேர் வரை தற்கொலை செய்கின்றார்கள் என்று குறிப்பிடுகின்றது. இவை அனைத்தும் சமூகமயமாக்கல் குறைபாட்டால் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் இவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகள் உள்ளன. அவையாவன 

பிள்ளைகள் பாடசாலையில் கற்கும்போதே வெற்றி, தோல்வியை சகஜமாக எண்ணுவதற்கான ஆற்றலை ஏற்படுத்துதல். 


பிள்ளைகளை வௌpயுலகத்துடன் தொடர்பு படுத்துவதில் ஆர்வம் காட்டுதல்


நண்பர்கள் சமூகத்துடன் அதிக நேரம் செலவழித்தல் 


 பிறருக்கு உதவி செய்தல் 


சமூக விடயங்களில் பங்கு கொள்ளுதல் 


சமூகத்தில் வாழ்வதற்கு பல வழிகள் உண்டு என்பதை உணர்ந்து செயற்படல்


உளவியல் ரீதியான பிரச்சினைகளுக்கு ஆலோசனை வழங்குதல் முதலிய பண்புகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் சமூகமயமாக்கல் மேற்கொண்டு தற்கொலைகளை தவிர்க்க முடியும்.


அதனை தொடர்ந்து சமூகமயமாக்கல் செயன்முறையையின் குறைபாட்டால் தோன்றும் சமூகப்பிரச்சனைகளுள் பாலியல் வன்முறைகளையும் குறிப்பிடமுடியும். பாலியல் வன்முறை என்பது பாலியல் நோக்குடன் அடிமைப்படுத்துதல், கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபட வைத்தல், வலிந்து கர்ப்பமாக்குதல், கட்டாய இனவிருத்தி, பாலியல் சார்ந்த மிரட்டல்கள், கருத்தரிப்பு போன்றவற்றை குறிப்பிட முடியும். இத்தகைய பாலியல் வன்முறைகள் சீரான சமூகமயமாதல் இன்மையால் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 


படித்தவர்கள், ஏழைகள், பணக்காரன் என்ற பாரபட்சமின்றி ஆண்கள் மதுவுக்கு அடிமையாக உள்ளனர். இதனால் போதயில் சமூக விரோத செயலில் ஈடுபடுகின்றனர். அத்துடன் இணைய வசதிகளை தவறான வகையில் பயன்படுத்துவதனாலும்  வன்முறைகள் இடம் பெறுகின்றனர். இதனால் பெண்களையும் பெண் குழந்தைகளையும் வக்கிர புத்தியுடன் பார்ப்பதும் அணுகுவதுமான நிலை உண்டு.  அத்துடன் கட்டிளமை பருவத்தில் இருக்கும் ஆண்களும் பெண்களும் ஈர்ப்பின் காரணமாக அதனை காதல் என்று அர்த்தப்படுத்திக் கொண்டு தவறான நிகழ்வுகளில் ஈடுபடுகின்றனர். உலகில் ஏதோ  ஒரு இடத்தில் இத்தகைய வன்முறைகள் நாள்தோறும் இடம் பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறையினை ஆய்ந்தறிந்த உலக சுகாதார அமைப்பு இவ் வன்முறையை ஐந்து படிநிலைகளில் நடைபெறுவதாக கூறியுள்ளது. 


பிறப்பிற்கு முன்னர்  (கருவில் பெண் குழந்தைகளை அழித்தல்)


மழை பருவம் (பெண் குழந்தை பிறந்ததும் கொல்லுதல். இந்தியாவில் இந்நடைமுறை காணப்பட்டது.)


சிறுமியர் (பெண் சிறுமிகளை பாலியலுக்கு ஈடுபடுத்தல்) வளர்ச்சிப் பருவம் 


வளர்ந்தோர் (பெண்களுக்கு எதிரான செயற்பாடு) 


முதியோர் பருவம் 


பப்பு நியூக்கினி யில் 67.7% கிராமப்புற பெண்கள் வன்முறைக்கு உள்ளாகின்றனர். கனடாவில் 4 பேருக்கு ஒரு பெண் வன்முறையை அனுபவிக்கின்றார். தாய்லாந்தில் இருந்து சுமார் 10,000 பெண்கள் கடத்தப்படுகின்றனர், இந்தியாவில் வன்முறைகளாக வரதட்சனை கொடுமைகளும் காணப்படுகின்றன. இவற்றை தடுக்கும் வண்ணம் பல சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. எனினும் பாலியல் வன்முறைகள் நடவடிக்கைகள் இடம்பெற்ற வண்ணமே உள்ளன. சீரான சமூகமயமாக்கல் அடையாதவர்கள் மூலம் இத்தகைய பிரச்சினைகள் இடம்பெறுகின்றன. 


ஆகையால் அதனை தீர்ப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்வது அவசியமாகும். 


பாடசாலையிலிருந்து பிள்ளைகளுக்கு சமத்துவத்தை கற்பித்தல். 


ஆண் பெண் பாரபட்சமின்றி சம வாய்ப்புகளை வழங்குதல். 


சமூகம் பெண்களுக்கு பாதுகாப்பினை வழங்குவதன் முக்கியத்துவத்தை உணர்த்தல்


சமூக ஊடகங்களின் தவறான விடயங்களை பதிவேற்றுவதை தடுத்தல் 


உளவியல் பின்னடைவானவர்க்குஅதற்கான சிகிச்சையை பெற வைத்தல். போன்ற செயற்பாடுகள் மூலம் சமூகமயமாக்கல் மேற்கொள்ள முடியும். ஒவ்வொரு மனிதனும் இதனை மேற்கொள்வதன் மூலம் சமூக பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும்.


சமூகமயமாக்கல் குறைபாட்டினால் இன வர்க்க முரண்பாடுகள் தோன்றுவதையும் காணமுடிகின்றது. முரண்பாடு என்பது இரு குழுக்களுக்கிடையில் அல்லது இரு தனி மனிதர்களுக்கு இடையே ஏற்படுகின்ற போட்டித்தன்மை என குறிப்பிட முடியும். பொதுவாக முரண்பாடுகள் வலிமையான நபர் அல்லது குழுக்கள் வலிமை குறைந்தவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் போது ஏற்படுகின்றன. முரண்பாடு தோன்றுவதற்கான காரணங்களாக,


 மதரீதியான முறுகல் நிலை

வளங்களை பெறுவதில் சிக்கல்

மொழி ரீதியான தாக்கம்

தௌவற்ற பொறுப்புகள், தொடர்பாடல் சிக்கல்கள்

ஆதிக்கப் போக்கு போன்றவற்றால் தோன்றுகின்றன. 


இத்தகைய முரண்பாடுகளுக்கு அடிப்படை காரணி சமூகத்தில் சீரான சமூகமயமாக்கல் இன்மையே ஆகும். சமூக மக்கள் வேறுபாடுகளை கழைந்து ஒற்றுமை, சமாதானம் என்பனவற்றை மையப்படுத்திய ஒன்றே குலம் மனிதகுலம் என்ற தொனிப் பொருளின் அடிப்படையில் இணைவதால் முரண்பாடுகள் சமூகத்தில் தோன்றாது இருக்க வழிவகுக்கும். எனினும் சீரான இடைத்தொடர்பின்மை சமூகமயமாக்கலில் வேற்றுமை நிலை அதிகரிக்கும் போது அங்கு இன முரண்பாடுகள் உருவாக்கம் பெறும். இதன் தாக்கம் எமது இலங்கை நாட்டில் உள்ளமையினை அவதானிக்க முடிகின்றது.


சமூகமயமாக்கலின் குறைபாட்டால் கலாச்சாரச் சீர்கேடும் சமூகப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளன. கலாச்சாரம் என்பது பொதுவாக மனித செயற்பாட்டு கோலங்களையும் அத்தகைய செயற்பாடுகளுக்கு சிறப்புத் தன்மைகளையும் முக்கியத்துவத்தையும் கொடுக்கும் குறியீட்டு அமைப்புகளை குறிக்கிறது. சமூகத்தை நல்வழியில் கொண்டு போக உதவும் ஒரு வழிபாட்டு முறையாக கலாச்சாரம் அமைகிறது. ஒவ்வொரு சமூகமும் கலாச்சார நெறிமுறைகள், கலாசார பழக்க வழக்கங்கள், கட்டமைப்புகள், நம்பிக்கைகள், ஆடை, உணவு உள்ளிட்ட அனைத்தும் உள்ளன. 


நாகரீகம், நவநாகரீக வளர்ச்சி என படிப்படியாக மக்களது பண்பாடு, கலாசாரம் மாற்றம் காண்பதனை காணமுடிகின்றது. முன்னோர்கள் காலம் காலமாக கட்டிக்காத்த சமூக கலாச்சாரங்கள் சமூகமயமாக்கலின் குறைபாட்டால் தற்போது கலாசார சீர்கேடுகளாக உருவெடுத்துள்ளன. நாகரீகத்துக்கு ஏற்ப இசைவாக்கம் பெறுவது இயல்பு ஆனால் எமது கலாச்சாரத்தினை அவமரியாதை செய்வது சிறந்த சமூகமயமாக்கல் அல்ல. இன்றைய கலாச்சார சீரழிவுக்கு முக்கிய காரணம் சந்தைக் கலாச்சாரமும் அது உருவாக்கிய பொய்கள் பொய்களை முன்னிறுத்திக் கொண்டாடும் ஊடகங்கள் அதில் உருவான பொய்யான நாகரிகமே காரணங்களாகும். இவற்றை தனி மனிதன் சமூகப் புரிந்துணர்வின்றி பின்பற்றுவதும் அதனால் ஏற்படுகின்ற நிலையுமே கலாசார சீர்கேட்டுக்கு அடிப்படை காரணமாகின்றது. 

 

இவற்றுக்குக் காரணம் தனி மனிதன் சீரான சமூகமயமாக்கலில் ஈடுபடாமையே ஆகும். குறித்த கலாச்சாரத்தில் உள்ள மரபுகள் பழக்க வழக்கங்கள் கொள்கைகள் விதிமுறைகள் கருத்துக்களுக்கு ஏற்ப இயைபாக்கம் பெற்று சமூகமயமாக்கலை கடைப்பிடிக்க தெரியாத நபர்கள் நாகரிகத்தின் தவறாக பயன்படுத்துகின்றனர். அதிகரித்துவரும் smart phone பாவனையால் அதிக சீர்குலைவுகள் இடம் பெறுவதைக் காண முடியும்.


சமூகமயமாக்கல் குறைபாட்டால் எழும் பிரச்சினைகளில் போதைப்பொருள் பாவனையும் ஒன்றாக காணப்படுகின்றது. சமூகத்துடன் இணைந்து சமூகத்திற்கு ஏற்ப வாழும் மனிதன் போதைப் பொருளுக்கு அடிமையாகமாட்டான். எனினும் சமூகத்துடன் இணையாத நபர்கள் வேறு பாதையில் பயணிப்பதற்காக போதைப்பொருளை பயன்படுத்துகின்றனர். 1987 ஆம் ஆண்டு. ஐ.நா வின் தீர்மானத்தின்படி ஜூன் 26 போதைப்பொருள் தடை தினமாக அனுஸ்டிக்கப்படுகின்றது. உலகம் முழுவதும் 200 மில்லியன் பேர் போதைப்பொருள் பாவிப்பவர்களாக உள்ளனர். மக்கள் சமூகத்திற்கும் ஆரோக்கியத்துக்கும் எதிரான உலகளாவிய ரீதியில் எழுந்துள்ள பிரச்சினையாக போதைப்பொருள் பாவனை காணப்படுகின்றது. போதைப்பொருள் பாவனையால் தனிமனிதன், குடும்பம், சமுதாயம் என பல வகையிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.


தனி மனிதன் தன் சிந்தனையில் போதையினுள் புதைத்து மன மயக்கத்தையும் குழப்பத்தையும் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்கிறான். போதைப் பொருட்களாக மது, ஹெராயின் ஊசி, கஞ்சா, புகையிலை, பான்மசாலா, அபின் போன்றன காணப்படுகின்றன. உலக சனத்தொகையில் சுமார் 100 கோடி பேர் புகைப்பிடிக்கின்றனர். அவ்வாறே ஏனைய போதைப்பொருட்களுக்கும் அடிமையாகியுள்ளனர்.


இத்தகைய போதை பொருளுக்கு அடிமையானவர்களால் குடும்ப வாழ்க்கை, சமுதாய அந்தஸ்து, அலுவலக வேலை, நட்பு, உறவினர்கள் தொடர்புகள் என எல்லாவற்றிலும் விரிசல் ஏற்படுகின்றன. போதை என்பது தனிமனிதனை மட்டும் பாதிக்கும் பழக்கம் என எண்ணிவிட முடியாது. இதனால் அவனை சூழவுள்ள சமுதாயம் பாதிப்படைகின்றது.


மேலும் வாகனம் ஓட்டுபவர்கள் போதைக்கு அடிமையானால் அவர்களால் சமூகரீதியாக விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. அத்துடன் போதைக்கு அடிமையானவர்கள் சிறிது சிறிதாக அற்ப இன்பதற்காக திருடுதல், பொய் பேசுதல் மற்றும் மானக்கேடான செயலில் ஈடுபடுதல் போன்றனவற்றில் இணைகின்றனர். இவர்கள் சமூக விரோத செயல்களுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். இதனால் சமூகம் சீரழிகிறது. ஆகையால் முறையான சமூகமயமாக்கல் மூலம் இதனை தடுக்க முடியும். அதன்படி விழிப்புணர்வு வழங்கல், மறுவாழ்வு அளித்தல், நற்சிந்தனை ஊட்டுதல், ஆன்மீகத்தில் உள் வாங்குதல் போன்ற சமூகமயமாக்கல் செயல்முறைகள் மூலம் இதனை தடுக்க முடியும்.


இவ்வாறு சமூகமயமாக்கலில் ஏற்படும் குறைபாட்டினால் சமூகப் பிரச்சினைகள் எழுவதனை அறியமுடிகின்றது. ஆகையால் சமூகத்தில் வாழும் மனிதர்கள் தான் வாழும் சமூகத்தில் குறைபாடு இன்றி சமூகமயமாக்கலில் ஈடுபடுவதன் மூலம் சமூகப் பிரச்சினைகள் ஏற்படாது தடுக்க முடியும்.


யோ. அகல்யா,

உதவி விரிவுரையாளர்,

கல்வி, பிள்ளை நலத்துறை,

கிழக்குப்பல்கலைக்கழகம்

இலங்கை.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |