Home » » நான் வீழ்ந்தாலும் நாடு வீழாது! IMF கடன்... - தனது இலக்கை அறிவித்தார் ரணில்

நான் வீழ்ந்தாலும் நாடு வீழாது! IMF கடன்... - தனது இலக்கை அறிவித்தார் ரணில்

 


சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு குறித்த ஆவணத்தை ஜனாதிபதி சற்றுமுன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். 

நாடாளுமன்றில் ஜனாதிபதி உரையாற்றுகையில், கடந்த ஜூலை 9ஆம் திகதி நான் தீப்பிடித்த நாட்டையே பொறுப்பேற்றேன். குழப்பத்தில் இருந்த ஒரு நாடு. நாளைய தினம் பற்றிய நம்பிக்கை ஒரு துளி கூட இல்லாத நாடு. அதிகாரப்பூர்வமாக திவாலான நாடு என அறிவிக்கப்பட்ட நாடு. பணவீக்கம் 73% வரை உயர்ந்ததாக அறிவிக்கப்பட்ட நாடு.

நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசையில் பல நாட்களாக தவித்த மக்கள் வாழ்ந்த நாடு. பாடசாலைகள் மூடப்பட்ட நாடு. ஒரு நாளைக்கு 10 - 12 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நாடு. விவசாயிகளுக்கு உரம் இல்லாத நாடு.

இத்தகைய பின்னணியில் யாரும் பொறுப்பேற்க விரும்பவில்லை. சிலர் பின் சென்றார்கள். சிலர் ஜாதகம் பார்க்க காலம் தேவை என்றார்கள். சிலர் நழுவினர். சிலர் பயந்தார்கள். யாரும் பொறுப்பேற்க முன்வராத போது தான் என்னிடம் கேட்கப்பட்டது.

சவாலை நிபந்தனையின்றி ஏற்றுக்கொண்டேன். நாடாளுமன்றத்தில் எனக்கு அதிகாரம் இல்லை. என்னிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கவில்லை. இவை எதுவும் இல்லாத போதும் என்னிடம் இருந்தது ஒரே ஒரு பலம் தான்.

அது நான் பிறந்து, வளர்ந்து, கல்வி கற்ற என்னுடைய நாட்டை என்னால் மீட்க முடியும் என்ற நம்பிக்கை மட்டும் தான் எனக்கு இருந்த ஒரே பலம். இந்த மிகப் பெரிய சவாலை ஏற்கும் போது, ​​கடந்த கால அனுபவங்களினால் எனக்கு இருந்த நம்பிக்கையை கொண்டு நான் நாட்டை பொறுப்பேற்றேன். நான் வீழ்ந்தாலும் நாடு வீழாது என்ற எண்ணத்தில் சவாலை ஏற்றுக்கொண்டேன்.

நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் மூலம் சர்வதேசத்தின் மத்தியில் நாடு மேலும் உயர்வடையுமே தவிர வீழ்ச்சியடையாது. ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்களின் ஊடாக நாட்டை அராஜக நிலைமைக்கு கொண்டு செல்ல எண்ணியவர்களின் முயற்சிகளுக்கு மக்கள் ஒத்துழைக்கவில்லை.

நாட்டுக்காக மக்கள் பொறுப்புடன் செயற்பட்டமைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 2026 இல் உற்பத்தி பொருளாதாரத்தின் ஊடான வருமானத்தை 15 சதவீதமாக உயர்த்துவதே எமது இலக்கு. 

எரிபொருள் விலை குறித்த தீர்மானங்களை எடுப்பதில் அரசியல்வாதிகளின் தலையீடு முற்றாக நீக்கப்படும். 2018 இல் அறிமுகப்படுத்தப்பட்ட விலை சூத்திரத்தின் அடிப்படையில் மாத்திரமே எரிபொருள் விலை நிர்ணயிக்கப்படும்.

நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு தொடர்பில் ஏப்ரல் 3ஆம் வாரத்தில் விவாதத்திற்கான நேரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் , ஓய்வூதியம் தீர்மானிக்கப்படும்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து அதிக வட்டிக்கு கடன் பெறுவதாக சிலரால் அரசியல் நோக்கத்துடன் மக்களை ஏமாற்றும் போலியான தகவல்கள் வெளியிடப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், ஐ.நா.வுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள பிரகடனத்திற்கமைய ஊழல், மோசடிகளை ஒழிப்பதற்கான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். பணவீக்கத்தை 4 - 6 சதவீதம் வரை வீழ்ச்சியடைச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

நஷ்டத்தில் இயங்கும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை விமான சேவை நிறுவனம், பெட்ரோலிய கூட்டுத்தாபனம், மின்சாரசபை மறுசீரமைக்கப்படும். மின் கட்டணத்திலும் மாதாந்தம் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |