Home » » சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருப்பவர்களை பொது மன்னிப்பில் விடுவிக்க சட்டத்தில் திருத்தம் : நீதி அமைச்சர்!

சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருப்பவர்களை பொது மன்னிப்பில் விடுவிக்க சட்டத்தில் திருத்தம் : நீதி அமைச்சர்!


சிறைச்சாலைகள் ஒழுங்கு விதிகள் சட்டம் முழுமையாக திருத்தியமைக்கப்பட்டு, சிறைப்படுத்தப்படும் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மிகவும் மனிதாபிமான அடிப்டையிலான ஒழுங்குவிதிகளை உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. 

குறிப்பாக சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருப்பவர்களை பொது மன்னி்ப்பில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

நீதி அமைச்சில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வர்த்தமானி அறிவிப்பின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றினூடாகவே இதுவரை புனர்வாழ்வளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறன. 

இந்த நிறுவனம் ஊடாக விடுதலைப்புலிகள் அமைப்பின் செயற்பட்டாளர்களாக இருந்த 12ஆயிரத்தி 500க்கும் மேற்கட்டவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். 

அதன் பின்னர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பதற்காக  இந்த புனர்வாழ்வு பணியகத்தை  பயன்படுத்த நடவடிக்கை எடுத்தோம். 

என்றாலும்  போதைப்பொருளுக்கு அடிமையாகின்றவர்களை புகர்வாழ்வளிக்கும் நடவடிக்கையை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படுவது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. 

இதனை சிவில் நடவடிக்கையாக கருதி, பாராளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்றை அனுமதித்துக்கொண்டு, குறிப்பாக இராணுவத்தின் தீர்மானத்துக்கு அல்லாமல் மனநல வைத்திய சிகிச்சை முறைமையகளை பயன்படுத்திக்கொண்டு, போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் இவ்வாறு புனர்வாழ்வளிக்கப்படுபவர்கள் நீதிமன்றத்தினால் உத்தரவு பிரப்பிக்கப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 

என்றாலும் நீதிமன்ற உத்தரவின் மூலம் ஒருவர் புனவர்வாழ்வளிப்பதற்கு அனுப்பப்படுவது சம்பந்தப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அது அகெளரவமாகும் என சமூக மட்டத்தில் தெரிவிக்கப்பட்டு வந்தது. 

அதனால் சுய விருப்பத்துடன்  யாராவது புனர்வாழ்வளிக்க முன்னுக்கு வந்தால். அவ்வாறானவர்களுக்கு புனர்வாழ்வளிக்க இந்த புனர்வாழ்வு பணியக சட்டம் மூலம் அனுமதிக்கப்படுகிறது. அதன் பொறிமுறையை தற்போது தயாரித்து வருகிறோம்.

அதேபோன்று சிறைச்சாலைகள் ஒழுங்குவிதிகள் சட்டம் முழுமையாக திருத்தியமைக்கப்பட்டு, சிறைப்படுத்தப்படும் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில்   மிகவும் மனிதாபிமான அடிப்டையிலான ஒழுங்குவிதிகளை உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. 

அத்துடன் நீண்டகாலம் சிறைப்படுத்தப்பட்டிருப்பவர்கள். குறிப்பாக வயது முதிர்ந்த, நாட்பட்ட நோயாளிகளாக இருப்பவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு சுகாதார பணிப்பாளரால் நியமிக்கப்படும் விசேட வைத்திய நிபுணர்கள் குழுவினால் முன்வைக்கப்படும் பரிந்துரைக்கு அமைய அவர்களின் பெயர்களை ஜனாதிபதிக்கு சமர்ப்பித்து, அவ்வாறான கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக தற்போதைக்கு சிலரின் பெயர் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் இன்னும் சிலரது பெயர் வைத்தியர் குழுவினால் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. இவற்றையும் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்றார்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |