புதிய இணைப்பு
சிட்னி, ரோஸ் பேயில் உள்ள வீடொன்றில் வைத்து 29 வயது பெண்ணொருவரை பாலியல் வன்கொடுமை செய்தமை உள்ளிட்ட 04 குற்றச்சாட்டுகள் தொடர்பில் 31 வயதான தனுஷ்க குணதிலக்க சசெக்ஸ் வீதியிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்தபோது அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து இன்று அவர் சிட்னி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அதன்போது, முறைப்பாடுகளை பரிசீலித்த நீதிபதி, சந்தேக நபர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கையை நிராகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூகவலைத்தளம் மூலம் அறிமுகமான பெண்ணொருவரையே வன்புணர்வுக்கு உள்ளாக்கியுள்ளதாக தனுஷ்க குணதிலக்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவுஸ்திரேலிய பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவின் பாலியல் குற்றப்பிரிவின் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் கிழக்கு காவல் பிராந்திய கட்டளைப் பிரிவினர் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சிறிலங்கா கிரிக்கெட் அறிக்கை
இதேவேளை, தனுஷ்க குணதிலக்கவின் சம்பவம் தொடர்பில் சிறிலங்கா கிரிக்கெட் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சிட்னி நீதிமன்றம் எடுக்கும் தீர்மானங்கள் மற்றும் உத்தரவுகள் தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்கப்படுவதாகவும், தனுஷ்க குணதிலக்க மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படுமாயினும், அவருக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் இணைந்து சிறிலங்கா கிரிக்கெட்டும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
சிறிலங்கா கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நேற்று (5) அவர் அந்நாட்டு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பெண் ஒருவர் அளித்த முறைப்பாட்டுக்கமைய அவர் கைது செய்யப்பட்டதாக சிறிலங்கா கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2018 ஆம் ஆண்டு
இந்நிலையில், தனுஷ்க குணதிலக்க இல்லாமல் இலங்கை கிரிக்கெட் அணி, அவுஸ்திரேலியாவிருந்து கொழும்புக்கு புறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2018 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட்டில் முறைகேடு செய்ததற்காக குணதிலக இடைநீக்கம் செய்யப்பட்டார். மீண்டும் இதேபோன்ற சம்பவத்தில் குணதிலக ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இலங்கையில் நோர்வே பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில் குணதிலகவையும் அவரது நண்பரையும் காவல்துறையினர் விசாரணைக்கு உட்படுத்தினர்.
எனினும் அவரது நண்பர் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டதுடன், குறித்த சம்பவத்துடன் தனுஷ்கவுக்கு தொடர்பு இல்லை என்று விசாரணையில் தெரியவந்ததையடுத்து விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
0 comments: