Home » » விரைவில் தமிழர் தாயக காணி பிரச்சினைக்குத் தீர்வு - மாகாணமட்டத்தில் நியமிக்கப்படவுள்ள குழு!

விரைவில் தமிழர் தாயக காணி பிரச்சினைக்குத் தீர்வு - மாகாணமட்டத்தில் நியமிக்கப்படவுள்ள குழு!


வடக்கு மாகாணத்தின் காணி, வீடு, சுகாதாரம், நீர்ப்பாசனம் மற்றும் விவசாயப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படுமென சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாகாண மட்டத்தில் 08 குழுக்களை நியமிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“வடமாகாணத்தில் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்கி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

ஆதரவை எதிர்பார்க்கும் ரணில்

விரைவில் தமிழர் தாயக காணி பிரச்சினைக்குத் தீர்வு - மாகாணமட்டத்தில் நியமிக்கப்படவுள்ள குழு! | Northern Province Land Issue Ranil Fuel Crisis

அதற்காக வடமாகாணத்தின் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் அதுமட்டுமன்றி வடக்கில் இதுவரையில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் இருக்கின்றன.

இவற்றுக்குத் தேவையான தீர்வுகளை வழங்குவதற்கு அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடவுள்ளோம்” எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், செட்டிகுளம் பகுதியில் 1994 ஆம் ஆண்டு குடியேற்றப்பட்ட தமிழ் மக்களுக்கு இதுவரை காணிகள் வழங்கப்படாமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இதன் போது செட்டிகுளம் பிரதேசத்தின் காணிப்பிரச்சினை தொடர்பில் மத்தியஸ்தம் செய்து 03 மாதங்களுக்குள் தீர்வுகாணுமாறு வவுனியா மாவட்ட செயலாளருக்கு அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் நீதியமைச்சு மற்றும் காணி அமைச்சிடம் விசாரணை செய்வதாகவும் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில விவசாய நிலங்கள் தொல்பொருள் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளமையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

வடமாகாண மக்களின் வீட்டுப் பிரச்சினை தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், வடமாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் உள்ள மக்களுக்கு வீடுகளை வழங்குவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் பல்வேறு கட்டங்களில் உள்ளதாகவும், அதற்கு மேலும் சுமார் மூவாயிரம் மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

வடக்கு மக்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

விரைவில் தமிழர் தாயக காணி பிரச்சினைக்குத் தீர்வு - மாகாணமட்டத்தில் நியமிக்கப்படவுள்ள குழு! | Northern Province Land Issue Ranil Fuel Crisis

இதன்போது கருத்துத் தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, நாடளாவிய ரீதியில் தற்போது பல வீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், வடக்கு மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு விரைவான தீர்வுகளை வழங்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நகர அபிவிருத்தி வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், றிசாத் பதயுதீன், சார்ள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜ், அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 

மாகாணத்தில் காணி, வீடு, சுகாதாரம், நீர்ப்பாசனம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு வழங்கப்படக்கூடிய தீர்வுகள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக சிறிலங்கா அதிபரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடமாகாணத்தின் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் இந்த அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றதுடன், அந்த மாவட்டங்களின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |