Home » » சட்டவிரோத ஆர்ப்பாட்ட பேரணி என தெரிவித்து 83 பேர் கைது

சட்டவிரோத ஆர்ப்பாட்ட பேரணி என தெரிவித்து 83 பேர் கைது

 


நேற்று பிற்பகல் மாலை லிப்டன் சுற்றுவட்டத்தில் சோசலிச வாலிபர் சங்கத்தின் தலைமையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதாக தெரிவித்த பொலிஸார், குறித்த ஆர்ப்பாட்டத்தை கலைத்த போது, ​​தொடர்ந்தும் சட்டவிரோதமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக குறித்த 83 பேரை பொலிஸ் காவலில் எடுத்துள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

லிப்டன் சுற்று வட்டத்திலிருந்து டீன்ஸ் வீதியை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாகச் செல்லத் தொடங்கியவுடன், அது 1865 ஆம் ஆண்டு பொலிஸ் கட்டளைச் சட்டம் இலக்கம் 16 மற்றும் இலங்கை தண்டனைக் கோவைச் சட்டத்தின் விதிகளின் கீழ் சட்டவிரோதமானது எனவும் கலைந்து செல்லுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் ஒலிபெருக்கி மூலம் பொலிசார் அறிவித்தனர்.

போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் முன்னேறிச் சென்ற போது அவர்களை கலைந்து செல்லும்படி பொலிசார் மீண்டும் நடவடிக்கை எடுத்தனர், அதையும் பொருட்படுத்தாமல் டீன்ஸ் வீதி வழியாக போராட்டத்தை தொடர்ந்ததால், தற்போதுள்ள சட்டத்திற்கு அமைய, அது சட்டவிரோத போராட்டம் என்பதால் மீண்டும் போராட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி தெரிவித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பல எச்சரிக்கைகளையும் மீறி குறித்த ஆர்ப்பாட்ட பேரணி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் மீது இது தடவைகள் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகங்களை மேற்கொண்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ஆர்ப்பாட்ட பேரணி, ஒரு சட்டவிரோத ஆர்ப்பாட்டம் என்பதாலும், வீதியில் பயணிக்கும் நபர்கள் மற்றும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுவதாலும், தனியார் மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படும் அபாயம் மற்றும் அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் நுழைய முயற்சித்தால் ஏற்படும் அபாயங்கள் ஆகியவற்றை கருத்திற் கொண்டு, பொலிஸ் கட்டளைச் சட்டம் மற்றும் இலங்கை தண்டனைக் கோவைச் சட்டங்களின் பிரகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி தேவையான பலத்தைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தை கலைக்க நடவடிக்கை எடுத்ததாகவும் பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, சட்டத்தை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 77 ஆண்களும், 04 பெண்களும், 2 பௌத்த பிக்குகளும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் சோசலிச வாலிபர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகரவும் உள்ளடங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் நேரடி மேற்பார்வையில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தமது கருத்துக் கூறும் அடிப்படை உரிமை மீறப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், மற்றும் சிவில் அமைப்புகள் இக்கைது நடவடிக்கை எதிராக குரல் கொடுத்து வருவதோடு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் இதற்கு கண்டனம் வெளியிட்டுள்ளது

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |