Advertisement

Responsive Advertisement

அரசாங்கத்தை வன்மையாக கண்டித்தார் கரு ஜயசூரிய !


 அரசாங்கத்தின் நாட்டில் நிலவும் நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் ஏனைய அரசியல் மற்றும் சிவில் சமூக குழுக்களுடன் ஒருமித்த கருத்தை எட்டுவது இன்றியமையாதது என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.


இவ்வாறான நிலையில் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்ட அரசியல் மற்றும் சமூகக் குழுக்களை நசுக்கும் அரசாங்கத்தின் முயற்சிகள் அத்தகைய ஒருமித்த கருத்துக்கான கதவுகளை மூடிவிடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக நாடு எதிர்நோக்கும் பாரிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும் புரிந்துணர்வோடு அதனைக் கையாள்வது மிகவும் அவசியம் என்றும் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் கடந்த 18 ஆம் திகதி நடத்திய அமைதியான போராட்டம் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலானது அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மக்களின் அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதல் என விமர்சித்துள்ளார்.

மக்களின் பேச்சு உரிமை, அமைதியான முறையில் ஒன்று கூடும் சுதந்திரம் மற்றும் போராட்டத்தின் மீதான இத்தகைய தாக்குதலை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கும் பாரிய நெருக்கடியை சரியாக இனங்கண்டு அதற்கான கூட்டு மற்றும் பயனுள்ள தீர்வொன்றை வழங்குவதற்கு பொறுப்புடன் செயற்படுமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் அவர் கேட்டுக்கொண்டார்.

Post a Comment

0 Comments