02-08-2022.
கிழக்கு மாகாண கல்வி வலயங்களுக்கு இடையிலான 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடம் மாற்றத்துக்கான விண்ணப்பம், எதிர்வரும் 1ஆம் திகதி வரை கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி என்.பிள்ளைநாயகம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள சகல கல்வி பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வலயத்தில் இருந்து இன்னும் ஒரு வலயத்துக்கு தமது விருப்பத்தின் பெயரில் இடம்மாற்றம் பெற விரும்புகின்ற ஆசிரியர்கள் மற்றும் தமது வலயத்துக்கென வலய இடமாற்ற அதிகாரியால் தீர்மானிக்கப்படுகின்ற சேவை காலத்துக்கு மேலதிகமாக கடமை புரிகின்ற ஆசிரியர்கள் மற்றும் முதல் நியமன வலயத்தில் நியமன கடிதத்தின் படி கட்டாய சேவை காலத்தை பூர்த்தி செய்த ஆசிரியர்களிடமும், ஒரு வலயத்தில் 05 வருட கால சேவையை பூர்த்தி செய்த ஆசிரியர்களிடமிருந்தும் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்ற கொள்கைக்கு அமைய, தத்தமது வலயத்திலுள்ள சகல ஆசிரியர் மற்றும் அதிபர்களுக்கு இது தொடர்பாக அறிவித்து அதற்கமைய ஆசிரியர்களால் சமர்ப்பிக்கப்படும் அனைத்து இடமாற்ற விண்ணப்பங்களையும் அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
வலயங்களுக்கிடையிலான ஆசிரியர் இடமாற்றத்துக்கு ஏற்கெனவே கடந்த ஜூலை மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் ஆசிரியர் இடமாற்றம் பெறுகின்ற ஆசிரியர்களின் விவரங்களை மாகாண இடமாற்ற சபைக்கு சமர்ப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments: