Home » » அதிபர் ஆசிரியர்கள் எரிபொருள் பெற பொறிமுறையை உருவாக்குங்கள் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்

அதிபர் ஆசிரியர்கள் எரிபொருள் பெற பொறிமுறையை உருவாக்குங்கள் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்

 


மாவட்ட செயலர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்களின் வாகனங்களுக்கான எரிபொருளை வழங்குவதற்கான ஒரு பொறிமுறையை வகுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பில் சங்கத்தால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

நீண்டகாலமாக பாடசாலைகள் பூட்டப்பட்டு மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டமை நீங்கள் அறிந்ததே. கொரோனா நோய் ஒருபுறம் பொருளாதார, போக்குவரத்து நெருக்கடி இன்னொரு புறம் எரிபொருள் தட்டுப்பாடு பூதாகாரம். இவை எல்லாமே இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைக் குழந்தைகளையும் வெகுவாகப் பாதித்துள்ளது.

இத்தகைய நிலமைகளைச் சீர்செய்ய முடியாமல் இல்லை. பல வழிமுறைகள் இருந்தும் அவற்றை நாம் தட்டிக்கழித்தே வருகின்றோம்.

இப்போதுள்ள மிக முக்கியமான பிரச்சனை எரிபொருள் பிரச்சனை. இதனால் பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்துமே செயலிழந்த நிலையில் உள்ளன.

விசேடமாக ஆசிரியர்களின் போக்குவரத்து மார்க்கங்கள் முற்றாக ஸ்தம்பித்துள்ளன. மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகளைச் செய்வதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. 

இந்த வழிமுறையை மத்திய கல்வி அமைச்சிடம் நாம் முன்வைத்து அதனை நடைமுறைப் படுத்துவதாக கல்வி அமைச்சர் உறுதிப்படுத்தியதன் அடிப்படையில் இன்று அந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இதே போன்று ஆசிரியர்களின் போக்கு வரத்திற்கும் வழியைக் கண்டறிய வேண்டும். இன்று சகல மாகாணங்களிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மாவட்டச் செயலாளர்களின் கண்காணிப்பில் உள்ளன. 

ஆகையால் மாவட்டச் செயலாளர்கள் உங்களின் மாவட்டத்தில் உள்ள பாடசாலை அதிபர், ஆசிரியர்களின் வாகனங்களுக்கான எரிபொருளை வழங்குவதற்கான ஒரு பொறிமுறையை வகுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் முன்மாதிரியாக அதிபர், ஆசிரியர்களுக்கு விசேட எரிபொருள் நிரப்பு நிலையத்தை ஒதுக்கீடு செய்து நடைமுறைப்படுத்தியுள்ளமை பாராட்டுக்குரியது.

ஆகையால் சகல மாவட்ட அரசாங்க அதிபர்களும் தயவு செய்து மாணவர்களின் நலன் கருதி இந்த ஒழுங்கினை மேற்கொள்ளுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |