ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிக்க பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக அதன் தவிசாளர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று இடம்பெற்றது, நாளைய தினம் இதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும்.
சஜித்திற்கு கிடைத்துள்ள வாய்ப்பு
இதுவரை ஜனாதிபதி தேர்தலில் தானும் போட்டியிடுவதாக அறிவித்து வந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இறுதி நேரத்தில் தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார்.
இதன்படி, இன்றைய வேட்பு மனுத் தாக்கலின் போது, டலஸ் அழகப்பெருமவின் பெயரை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்தார். டலஸ் அழகப்பெருமவுக்கு அதிரவளிப்பதாகவும் தனது டுவிட்டர் பதிவில் அறிவித்திருந்தார்.
டலஸ் அழகப்பெரும ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் சஜித் பிரேமதாச பிரதமராக நியமிக்கப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
உடன்படிக்கையின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்படும் எனவும் மத்தும பண்டார தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக பேராசிரியர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாளை நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிதறும் பொதுஜன பெரமுனவின் வாக்குகள்
எவ்வாறாயினும், இலங்கை அரசியல் தற்போது கடும் நெருக்கடியான நிலையில் பயணித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், தலைமைத்துவத்திற்கான போட்டி அதிகரித்திருப்பது மீண்டும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்துவதாக மாறியிருக்கிறது.
குறிப்பாக, பதில் ஜனாதிபதியாக இருக்கும் ரணிலை மகிந்தவின் பொதுஜன பெரமுன கட்சி ஆதரிக்கும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. எனினும் அந்தக் கட்சிக்குள்ளேயே தற்போது டலஸ் தேர்தலில் களமிறங்கியிருக்கிறார். ஆக, பொதுஜன பெரமுனவின் வாக்குகளும் சிதறும் அளவிற்கு அக்கட்சியின் நிலைப்பாடு மாறியிருக்கிறது.
ராஜபக்சக்களின் அரசியல் இருப்பு கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில் அவர்கள் உருவாக்கிய கட்சியும் இரண்டு துண்டுகளாக உடைந்திருப்பதாக தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 comments: