பதில் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு இன்று (15) விசேட உரையாற்றினார்.
அடுத்த வாரத்தில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அதற்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
குறுகிய காலத்திற்கு தாம் பதில் ஜனாதிபதியாக பதவி வகிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை முழுமையாக அமுல்படுத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை புதிய ஜனாதிபதியின் பொருட்டு தாம் முன்னெடுக்கவுள்ளதாகவும் பதில் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நாட்டில் சட்டம் மற்றும் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அறவழிப்போராட்டங்களை முன்னெடுக்க மக்களுக்கு உரிமை உள்ளது.
இருந்தாலும், புதிய ஜனாதிபதி தெரிவின் போது சிலர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுக்க முனைவதாகவும் இதனால் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முழுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பாசிசவாத முறையில் சிலர் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட வாய்ப்பிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இரண்டு துப்பாக்கிகளும் குண்டுகளும் காணாமற்போயுள்ளதை சுட்டிக்காட்டினார்.
பாதுகாப்பு தரப்பினர் 24 பேர் காயமடைந்திருப்பதை நினைவுகூர்ந்த அவர், உண்மையான அறவழிப்போராட்டக்காரர்கள் அவ்வாறான வன்முறை செயற்பாடுகளில் ஈடுபட மாட்டார்கள் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கு சீர்குலையும் பட்சத்தில், அது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் இதனால் எரிபொருள், மின்சாரம், நீர் விநியோகம், உணவுப் பொருட்கள் விநியோகம் ஆகியவற்றுக்கு தடை ஏற்படக்கூடும் எனும் அபாய நிலையை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
பதில் ஜனாதிபதியாக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இரண்டு தீர்மானங்களை எடுத்துள்ளதாகக் கூறிய அவர், அதிமேதகு என ஜனாதிபதியை சுட்டி அழைக்கும் சொற்பதத்தை இன்றிலிருந்து உத்தியோகபூர்வமாக இரத்து செய்வதாகவும் ஜனாதிபதிக்கென்று இருக்கும் கொடியை நீக்குவதாகவும் குறிப்பிட்டார்.
தேசத்திற்கு ஒரே ஒரு கொடி மாத்திரமே இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்திக் கூறினார்.
முழு நாடும் புதிய பயணத்தை மேற்கொள்வதற்கான பின்புலம் உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய பதில் ஜனாதிபதி, ஊழலற்ற அமைதியான, வளமான சமூகம் ஒன்றை உருவாக்குவதற்கு தேவையான சந்தர்ப்பம் மிக விரிவாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்
0 Comments