அரசதலைவர் கோட்டாபய ராஜபக்சவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நாளை 13 ஆம் திகதி பதவி விலகாவிட்டால் நாடு பூராகவும் நிர்வாக முடக்கத்தில் ஈடுபடுவோம் என்று ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க எச்சரித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அரசதலைவர் கோட்டபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பதவி வகிப்பதற்கு எவ்வித தார்மீக உரிமையும் அவர்களுக்கு கிடையாது எனவும் சுட்டிக்காட்டினார்.
நிர்வாக முடக்கல்
இலங்கை அரசியல் வரலாற்றில் எந்த அரச தலைவரையும் நாட்டு மக்கள் இந்தளவிற்கு வெறுக்கவில்லை. அரசதலைவர் கோட்டாபய ராஜபக்சவை மக்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
நாட்டு மக்கள் ஒன்றினைந்து பதவி விலகுமாறு வலியுறுத்தும் போது அரசதலைவர் பதவி விலகலுக்காக சுபவேளை பார்த்துக்கொண்டிருக்கிறார். அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை நிச்சயம் பதவி விலக வேண்டும்.
பதவி விலகாவிடின் வியாழக்கிழமை முதல் நாடு முதல் பாரியளவில் நிர்வாக முடக்கல் (ஹர்த்தால்) நடவடிக்கையில் ஈடுபடுவோம்.எனவும் தெரிவித்தார்.
ரணிலின் சூழ்ச்சி
கோட்டபாய பதவி விலகியவுடன், ரணில் விக்ரமசிங்க பதில் அரச தலைவராவதற்காக முன்னெடுக்கும் சூழ்ச்சிகளை கைவிட வேண்டும்.
ரணிலுக்கு மக்களாணை கிடையாது. மக்களின் அபிலாசைக்கு மதிப்பளித்து பதவி விலக வேண்டும். அரசதலைவர், பிரதமர் ஆகியோர் பதவி விலகாமல் அரசியல் சூழ்ச்சியை முன்னெடுத்தால் மேலும் பாரதூரமான விளைவுகளை இருவரும் எதிர்கொள்ள நேரிடும்.
கோட்டாபய பதவி விலகலை உத்தியோகபூர்வமாக அறிவித்து, அதற்கான கடிதத்தை சபாநாயகருக்கு சமர்ப்பித்து சபாநாயகர் அதனை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தும் வரை அவரின் பதவி விலகல் மீது நம்பிக்கை கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments: