எதிர்பாராத திருப்பமாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தனது குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேறும் வரை இராஜினாமா செய்யப் போவதில்லை என்று சூசகமாகத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரங்களின்படி, எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, ஆனால் இதுவரை எந்தக் கட்சியும் இந்த ஆலோசனையை ஏற்கத் தயாராக இல்லை என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மூன்று நாட்களுக்கு முன்னர் சபாநாயகரிடம் பேசிய ஜனாதிபதி, புதன்கிழமை பதவி விலகுவதாக அறிவித்தார். இருப்பினும், கடந்த 40 மணி நேரத்தில், அவர் புதன்கிழமை இராஜினாமா செய்வது குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை.
நாட்டை விட்டு வெளியேற பாதுகாப்பான வழியை விரும்பும் கோட்டாபய
கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்புவதற்கு முன்பு தானும் தனது குடும்பத்தினரும் நாட்டை விட்டு வெளியேற பாதுகாப்பான வழியை விரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் சகோதரரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, விமான நிலையத்தின் சர்வதேச பிரமுகர் புறப்படும் இடத்தில் குடிவரவு திணைக்களம் மற்றும் விமான நிலைய ஊழியர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
ராஜபக்சக்கள் வெளியேறுவதைத் தடுக்க silk route முக்கிய பிரமுகர்களுக்கான வழித்தடத்தில் உள்ள அனைத்து ஊழியர்களும் சேவைகளை நிறுத்தியுள்ளனர். ஜனாதிபதி நாளை பதவி விலகாவிட்டால் கொழும்பில் நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறிய ஜனாதிபதி
நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்ற அரசாங்கம் தவறியதைக் கண்டித்து பதவி விலக கோரி ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பொலிஸ் தடுப்புகளை உடைத்து ஜனாதிபதியின் வளாகத்தை முற்றுகையிட்டனர்.
இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சனிக்கிழமை கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments: